தலைமுடி உதிர்கிறதா? இதெல்லாம்தான் காரணங்கள்! தெரிந்துகொள்ளுங்கள்!

தலைமுடி உதிர்தல்.. இன்று இளம் பெண்கள் மட்டுமின்றி இளம் ஆண்களும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னை. 
தலைமுடி உதிர்கிறதா? இதெல்லாம்தான் காரணங்கள்! தெரிந்துகொள்ளுங்கள்!

தலைமுடி உதிர்தல்.. இன்று இளம் பெண்கள் மட்டுமின்றி இளம் ஆண்களும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னை. 

முடி உதிர்தலைத் தடுக்கும் வழிமுறைகளை கையாள்வதற்கு முன்பாக, தலைமுடி உதிர்தலுக்கான காரணங்களைத்  தெரிந்துகொள்ள வேண்டும். 

முடி உதிர்தலுக்கான காரணங்கள்

உணர்ச்சி அல்லது உடல் ரீதியான மன அழுத்தம்

நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, உடலளவில் மாற்றங்கள் நிகழும். இவ்வாறு அதிக மன அழுத்தத்தின்போது முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். எனவே, முடிந்தவரை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முற்படுங்கள். 

காற்று மாசு

மாசுத் துகள்கள், புகை, குறிப்பாக நிக்கல், லெட் மற்றும் ஆர்சனிக், சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, அம்மோனியா மற்றும் பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோ கார்பன்கள் உள்ளிட்ட காற்றில் உள்ள துகள்கள் கூந்தலில் ஒட்டிக்கொண்டால் அதனாலும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படும். 

உணவு முறை

தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் ஊட்டச்சத்து உணவுகளைத் தவிர்த்து துரித உணவுகள், பொருந்தா(ஜங்க் புட்) உணவுகளை அதிகம் நாடுகின்றனர். இதனால் ஊட்டச்சத்து குறைபாட்டினால் முடி உதிர்தல் ஏற்படுகிறது. 

தூக்கமின்மை

இரவில் போதுமான தூக்கம் இல்லாதிருப்பது, சரியான நேரத்தில் தூங்காதது உள்ளிட்டவையும் முடி மெலிதலை உண்டாக்கும். 

புரதக் குறைபாடு

வழக்கமாக முடி உதிரும்போது புதிய செல்கள் உருவாக வேண்டும். அவ்வாறு புதிய முடி செல்களை உருவாக்க புரதம் பெரிதும் உதவுகிறது. எனவே, உடலில் போதுமான அளவு புரதம் இல்லையெனில் இழந்த முடி செல்களுக்கு பதிலாக புதிய முடி செல்கள் உருவாகாது. 

கருத்தடை மாத்திரைகள் 

பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும்போது ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுகிறது. இதுவும் முடி உதிர்தலுக்கு ஒரு காரணம். 

கர்ப்பமடைதல்

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் காரணமாக, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முடி வளர்ச்சி சற்று அதிகமாக இருக்கும். ஆனால், பிரசவத்திற்குப் பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு இயல்பு நிலைக்கு வந்ததும், முடி மீண்டும் உதிரத் தொடங்குகிறது. இது சாதரணமாக நிகழும் உடல் மாற்றங்களில் ஒன்றுதான். 

தலைமுடியை இறுக்கமாக கட்டுதல்

வித்தியாசமான ட்ரெண்டிங்காக சிக்கலான முறையில் தலைமுடியை பின்னுவது அல்லது மிகவும் இறுக்கமாக பின்னுவது குறிப்பாக இறுக்கமாக போனிடைல் போடுவது முடி உதிர்தலுக்கு முக்கிய காரணங்கள். அதேபோன்று அழகுக்காக கூந்தலில் தொடர்ந்து ரசாயனங்கள் பயன்படுத்துவது அவற்றின் வேர்களை பலவீனப்படுத்துகிறது. 

ரத்த சோகை

20 முதல் 50 வயதுக்குட்பட்ட 10 பெண்களில் கிட்டத்தட்ட இருவர் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ரத்தசோகை உள்ளவர்கள் அதனை சரிசெய்யும் உணவுமுறைகளை மேற்கொள்வது நல்லது. 

ஹார்மோன் மாற்றங்கள்

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) பெண் பாலியல் ஹார்மோன்களில் நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது.  ஆண்ட்ரோஜன்களின் அதிகப்படியான விளைவாக கருப்பை நீர்க்கட்டிகள், நீரிழிவு நோய், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவை முடி வளர்ச்சியை பாதிக்கிறது. முடி உதிர்தலுக்கு ஹைப்போ தைராய்டிசம் மற்றொரு பெரிய காரணம்.

பரம்பரை குறைபாடுகள்

உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட வயதில் முடி உதிர்தலால் அவதிப்படும் நிலை இருந்தால், பரம்பரை ஜீன் காரணமாக உங்களுக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com