முதல்முறையா டேட்டிங் போறீங்களா? இந்த தப்பெல்லாம் செஞ்சுடாதீங்க!

நவீனத்தின் ஒரு வளர்ச்சியாக இன்று 'டேட்டிங்' என்ற புதிய நடைமுறை இளைய சமுதாயத்தினரிடையே ட்ரெண்டிங்காகி வருகிறது.
முதல்முறையா டேட்டிங் போறீங்களா? இந்த தப்பெல்லாம் செஞ்சுடாதீங்க!
Published on
Updated on
2 min read

நவீனத்தின் ஒரு வளர்ச்சியாக இன்று 'டேட்டிங்' என்ற புதிய நடைமுறை இளைய சமுதாயத்தினரிடையே ட்ரெண்டிங்காகி வருகிறது. துணை யாரும் இல்லாத ஒருவர் சமூக வலைத்தளங்கள்/ செயலிகள் மூலமாக ஒருவரது 'ப்ரோபைலை' தேர்வு செய்து அவர்களுடன் நேரம் செலவழிப்பதுதான் இந்த டேட்டிங். 

திருமணம் உறுதி செய்வதற்கு முன்பாக ஆண்-பெண் இருவரும் வெளியில் செல்கிறார்கள். அவ்வாறு ஒருவரையொருவர் புரிந்துகொள்ள 4-5 டேட்டிங் சென்று பின்னர் முடிவு செய்கிறார்கள். 

பொது இடங்களிலோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்ச்சியிலோ யாரோ ஒருவர் பார்த்தவுடன் உங்களுக்குப் பிடித்திருக்கலாம். அவர்களுடன் நட்பு ரீதியாக பழக விரும்புவோரும் டேட்டிங் செல்கிறார்கள். 

டேட்டிங்கில் சாதாரண நட்பு முதல் தீவிர உறவு வரை பல வகைகள் இருக்கின்றன. அது அவரவர்களின் விருப்பதைப் பொருத்தது. 

இந்த டேட்டிங்கில் என்ன மாதிரியான விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்? 

தோற்றம் அவசியம்தான்!

'ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்கள்' என்பதுபோலத் தான் மனிதர்களும். ஒருவரின் தோற்றத்தை வைத்து அவர்களை எடை போடக்கூடாது. பழகிப்பார்த்த பின்னரே மதிப்பிட வேண்டும். அதுபோல அவரைச் சந்தித்த சில நொடிகளிலும் சில மணி நேரங்களிலும் அவரது குணநலன்களைப் பற்றி மதிப்பிடக்கூடாது. உங்களையும் அவர் அப்படி நினைக்கலாம் அல்லவா? எனினும் முதல் சந்திப்பில் உடையில் மட்டும் கவனம் செலுத்தலாம். 

அரசியல் வேண்டாமே!

சிலர் முதல் சந்திப்பிலேயே நாட்டு நடப்பு, அரசியல் என்று பேசுவார்கள். இது உங்களின் அமைதியான சந்திப்பையே கெடுக்கும். ஏன், அரசியலில் நீங்கள் யார் பக்கம் என்றுகூட சொல்லாதீர்கள். ஏனெனில், அதை வைத்தும் உங்கள் குணநலன்களை மதிப்பிடுகிறார்கள். இதனால் டேட்டிங்கில் அரசியல் பேசுவதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். மாறாக, முதல்சந்திப்பில் உங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளுங்கள். 

வேறு யாரையும் பார்க்காதீர்கள்!

சில ஆண்களை பார்த்திருக்கலாம், ஒரு பெண்ணுடன் வெளியே வந்திருக்கும்போது வேறு பெண்களையும் பார்ப்பார்கள். அவர்களைப் பற்றி உடன் இருக்கும் பெண்/காதலியிடமே கமெண்ட் செய்வார்கள். சாதாரண டேட்டிங்காக இருந்தாலும் இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இது எதிர் பாலினத்தவரிடம் மனக்கசப்பை ஏற்படுத்தும். 

ஆதிக்கம் செலுத்த வேண்டாமே! 

இருவரும் பேசும்போது ஒருவருக்கொருவர் சம வாய்ப்பு வழங்க வேண்டும். உங்கள் உரையாடல் ஒரு மோனோலாக் வடிவத்தில் இருக்கக்கூடாது. முதல்முறையாகப் பேசும்போது வாய்ப்பு வழங்குவதில் புரிதல் இருக்க வேண்டும். ஒருவர் மட்டுமே தான் உயர்ந்தவர் என்ற முனைப்பில் பேச்சு இருக்கக்கூடாது. உங்களைப் பற்றி நீங்களே அதிகம் புகழ்ந்து பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள். மிகவும் சாதாரணமாக நீங்கள் யார் என்பதை முன்வையுங்கள். அவ்வப்போது சுவராசியமான பேச்சையும் முயற்சி செய்யுங்கள். ஒருவருக்கு பிடித்த விஷயத்தை மற்றொருவர் விமர்சிப்பது எல்லாம் வேண்டவே வேண்டாம். ஒருவரின் விருப்பத்தை மற்றொருவர் மதிக்க வேண்டியதும் அவசியம். 

ரகசியம் பகிர வேண்டாம் 

சிலர் காதலி/காதலன் என்றாலுமே முதல் சந்திப்பிலேயே தங்களை பற்றிய அனைத்து விஷயங்களையும் சொல்லி விடுவார்கள். அது உறவில் விரிசலைக் கூட ஏற்படுத்தும். முதல் நாளே முதல் சந்திப்பிலேயே எல்லா விஷயங்களை பகிர வேண்டாம். மகிழ்ச்சியான விஷயங்ளை மட்டும் பகிர்ந்துகொள்ளுங்கள். 

கண்ணியம் வேண்டும் 

எந்தவொரு உறவாக இருந்தாலும் ஒருவரையொருவர் விருப்பு/வெறுப்புகளை தெரிந்து புரிந்துகொள்ள வேண்டும். சிறுசிறு விஷயங்களில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவரை ஒருவர் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டும். அன்பைப் பரிமாற வேண்டும். காதலை தெரிவிக்க வேண்டும். 

ஒரு பெண்ணுக்கு என்ன தேவை என்பதை ஆணும் ஒரு ஆணுக்கு என்ன தேவை என்பதை பெண்ணும் தெரிந்து அதுபற்றி பேசி தெளிவு பெற வேண்டும். 

இறுதியாக டேட்டிங் என்பதன் வரையறை தனிப்பட்ட இரு நபர்களின் விருப்பு/வெறுப்புக்கு உட்பட்டது. ஒருவரையொருவர் காயப்படுத்தாமல் இருந்து அந்த நாளை இனிமையான நாளாக மாற்றுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.