தாமாக முன்வந்து முடி துறக்கும் ஜப்பானியப் பேரரசர் அகிஹிட்டோ!

1817 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானிய மன்னர்கள் எவரும் இதுவரை தாமாக முன்வந்து முடிதுறக்க ஒப்புக் கொண்டதில்லை என்பதால் இந்த நூற்றாண்டின் மக்களிடையே அது மிகவும் அதிசயமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
தாமாக முன்வந்து முடி துறக்கும் ஜப்பானியப் பேரரசர் அகிஹிட்டோ!

உலகெங்கும் மன்னராட்சி வழக்கொழிந்து போய் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்த நாட்களிலும் இன்னும் உலகநாடுகளில் சில மன்னராட்சியின் மகத்துவத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவதை விரும்பியே ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அதில் பிரதான இடம் வகிப்பது இங்கிலாந்து. அங்கே பிரதமர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இங்கிலாந்து அரச குடும்பத்தாருக்கும் அளப்பரிய மரியாதை அளிக்கப்பட்டு வருவது உலகறிந்த உண்மை. இங்கிலாந்து தவிர கனடாவிலும் இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கு அதிகாரம் உண்டு என்கிறது அந்நாட்டு அரசுமுறை நியதிகள். வளைகுடா நாடுகளிலும் ஃபக்ரைன் உள்ளிட்ட சில நாடுகளில் மன்னராட்சி இன்னும் அற்றுப் போகவில்லை என்பது நிஜம். அவர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் இல்லையென்ற போதும் பிறவியிலேயே கிடைத்து விடக்கூடிய குலப்பெருமைகளை அவர்கள் இப்போதும் கட்டிக் காத்து வருவதோடு அவற்றுக்குண்டான வசதிகளையும், மரியாதைகளையும் அனுபவிக்கத் தவறுவதில்லை. உலகின் மன்னராட்சி முறையை வழுவாது பின்பற்றி வரும் மற்றொரு நாடு ஜப்பான். இங்கும் ஜப்பானியப் பேரரசருக்கு அரசியம் அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் நாட்டு மக்களிடையே மன்னர் குறித்த மிகப்பெரிய ஆராதனை உண்டு. 

இதுவரை ஜப்பானியப் பேரரசராக மகுடம் சூடி கோலோச்சி வந்தவர் மன்னர் அகிஹிட்டோ. இவருக்குத் தற்போது வயது 85. வயோதிகத்தின் காரணமாக தன்னால் இனி ஜப்பான் மன்னராக சிறந்த முறையில் செயலாற்ற முடியாது என்று கருதிய அகிஹிட்டோ முறைப்படி டோக்கியோவில் தனது முடிதுறப்பு விழாவை இன்று நிறைவேற்றவிருக்கிறாராம். இன்று மாலை சரியாக 5 மணியளவில் மன்னரின் முடிதுறப்பு விழா நிகழவிருப்பதாகத் தகவல். ஜப்பானிய அரச குடும்பத்தைப் பொருத்தவரை இதுவரை மன்னர்கள் யாரும் தாமாக முன்வந்து முடி துறந்ததில்லை.

மன்னர்கள் இறந்தால் மட்டுமே அடுத்ததாக பட்டத்து இளவரசர்கள் அரசர்களாகப் பட்டமேற்பது வழக்கம். கடந்த 200 ஆண்டுகளாக இது தான் ஜப்பானிய அரச குடும்பத்தினரின் வழக்கமாகவும் இருந்து வந்தது. ஆனால், முதன்முறையாக ஒரு மன்னர் தன்னுடைய பதவிக்காலத்தை தானே முடித்துக் கொண்டு முடி துறப்பதாக அறிவித்திருப்பது இதுவே முதன்முறை என்கிறார்கள் ஜப்பானில். ஜப்பானிய பேரரசரின் முடிதுறப்பு விழா அவர்களது புராண கால சம்பிரதாயங்களின் அடிப்படையில் பல்வேறுவிதமான சடங்குகளை அடிப்படையாகக் கொண்டது. அந்த முறைகளில் எதுவும் வழுவாது தற்போதைய மன்னரின் முடிதுறப்பு விழா அனுசரிக்கப்படவிருக்கிறது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஜப்பானிய அரண்மனையில் மன்னரின் அரசவையாக இயங்கி வந்த மட்சு நோ ம எனும் அறையில் நடைபெறவிருப்பதாக அரச குடும்பத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அரசருடன் ஜப்பானிய அரசி மிகிகோவும் பங்கேற்பார். அரசரும், அரசியும் தங்களது 330 உதவியாளர்களுடன் அரசவையில் பிரசன்னமளித்து பேரரசராக அகிஹிட்டோ தனது இறுது உரையை வழங்கி ஜப்பானிய பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களின் படி முடி துறப்பதுடன் இந்நிகழ்வு நிறைவடையும். மாலையே முடிதுறப்பு நிகழ்வு முடிவடைந்து விட்டாலும் கூட சூரியகாந்தி மகுடம் (Chrysanthemum throne) மன்னர் அகிஹிட்டோவின் தலையை அன்று நள்ளிரவு வரை அலங்கரிக்குமாம். அதாவது அன்றைய இரவு 12 மணி வரை அவரே அரசர் என்பதான பொருளில். பின் மீண்டும் மறுநாள் புதன் அன்று காலை பட்டத்து இளவரசரான நருஹிட்டோ மன்னராக முடிசூட்டப்பட்டு அரச குடும்பத்தின் சொத்துக்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்படும். அது முதல் ஜப்பானின் அதிகாரப்பூர்வ அடுத்த அரசராக நருஹிட்டோ செயல்படத் துவங்குவார் என்கின்றன ஜப்பானிய ஊடகங்கள். 

ஜப்பானிய அரச குடும்ப நடைமுறைகளைப் பொருத்த வரை ஒரு மன்னர் முடியேற்கும் போது அவர்களுக்கு புது யுகம் துவங்கும். அதன்படி மன்னர் அகிஹிட்டோ 1989 ல் மன்னராக பதவியேற்கையில் துவங்கிய ஹெய்சே யுகம் முடிவுற்று அடுத்த மன்னரான நருஹிட்டோவுக்கான புது யுகம் ரெய்வா நாளை முதல் துவங்கவிருக்கிறது. ஜப்பானிய மன்னருக்கு அரசியல் அதிகாரம் இல்லாவிட்டாலும் இன்றும் கூட தேசத்தின் கெளரவமிக்க அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது மன்னர் பதவி. அத்துடன் 1817 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானிய மன்னர்கள் எவரும் இதுவரை தாமாக முன்வந்து முடிதுறக்க ஒப்புக் கொண்டதில்லை என்பதால் இந்த நூற்றாண்டின் மக்களிடையே அது மிகவும் அதிசயமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவின் முடிதுறப்புக்கான முக்கியக் காரணம் அவரது வயோதிகம். 2016 ஆம் ஆண்டு வாக்கிலேயே தனது வயோதிகம் குறித்த கவலைகளால் பீடிக்கப்பட்டிருந்த ஜப்பான் மன்னர் தற்போது அதை வெளிப்படையாக அறிவித்து மன்னருக்குண்டான சம்பிரதாயக் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு தனது வயது இடம்தராத காரணத்தால் தாம் முடிதுறப்பதாக அறிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com