மதியம் சாப்பிட்டவுடன் தூக்கம் வந்துவிடுகிறதா? என்ன காரணம் தெரியுமா?

அலுவலகம் ஆனாலும் சரி, வீடானாலும் சரி, மதிய உணவு சாப்பிட்ட உடனே ஒருவித மந்த நிலை ஏற்படும். அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்.
மதியம் சாப்பிட்டவுடன் தூக்கம் வந்துவிடுகிறதா? என்ன காரணம் தெரியுமா?

அலுவலகம் ஆனாலும் சரி, வீடானாலும் சரி, மதிய உணவு சாப்பிட்ட உடனே ஒருவித மந்த நிலை ஏற்படும். அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். சிலர் ஆழ்ந்த தூக்கத்திற்கே சென்றுவிடுவர். 

அது ஏன் மதிய உணவு சாப்பிட்டவுடன் அப்படி ஒரு தூக்கம்/மந்த நிலை வருகிறது? என்ன காரணம்? இந்த தூக்கத்தை முடிந்தவரை தவிர்ப்பது எப்படி? என்று பார்க்கலாம். 

காரணம்

மதிய நேரத்தில் பெரும்பாலானோர் அதிகமாக சாப்பிடுகிறார்கள். ஒரு முழு சாப்பாடு சாப்பிடும்போது உடலில் கார்போஹைட்ரேட் அளவு அதிகரித்து இன்சுலின் அளவும் உயர்கிறது. இது தூக்கத்திற்குக் காரணமான மெலடோனின் சுரப்பை அதிகப்படுத்துவதால் தூக்கம் அல்லது மந்த நிலை ஏற்படுகிறது. 

அதுபோல உடலில் தொடர்ந்து செரிமானம் நடந்துகொண்டிருக்கும் போது உடல் சோர்வு நிலையை அடையும். 

தவிர்ப்பது எப்படி? 

கார்போஹைட்ரேட் அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது தூக்கம் வருகிறது. எனவே, மதிய உணவில் கார்போஹைட்ரேட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். பதிலாக, புரோட்டீன் நிறைந்த உணவுகளைச் சாப்பிடலாம். இது உங்களை சுறுசுறுப்பாக வைக்கும்.

குறிப்பாக சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம் அல்லது குறைவாக எடுத்துக்கொள்ளலாம். 

சிக்கன், வெஜ் சாலட், பழங்கள், பயறு வகைகள் ஆகியவற்றை மதிய உணவாக எடுத்துக்கொண்டால் தூக்கம் வராது. 

காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். 

இது தவிர்த்து இரவில் நீங்கள் சரியாக தூக்கம் இல்லை என்றாலும் பகலில் தூக்கம் வரலாம். எனவே இரவில் கண்டிப்பாக குறைந்தது 6-7 மணி நேரம் தூக்கத்தை உறுதிசெய்து கொள்ளுங்கள். 

அடுத்ததாக, சாப்பிட்ட பிறகு அவ்வப்போது சிறுசிறு இடைவெளியில் ஓரிரு நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதோ அல்லது குறைந்தது உங்கள் இருக்கையில் இருந்து எழுந்து அமர வேண்டும். வீட்டில் இருக்கும் பட்சத்தில் வேறு வேலைகளைச் செய்யலாம். 

தூக்கம், உடற்பயிற்சி, சரிவிகித உணவு ஆகியவற்றை சரியாக மேற்கொண்டாலே இந்த சோர்வில் இருந்து விடுபடலாம். 

ஆனால் வாய்ப்பு இருந்தால் மதியம் ஒரு குட்டித் தூக்கம்(10-30 நிமிடங்கள்) போட்டால் அதன்பின்னர் சுறுசுறுப்பாக இருக்கலாம் என்று கூறுகிறது ஓர் ஆய்வு. மேலும் இந்த குட்டித் தூக்கம் பல்வேறு உடல் பிரச்னைகளில் இருந்தும் சரி செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com