தனிப்பட்ட வாழ்க்கை - அலுவலக வேலை... சமாளிப்பது எப்படி?

மனித வாழ்க்கை முழுவதும் இன்று வணிகமயமாகிவிட்டது. தனிப்பட்ட வாழ்க்கையும் வேலையும் ஒன்றோடொன்று கலந்துவிட்டன. 
தனிப்பட்ட வாழ்க்கை - அலுவலக வேலை... சமாளிப்பது எப்படி?

மனித வாழ்க்கை முழுவதும் இன்று வணிகமயமாகிவிட்டது. தனிப்பட்ட வாழ்க்கையும் வேலையும் ஒன்றோடொன்று கலந்துவிட்டன. அதிலும் இந்த கரோனா காலத்தில் 'வீட்டில் இருந்து வேலை' என்ற முறை அறிமுகமாகி வாழ்க்கைமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. 

தனிப்பட்ட வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும், தேவையானவை கிடைக்க வேண்டும் என்பதால்தான் சம்பாதிக்கச் செல்கிறோம். அறிவையும் திறனையும் வளர்த்துக்கொள்வது ஒருபுறத்தில் இருந்தாலும் வாழ்வதற்கு ஒரு குறைந்தபட்ச அளவாவது பணம் தேவைப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 

இந்த நிலையில் சிலர் வீடு, அலுவலகம் இரண்டும் ஒன்றுதான் என்ற அளவுக்கு வேலை செய்வார்கள். அதிலும் குறிப்பாக தொழிலதிபர்கள் 24 மணி நேரமும் போனும் லேப்டாப்பும்தான் அவர்கள் உலகம். குடும்பத்திற்காக ஒரு சில மணி நேரங்கள்கூட ஒதுக்குவதற்கு யோசிப்பார்கள். வளர்ச்சியும் பணமும் காட்டும் அந்த மகிழ்ச்சியைத் தொடர அவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள். 

ஒவ்வொருவருக்கும் வேலை, அதில் வளர்ச்சி என்பது முக்கியமானதுதான். முடிந்தவரை சிறப்பாக வேலையைச் செய்ய வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் விருப்பமும். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையை கண்டுகொள்ளாமல் வேலை மட்டுமே என்று இருந்தால் வாழ்க்கையில் சிறுசிறு உணர்வுகளை, மகிழ்ச்சியை இழக்க நேரிடும். அவர்கள் வேலை- தனிப்பட்ட வாழ்க்கை என்ற சமநிலை இல்லாமல் இருப்பார்கள். ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த அக்கறை இவர்களுக்கு பெரும்பாலும் இருக்காது. 

உங்கள் வணிகம் பாதிக்கப்படக்கூடாது, வளர்ச்சி காண வேண்டும் என்று நீண்ட நேரம் உழைப்பது, அலுவலக டென்ஷனையும் வீட்டில் காட்டுவது அபத்தமானது. ஏன், இவர்கள் சில நேரங்களில் சாப்பிடக்கூட மறந்துவிடுவார்கள். உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு மனிதனின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பவர்கள் கீழ்குறிப்பிட்ட இந்த 5 விஷயங்களையாவது கவனத்தில்கொள்ள வேண்டும். 

முன்னுரிமை

தனிப்பட்ட வேலையாக இருந்தாலும் சரி, அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, எந்த வேலைக்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இன்றைய வேலைகளை பட்டியலிட்டு முதலில் குறித்துவைத்து பின்னர் செயல்படுத்துங்கள். இதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாது. மேலும் முன்னுரிமை அளித்த வேலைகளை சரியாக செய்து முடிக்கவும் முடியும். முன்னுரிமை விஷயத்திலும் வீடு - அலுவலகம் இரண்டிற்கும் சம அளவு பங்கு இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

திட்டமிடுதல் 

அதுபோல ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். அதற்குள் அந்த வேலையை முடிக்க வேண்டும். 

சிலர் தொழிலதிபர்களாக இருந்தாலும் அனைத்து வேலைகளையும் இழுத்துபோட்டுக்கொண்டு செய்வர். அவ்வாறு இல்லாமல் வேலையைப் பிரித்துக்கொடுங்கள். நீங்கள் அவசியம் செய்ய வேண்டிய வேலைகளை மட்டும் செய்யுங்கள். சில வேலைகளை வேறு யாரேனும் அல்லது உங்களுக்கு கீழ் உள்ள பணியாளர்கள் செய்ய முடியுமெனில் அவர்களுக்கு வழங்குங்கள். 

பொழுதுபோக்கு

8 மணி நேர வேலையில் தொடர்ந்து ஈடுபட்டாலே ஒரு கட்டத்தில் உடலும் மனமும் சோர்வடைந்துவிடும். அதனால் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு தேவை. அதற்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் மனதைச் செலுத்த வேண்டும். 

வேலை நேரம் முடிந்து உங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக்கும் செயல்பாடுகள், பொழுதுபோக்குகளில் ஈடுபடுங்கள். கண்டிப்பாக குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அடுத்தாக நண்பர்கள், பிடித்தவர்களுடன் மனம் விட்டு பேசுவதையும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். 

உடற்பயிற்சி 

உடல்நலத்திற்காக உடல்நலம் சார்ந்த ஏதேனும் ஒரு பயிற்சியில் ஈடுபடலாம். நீச்சல், ஓட்டம், கராத்தே என உடலுக்கு வலு சேர்க்கும் பயிற்சிகளை முயற்சிக்கலாம். 

குறைந்தபட்சம் தினமும் ஒரு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அது உங்களை சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்திருக்கும். 

நல்ல உணவு

ஆரோக்கியமான வாழ்க்கை என்பது இந்த காலத்தில் அவசியமான ஒன்று. நவீனம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிடுவது முக்கியமானது. உடல்நிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். வேலைப்பளு காரணமாக சாப்பிடுவதை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது. மூளை சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் சரியாக சாப்பிடுவது அவசியம். 

நன்றாக சாப்பிடுவது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், சிந்தனையையும் மனநிலைமையையும் ஊக்குவிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. அதுபோன்று மனநிலையில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.  

அலுவலக வேலை - தனிப்பட்ட வாழ்க்கை.. இந்த இரண்டையும் சமநிலையில் பராமரிப்பது என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமானது, அவசியமானதும்கூட. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com