நான் முறைதவறிப் பிறந்தவளாக இருக்கலாம், அதனால் உங்களுக்கு என்ன?!
By RKV | Published On : 08th March 2018 05:45 PM | Last Updated : 08th March 2018 05:45 PM | அ+அ அ- |

பாலிவுட் நடிகை நீனா குப்தா, 80 களில் மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்தவரான கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸுடன் காதலில் இருந்தார். இருவரும் இணைந்து வாழ்ந்ததற்கு சாட்சியாக நீனாவுக்கு மசாபா என்றொரு மகள் இருக்கிறார். தற்போது பிரபலமான ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் மசாபா துபையில் வசிக்கிறார். முறையான திருமண உறவின்றி பிறந்த குழந்தை என்பதால் தனது 10 வயது முதலே சட்டவிரோதமான குழந்தை என்றும் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றும் மசாபாவைப் பலர் காயப்படுத்துவது வழக்கம். அதுமட்டுமல்ல, இணையத்தில் பொது விஷயங்கள் குறித்து மசாபா ஏதேனும் கருத்துச் சொல்லும் போதும் அவரை அதே விதமாகக் குறிப்பிட்டு அவமதிக்கும் வழக்கம் சிலருக்கு உண்டு. அவர்களுக்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாகத் சமீபத்தில் நிகழ்ந்த தனது ஃபேமிலி ரீ யூனியன் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு தன்னை அவமதிக்கும் விதத்தில் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்திருக்கிறார் மசாபா.
நேற்று துபையில் தன் தந்தை விவியன் ரிச்சர்ட்ஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவரைச் சந்தித்திருக்கிறார்கள் மசாபாவும் அவரது அம்மா நீனா குப்தாவும். நீனா குப்தா, விவியன் மூலம் ஒரு மகளுக்குத் தாயான பின்னர் கணக்குத் தணிக்கையாளரான விவேக் மெஹ்ராவை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். விவியன் ரிச்சர்ட்ஸும் மிரியம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் மசாபாவுக்காக மட்டுமல்லாமல் தான் விவியன் மீது கொண்டிருந்த கரை கடந்த காதலின் பேரிலும் இன்றளவும் நீனா, விவியனுடன் நட்புடனே இருக்கிறார். அதை இந்தச் சமுதாயத்தால் புரிந்து கொள்ள இயலாது என்பதே மசாபாவின் தீர்மானம். அதை வெளிப்படுத்தும் விதமாக மசாபா இன்று தனது ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.
‘சமீபத்தில் பட்டாசுத் தடை குறித்த உச்சநீதிமன்றச் செய்தியை எனது ட்விட்டர் கணக்கில் நான் ரி ட்விட் செய்திருந்தேன். நாட்டிலுள்ள பிற பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பதைப் போலத்தான் இதற்கும் குரல் கொடுத்திருந்தேன். எனது கருத்தை ஏற்காதவர்கள் உடனே வழக்கம் போல என்னை மிக மோசமாக வார்த்தைகளால் தூஷிக்கத் தொடங்கி விட்டனர்.
என்னை சட்ட விரோதமாகப் பிறந்தவள் என்றோ முறைகேடான வகையில் பிறந்த மேற்கிந்தியப் பெண் என்றோ அழைத்தீர்கள் என்றால், இனிமேல் நான் பெருமிதமாகத் தான் உணர்வேன். ஏனெனில், நான் சட்டவிரோதமானவள் தான். இந்த உலகின் பார்வையில் இரண்டு சட்டப் பூர்வமானவர்கள் இணைந்து உருவாக்கிய சட்ட விரோதமான பெண். சுயமாகவும், தொழில் ரீதியாகவும் எனது செயல்கள் எனக்குத் திருப்தி அளிக்கின்றன. ஒரு மனிதனின் சட்டப்பூர்வமான தன்மையை நிர்ணயிக்க வேண்டியவை அவனது பிறப்பல்ல, அவன் செய்யும் தொழிலே. அந்த வகையில் பார்த்தீர்களானால் எனது வேலையில் நான் 100 % திருப்திகரமான உழைப்பை உணர்கிறேன். எனது வேலையிலும், இந்த சமூக முன்னேற்றத்துக்காக நான் செய்து கொண்டிருக்கும் சமூகப் பங்களிப்பிலும் எவராலும் விரல் உயர்த்தி ஒரு சிறு குறை கூட காண இயலாது. சிறுவயதில் இருந்தே பத்திரிகைகளில் என்னைப் பற்றி குறிப்பிட பிறர் உபயோகிக்கும் மேற்கூறிய இரண்டு வார்த்தைகளைக் கண்டு, கண்டு... இப்பொதெல்லாம் அந்த வார்த்தைகள் எனக்கு எதிர்ப்பு சக்தியை ஊட்டக் கூடியவையாக மாறி விட்டன. அதனால், இனியும் நீங்கள் என்னை அப்படியே குறிப்பிட விரும்பினாலும் எனக்கு சந்தோஷமே! ஆனால், நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொண்டாக விஷயம் ஒன்றுண்டு.
உங்களாலும், நீங்கள் சார்ந்திருக்கும் இந்தச் சமூகத்தாலும் புரிந்து கொள்ள முடியாத, கையாள முடியாத ஒரு விஷயத்தை சட்டவிரோதமென்றும், முறை தவறல் என்றும் கூறி தப்பிக்க நினைக்கிறீர்கள். ஆனால், ஒரு பெருமைக்குரிய இந்தோ, கரீபியன் பெண்ணான என்னை அந்த விமர்சனங்களால் ஒன்றும் செய்ய முடியாது. என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். என்னால் அந்த விமர்சனங்களுக்காக சுருங்கிப் பரிதவிக்க முடியவில்லை. உங்களுக்குப் புரியாத, நீங்கள் புரிந்து கொள்ள இயலாத ஒன்றை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்ற பெருமிதமே அதற்கு காரணம்.’
- என மசாபா தனது ட்விட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.