உணவில் உப்பு அதிகம் சேர்ப்பது மூளைக்கு பாதிப்பா?
By DIN | Published On : 16th November 2021 04:03 PM | Last Updated : 16th November 2021 04:17 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
உணவில் அதிகம் உப்பு சேர்ப்பது மூளையின் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வொன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உணவின் சுவைக்கு மிக முக்கியமானது உப்பு(சோடியம் குளோரைடு-NaCl). பெரும்பாலாக அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது. எனினும், அதனை மிக அளவோடு பயன்படுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.
உடலில் சோடியம் அளவை சரியாக நிர்வகித்தால் உடலியல் பிரச்னைகள் வர வாய்ப்பு குறைவு. ஆனால், உணவில் சோடியம் அளவு அதிகரிக்கும்பட்சத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதனால் மாரடைப்பு, பக்கவாதம் என பல கோளாறுகள் ஏற்படும்.
உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உப்பு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவதுண்டு.
இந்நிலையில், எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவிற்கும் மூளையில் ரத்த ஓட்டத்திற்கும் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து ஜார்ஜியா ஆய்வாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | உடல் எடையைக் குறைக்கும் காளான்! இதர மருத்துவப் பயன்கள் என்னென்ன?
அப்போது உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு காரணமான மூளையின் ஹிப்போதாலமஸ் பகுதியை முழுவதுமாக கண்காணித்தனர்.
வழக்கமாகவே நியூரான்கள் தூண்டிவிடப்படும்போது அப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அந்தவகையில் உப்பு உள்ள உணவை உட்கொள்ளும்போது, மூளை அதை உணர்ந்து, உடலில் சோடியம் அளவை குறைக்க முயற்சிக்கிறது. உப்பின் அளவை சரியாகப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆண்டிடியூரெடிக் ஹார்மோனான வாசோபிரசின், நியூரான்களை செயல்படுத்துவதாலே இந்நிகழ்வு நடைபெறுகிறது.
ஆனால், ஹைபோதாலமஸில் உள்ள நியூரான்கள் செயல்படத் தொடங்கும்போது ரத்த ஓட்டம் குறைவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ரத்தம் ஓட்டம் குறைவதால் திசுக்களில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இது ஹைபோக்சியா எனப்படுகிறது.
அதாவது உப்பின் அளவு அதிகரிக்கும்போது ஹைபோதாலமஸில் உள்ள நியூரான்கள் தூண்டப்படுவதால் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு 50-60% காரணமாக உப்பு இருக்கிறது. அதாவது உப்பு அதிகரிப்பின் காரணமாகவே உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்பதும் உறுதி செய்யப்பட்டது.
நீங்கள் அதிகமாக உப்பு எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் மூளையில் உள்ள நியூரான்கள் தூண்டப்பட்டு திசுக்களில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனால் மூளையின் திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஹைப்போதாலமஸ் பகுதில் உள்ள நியூரான்களின் விளைவுகளாலே பக்கவாதம், மாரடைப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
மேலும் ஆய்வுகள் மூலமாக இந்த செயல்முறையை நன்கு புரிந்து கொண்டால் ஹைபோக்ஸியா எனும் மூளையின் திசுக்களில் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் வழிகளைக் கண்டறியலாம் அல்லது ரத்த அழுத்தம், மூளை பாதிப்புகளின் விளைவுகளைக் குறைக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதையும் படிக்க | உங்கள் குழந்தைகள் காய்கறிகள், பழங்கள் சாப்பிட மறுக்கின்றனரா?