வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக இவற்றைப் பயன்படுத்தலாமே!
By DIN | Published On : 01st August 2022 05:03 PM | Last Updated : 01st August 2022 05:03 PM | அ+அ அ- |

இனிப்பு யாருக்குத்தான் பிடிக்காது. அந்தவகையில் பெரும்பாலாக இனிப்புப் பொருள்களில் பயன்படுத்தப்படுவது வெள்ளைச் சர்க்கரைதான். கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் வெள்ளைச் சர்க்கரை உடலுக்கு கேடு என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதை தினமும் அதிக அளவில் உட்கொள்வதால், உடல் பருமன், நீரிழிவு, வகை 2 நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் என பல நோய்கள் ஏற்படுகின்றன. ஆனால், வெள்ளைச் சர்க்கரை பயன்பாட்டுக்கு மாற்று வழிகள் இருக்கின்றன.
சிலர் இதற்கு மாற்றாக வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
தேங்காய் சர்க்கரை
இது இயற்கையாக தேங்காயில் இருந்து தயாரிக்கப்படுவது. இதில் இரும்புச் சத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம் ஆகியவை உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. தென்னை மரத்தின் பூ மொட்டுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இதில் இன்யூலின் என்ற ஒரு வகை கரையக்கூடிய நார்ச்சத்து இனிப்பு சுவை அளிக்கிறது. செரிமானத்தை மெதுவாக்குகிறது. உங்கள் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது.
இதையும் படிக்க | முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு ஆபத்தா?
சீனித் துளசி
சீனித் துளசி அல்லது இனிப்புத் துளசி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. சர்க்கரையைவிட 200 மடங்கு இனிப்பு தரக்கூடியது. எனவே, சிறிதளவு பயன்படுத்தினாலே போதுமானது. ரத்த அழுத்தத்தை, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. கலோரி இல்லாத இனிப்பு பொருள் என்பதனால் நீரிழிவு நோயாளிகளுக்கும் டயட்டில் இருப்பவர்களுக்கும் சிறந்த உணவு.
தேன்
தேன் மிகவும் இயற்கையான ஓர் இனிப்புப் பொருள். செரிமானத்தை எளிதாக்குகிறது. வைட்டமின், தாதுக்களைக் கொண்டுள்ளது. ஆன்டி - ஆக்சிடன்ட் அதிகம் கொண்டுள்ளது. சுத்திகரிக்கப்படாத இயற்கையான பொருள் என்பதால் உடலுக்கு நல்லது.
பேரீச்சை சர்க்கரை
அதிக தாதுக்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகியவை அதிகமுள்ள உலர்ந்த பேரீச்சையில் இருந்து சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தாது.
கருப்பட்டி
பனை மரத்தில் உள்ள பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியில் பொட்டாசியமும், சுண்ணாம்பு சத்தும் அதிகம் உள்ளன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட கருப்பட்டியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ரத்தசோகை ஏற்படாமல் பாதுகாக்கும், உடலில் நச்சுக்கழிவுகளை வெளியேற்றும்.
நாட்டுச் சர்க்கரை, வெல்லம்
கருப்பட்டிக்கு அடுத்தபடியாக கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் நாட்டுச் சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். வெள்ளைச் சர்க்கரை அளவுக்கு இதில் பாதிப்புகள் கிடையாது. செரிமானத்திற்கு உதவும்.
இதையும் படிக்க | அதென்ன 'டோபமைன் விரதம்'? மகிழ்ச்சிக்கான ஒரே வழி இதுதான்!