முதுகு வலியால் அவதியா? செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

முதுகு வலியால் அவதியா? செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதன் காரணமாகவும் உடல் இயக்கம் குறைந்ததன் காரணமாகவும் இன்று முதுகுவலியால் அவதிப்படுவோர் பலர்.

உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதன் காரணமாகவும் உடல் இயக்கம் குறைந்ததன் காரணமாகவும் இன்று முதுகுவலியால் அவதிப்படுவோர் பலர். இன்றைய சூழ்நிலையில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை முதுகுவலி ஒரு பொதுவான பிரச்னையாக மாறிவிட்டது. 

அதிலும் இப்போது பெரும்பாலான அலுவலக ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலை. அலுவலக இருக்கைச் சூழல் இல்லாததாலும் கூடுதல் மணி நேர வேலையாலும் முதுகு வலி ஏற்படுவதாக ஐ.டி. ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். 

முதுகுவலியைத் தடுக்கவும் வேலையைச் சிறப்பாகச் செய்யவும் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? 

செய்ய வேண்டியவை

நாற்காலியில் முன்னோக்கி குனிந்து உட்காரும்போதும் பின்பக்கம் சாய்ந்து உட்காரும்போதும் இடுப்பு முதுகெலும்பு வளைந்து, இடுப்பு வட்டுகளில் அதிக அழுத்தம் கொடுக்கிறது. இதனால் முதுகு வலி ஏற்படுகிறது.

நாற்காலியில் இருந்தாலும் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். உட்காரும்போது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். 

உட்காரும்போது முதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்பட்டால் ஒரு டவல் அல்லது குஷன் வைத்துக்கொண்டு அமருங்கள். அதுபோல கால்களை தொங்கவிடக் கூடாது. இருக்கையின் உயரத்தை சரிசெய்ய முடியவில்லை எனில் காலுக்கு ஒரு பெஞ்சை பயன்படுத்தலாம். 

நீண்ட நேரம் தொடர்ந்து உட்காருவதாலும் முதுகு வலி ஏற்படும். ஏனெனில் உடல் இயக்கமின்றி இருக்கிறது. வழக்கமான உடல் அசைவுகள் இல்லாததால் உடல் தசைகள் சுருங்கி இறுக்கமடைகிறது. எனவே, ஒவ்வொரு 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை உடலை அசைத்துக்கொடுக்க வேண்டும். முடிந்தவரை எழுந்து நடக்க வேண்டும். ஓரிரு நிமிடங்கள் உடலை வளைத்து நெளித்து நீட்டவும். 

அதுபோல அலுவலக வேலையில் சிலர் தண்ணீர் குடிப்பதையே மறந்துவிடுவார்கள். உடலில் நீர்ச்சத்து எப்போதும் இருக்க வேண்டும். 

அலுவலத்தில் உட்கார்ந்து வேலை செய்வோர் கண்டிப்பாக தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

உடலை முன்னோக்கி கால்களைத் தொடுதல், பின்னோக்கி வளைத்தல் உள்ளிட்ட முதுகுப் பயிற்சிகளை தினமும் செய்துவர வேண்டும். 

செய்யக்கூடாதவை

வீட்டில் கணினியில் வேலை செய்வோர், கட்டிலில் அமர்ந்து வேலை செய்யக்கூடாது. இது கண்டிப்பாக முதுகுப் பிரச்னையை ஏற்படுத்தும்.

அதுபோல தரையில் அமர்ந்து வேலை செய்வதும் தவிர்த்துவிடலாம். ஏனெனில் உங்கள் முதுகு வளையும். 

சரியான நாற்காலியில் அமர்ந்து, சரியான உயரத்தில் மேசையில் கணினியை வைத்துப் பயன்படுத்த வேண்டும். 

குனிந்துகொண்டு வேலை செய்வதையோ, அதிகமான உயரத்தில் கணினியை வைத்து தோள்களை உயர்த்தி வேலை செய்வதையோ தவிர்க்க வேண்டும். 

நீண்ட நாள்களாக தாங்க முடியாத முதுகு வலி இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com