கோப்புப்படம்
கோப்புப்படம்

'பூங்காவில் நடப்பது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்'

பணியில் உள்ளவர்கள் தினமும் பூங்கா போன்ற பசுமையான இடங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 
Published on

பணியில் உள்ளவர்கள் தினமும் பூங்கா போன்ற பசுமையான இடங்களில் நடப்பது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 

காலத்தின் வேகத்திற்கேற்ப நம்முடைய வாழ்க்கையும் அதன்பின்னால் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு வேலை அவசியமானதால் பலரும் அதனை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். வேலையில் மூழ்கிக் கிடப்பதன் எதிரொலியாக பலரும் மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இந்த மன அழுத்தம் ஒருவரது வாழ்க்கையில் பல வகைகளில் வெளிப்படுகிறது. மன அழுத்தம் என்பது உலகளாவிய பொதுவான மன பிரச்னையாக இருக்கிறது. 

உடல் ஆரோக்கியத்தில் மன அழுத்தத்தின் தாக்கம் பணியில் உற்பத்தித் திறனை பாதிக்கும், பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். எனவே, மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். 

சுகுபா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷினிச்சிரோ சசஹாரா தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், பணியில் உள்ள மன அழுத்தம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு 'பப்ளிக் ஹெல்த்' என்ற பொது சுகாதார இதழில் வெளியிடப்பட்டது. 

இதில், மன அழுத்தத்தில் உள்ள ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகள், மன அழுத்தத்தைப் போக்க அவர்கள் கையாளும் முறைகள் குறித்து ஆராயப்பட்டது. 

வயதினருக்கேற்ப உயர்கல்வி, திருமணம், புகைபிடித்தல், உடற்பயிற்சி செய்யாதது என பல காரணிகள் மன அழுத்தத்திற்கு காரணமாக உள்ளன. ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையைப் பொருத்தும் காரணிகள் மாறுபடுகின்றன. 20 முதல் 60 வயதுக்குட்பட்ட 6,000 க்கும் மேற்பட்ட ஜப்பானியத் தொழிலாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். 

ஆய்வில் முடிவில், காடுகளில் குறிப்பாக பூங்கா உள்ளிட்ட பசுமையான இடங்களில் தினமும் நடந்துசெல்லும் பழக்கம் கொண்டவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதாக பேராசிரியர் சசஹாரா கூறுகிறார். 

இயற்கை அனைத்துக்கும் ஒரு எளிமையான உன்னத மருந்து. அந்தவகையில் மன பிரச்னைகளை சரிசெய்ய மக்கள் பலரும் இயற்கையை நாடுகின்றனர். பல்வேறு தரப்பட்ட பிரச்சனைகளுடன் கூடிய நான்கு குழுக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பசுமையான இடங்களுக்குச் செல்பவர்கள் குறைவான மன அழுத்தம் கொண்டிருப்பதாகவும், மன அழுத்தத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது பசுமையான இடங்களுக்குச் சென்று இயற்கையுடன் வாழ்வது மன நலத்துக்கு நல்லது என்று பரிந்துரைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. உடல்நலப் பிரச்னைகளைவிட மனநலப் பிரச்னைகளினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்பதால் உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com