Enable Javscript for better performance
ஐஐடி மாணவரின் தற்கொலைக் குறிப்பு- Dinamani

சுடச்சுட

  

  ஐஐடி மாணவரின் தற்கொலைக் குறிப்பு...

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 04th February 2019 12:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  iit_death

   

  மனம் திடமாக இருந்தால் இவ்வுலகில் எதையும் சாதிக்க முடியும். அதே சமயம் மனம் பலவீனமாக இருந்தாலோ நமது காலடியில் வைரக்கற்கள் நெருடுவதைக் கூட நம்மால் உணரமுடியாமலாகி விடும். கண்களுக்கு வைரங்கள் புலனானாலும் அவற்றை கையில் எடுத்து பாதுகாக்க வழியின்றி திகைத்து நம்மை நாமே மன உளைச்சலுக்கும், பீதிக்கும் காவு கொடுத்துக் கொள்வோம். பெரும்பாலான தற்கொலைகளுக்குக் காரணங்களாக அமைவது மனித வெற்றிகளோ அல்லது தோல்விகளோ அல்ல. அந்த வெற்றிகளையும் தோல்விகளையும் சரியான அளவில் அணுகத் தெரியாத மனித மனங்களின் பலவீனங்களே!

  சமீபத்திய ஹைதராபாத் ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம் மேற்படி உண்மையை மீண்டும் நிரூபித்துள்ளது.

  ஹைதராபாத் ஐஐடியின் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் நான்காம் ஆண்டு மாணவரான எம் அனிருத்யாவின் அகால மரணம் முதலில் விபத்து என்றே கருதப்பட்டிருக்கிறது. காவல்துறை அறிக்கை அப்படித்தான் கூறுகிறது. ஆனால், அதன் பின்னான விசாரணையில் தெரிய வந்தது... மாணவர் அனிருத்யா கடந்த பல மாதங்களாகவே தொடர்ந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார். எதிர்கால வாழ்க்கை குறித்த அவரது அனுமானங்கள் அவரைத் தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இந்த வாழ்க்கையில் எவ்வித சூழ்ச்சிகளும் இல்லை. நான் என் வாழ்வை இத்துடன் முடித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று தனது நெருங்கிய நண்பர்களுக்கு தற்கொலைக்கு முன் செய்தி பகிர்ந்திருக்கிறார் அனிருத்யா.

  கடந்த வாரம் முதலே தனது தற்கொலைக்கான திட்டமிடலைத் தொடங்கி விட்ட அனிருத்யா நேற்று அதை செயல்படுத்தியிருக்கிறார். தான் தங்கிப் படித்து வந்த ஹைதராபாத் ஐஐடி ஹாஸ்டலின் எட்டாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். காரணம் விடுபட இயலாத மன அழுத்தம். இந்த மன அழுத்தம் எதன் காரணமாக வந்திருக்கக் கூடும் என்று விசாரணை நடந்து வருகிறது.

  இந்தியாவில் இன்றும் ஐஐடியில் படிப்பதென்பது கெளரவ அடையாளங்களுள் ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. பெரும்பாலான பெற்றோர் தங்களது மகனோ, மகளோ ஐஐடி மாணவர்கள் என்பதை பெருமைக்குரிய பேறாகக் கருதுகின்றனர். ஆனால் அங்கு பயிலச் செல்லும் மாணவர்களுக்கு இயல்பாகவே நேரக்கூடிய பல்வேறு விதமான பிரச்னைகள் குறித்த தெளிவு பெற்றோர்களிடம் இருக்கிறதா என்றால் போதுமான அளவு இல்லை என்று தான் கூற வேண்டும்.

  எங்கும், எப்போதும் இருக்கிறது சாதி வேறுபாடு? அது ஐஐடிக்குள்ளும் உண்டு என்பதற்கு கடந்த கால உதாரணங்கள் பல உண்டு.

  அது மட்டுமல்ல, பாடங்கள் கடினத்தன்மையுடன் இருந்தால் அதை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெறும் வரையிலான பொறுமையும், சகிப்புத் தன்மையும் இருந்தால் மட்டுமே இங்கு பயிலும் மாணவர்களால் சோபிக்க முடியும். பலரும் அப்படி வந்தவர்கள் தான். ஆனால், சில மாணவர்களுக்கு அந்த நெருக்கடியான சூழலைக் கையாளும் மனப்பக்குவம் இருப்பதில்லை. நம்மால் இங்கிருந்து பட்டம் பெற்று வெளியேறவே முடியாமலாகி விடப்போகிறதோ என்ற பயத்திலும் சஞ்சலத்திலுமே பெரும்பாலான மாணவர்கள் இப்படியான துயர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

  ஆனால் இப்படி பாதியில் வாழ்வை முடித்துக் கொள்ளும் எந்த மாணவ, மாணவியுமே தங்களை நம்பிப் படிக்க அனுப்பி வைத்த பெற்றோரை அந்த தற்கொலை தருணத்தில் ஒருமுறையேனும் எண்ணிப் பார்ப்பதே இல்லை. ஒரு மாணவனை ஐஐடிக்கு படிக்க அனுப்புவதென்பது அத்தனை எளிதான காரியமா என்ன? எத்தனையோ தடைகளையும், பரீட்சைகளையும் கடந்து தான் ஐஐடி வாசலுக்குள் நுழைந்திருப்பார்கள். அப்போது இருந்த மனோதிடம் பிறகெப்படி குறைகிறது? அல்லது குறைக்கப்படுகிறது? காரணம் கண்டுபிடிக்கப்பட்டால் ஒருவேளை இப்படிப்பட்ட அகால மரணங்களும், தற்கொலைகளும் தவிர்க்கப்படலாம்.

  நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள் மாணவர்களே! பயிர் முற்றிப் பருவத்திற்கு வர வேண்டிய தருணத்தில் இதுநாள் வரை நாம் கட்டிக் காத்தது பயிரை அல்ல வெறும் காற்றடைந்த பதரை என்று தெரிய வந்தால் ஒரு விவசாயி எப்படி உணர்வார்?  அப்படி ஒரு ஏமாற்ற உணர்வை அளிக்கிறது இத்தகைய மாணவத் தற்கொலைகள்.

  இனியேனும் இப்படியான தற்கொலைகளைத் தடுக்க ஐஐடி நிர்வாகங்கள் ஆவண செய்யுமா?
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai