தலைமுடி உதிர்வைத் தடுக்கும் இயற்கை வழிமுறைகள்!
By DIN | Published On : 02nd November 2020 01:47 PM | Last Updated : 02nd November 2020 03:37 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் பலரும் இன்று முடி உதிர்வு பிரச்னையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உணவு முறைகள் முதல் தலைமுடி பராமரிப்பில்லாமை வரை பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக தலைமுடியை பராமரிக்கும் முறை தெரியாமல்தான் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படுகிறது.
பொதுவாக உணவு முறைகளில் கறிவேப்பிலை, முருங்கைக்கீரை, பேரீச்சம்பழம் உள்ளிட்ட இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வதை தடுக்க முடியும். எனினும், முடி உதிர்தலைத் தவிர்க்க கீழ்க்குறிப்பிட்ட வழிகளை பயன்படுத்தலாம்.
► வெங்காயச்சாறு முடி உதிர்தலைத் தடுக்க பெரிதும் பயன்படுகிறது. வெங்காயச்சாறு கண்ணில் பட்டால் எரிச்சலை கொடுக்கும் என்பதால் சற்று பாதுகாப்பாக இதனை தலையில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.
► வெந்தயத்தை ஊறவைத்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து தலைமுடியின் வேர்க்காலில் படும்படி தடவி சிறிது நேரம் கழித்து கூந்தலை அலசவும். வெங்காயச்சாறு, வெந்தயம் இரண்டுமே குளிர்ச்சி என்பதால் அவரவர் உடல்வாகுக்கேற்ப பயன்படுத்தவும்.
► அதேபோன்று கற்றாழைச் சாறையும் தலையில் தடவி வர முடி உதிர்வது கட்டுப்பட்டு முடி பளபளப்பாக இருக்கும்.
► கறிவேப்பிலை, செம்பருத்தி இலை அல்லது பூ, கரிசலாங்கண்ணி கீரை, ஆவாரம் பூ, மருதாணி இலை இவற்றில் ஏதேனும் ஒன்றின் இலைகளை அரைத்து வாரத்திற்கு ஒருமுறையாவது தலையில் 'பேக்' போன்று பயன்படுத்திவர முடி உதிர்தல் தடுக்கப்பட்டு, முடி வளரும்.
► பொதுவாக எண்ணெய் தேய்த்து குளித்தால் முடி அதிகமாகக் கொட்டும் என பலர் அதைத் தவிர்த்து வருகின்றனர். ஆனால், வாரத்திற்கு ஒருமுறை எண்ணெயை மிதமாக சூடு செய்து, மசாஜ் செய்து குளித்துவர முடி பலம் பெறும் என்பதுதான் உண்மை. எண்ணெய்க்குளியலின்போது சிறிதளவு முடி உதிர்ந்தாலும் எண்ணெய் மசாஜ் தொடர்ந்து செய்துவந்தால் முடி செழிப்பாக வளரும்.
► முட்டையின் வெள்ளைக்கரு முடியின் வளர்ச்சிக்கும், முடி உதிர்தலைத் தடுப்பதற்கும் பெரிதும் உதவும். முட்டையின் வெள்ளைக்கரு திரவத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் சேர்த்து முடியின் வேர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலச வேண்டும்.