நன்றாக சாப்பிட்டால் தொற்றுநோயில் இருந்து விடுபடலாம்: ஆராய்ச்சியில் தகவல்

தொற்றுநோய் காலத்தில் நன்றாக சாப்பிடுவது தொற்றில் இருந்து விடுபடுவதற்கு வழிவகுக்கும் என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தொற்றுநோய் காலத்தில் நன்றாக சாப்பிடுவது தொற்றில் இருந்து விடுபடுவதற்கு வழிவகுக்கும் என ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்றுநோய் காலத்தில் நம் உடல்நலத்தைப் பேண நன்றாக சாப்பிடுவது அவசியம் என்று ஆஸ்திரேலியாவின் பிளின்டர்ஸ் பல்கலைக்கழக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதிக இறைச்சி, பேக்கேஜிங் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

ஆராய்ச்சியாளர், பேராசிரியர் கயே மேத்தா இதுகுறித்து, 'வீட்டிலேயே காய்கறிகள் மற்றும் பழங்களை பயிரிட்டு இயற்கையான உணவுகளை சாப்பிடுவது மேலும் பலன் தரும். இதன்மூலமாக செலவும் மிச்சமாகும்.  ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தலாம். தோட்டக்கலை மனரீதியாக நல்ல பலன்களைத் தரும். கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது' என்றார். 

மேலும், முக்கியமாக ஆஸ்திரேலிய உணவு நிலையானது அல்ல என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, நாள்பட்ட நோய், காலநிலை மாற்றம் மற்றும் உணவு வர்த்தக நடைமுறைகள் ஆகியவை காரணமாக எளிதாக தொற்றுநோய் வர வாய்ப்புள்ளது. எனவே, முக்கியமாக தொற்றுநோய் காலங்களில் சத்துமிக்க உணவுகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். உணவைத் தவிர்க்கக்கூடாது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக, உணவு உற்பத்திக்கும், பசுமை இல்ல வாயுக்களுக்கும் இடையிலான தொடர்பு, விளைபொருள்கள் மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகள்,  விவசாயிகளுக்கான லாபம், தற்போதைய பொது சுகாதார ஊட்டச்சத்து பிரச்னைகள், தொழில்துறை உணவு முறைகள் ஆகியவை தொடர்பாக ஆன்லைனில் நடத்தப்பட்ட ஆய்வில் 47 பேர் பங்கேற்றனர். 

இதில், மக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு உணவுகளைத் தேர்வு செய்வதும், நவீன காலகட்டத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையே அதிகம் எடுத்துக்கொள்வதும் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி மக்களுக்கு ஊட்டச்சத்து குறித்த கல்வியறிவு குறைந்துகொண்டே வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கையான பழங்கள், காய்கறிகள், குறைவாக இறைச்சி என உணவுமுறைகளை மேற்கொண்டால் மட்டுமே தொற்றுநோயில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com