தலைமுடி உதிர்வா? வழுக்கை விழுகிறதா? இதெல்லாம் கண்டிப்பா சாப்பிடுங்க!

சரியான ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ளாதவரை தலைமுடி ஆரோக்கியமாக இருக்க முடியாது. முடி உதிர்வதைத் தடுக்க முடியாது. 
தலைமுடி உதிர்வா? வழுக்கை விழுகிறதா? இதெல்லாம் கண்டிப்பா சாப்பிடுங்க!
Published on
Updated on
2 min read

அழகு சார்ந்த விஷயங்களில் தலைமுடி பராமரிப்பு என்பது பெரும்பாலானோருக்கு முதன்மையானதுதான். தற்போது தலைமுடியை பராமரிக்க செயற்கையாக ஹேர் ஸ்பா, மசாஜ் என நவீன முறைகள் வந்துவிட்டன. 

ஆனால், வெளிப்புறத்தில் தலைமுடியை சரிசெய்வதைவிட தலைமுடி உதிர்வதைத் தடுப்பதற்கும் தலைமுடி நன்றாக வளர்வதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சத்துமிக்க உணவுகளை உண்ண வேண்டும். சரியான ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ளாதவரை உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க முடியாது.

வயது, மரபு உள்ளிட்ட காரணங்களாலும் தலைமுடி உதிர்வு ஏற்படலாம். ஆனால், அவற்றை ஓரளவு கட்டுப்படுத்தக்கூடிய தன்மை சில உணவுகளுக்கு உண்டு. 

வைட்டமின்கள், தாதுக்கள், இரும்புச்சத்து, புரதங்கள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பான பலனைத் தரும். 

ஆரோக்கியமான முடிக்கு புரதம்

முடி வளர்ச்சிக்கு போதுமான புரதத்தை சாப்பிடுவது முக்கியம், ஏனெனில் மயிர்க்கால்கள் பெரும்பாலும் புரதத்தால் ஆனவை, எனவே, முடியை வலுவாக மாற்ற புரதத் தேவை அவசியம். உடலில் புரதச் சத்து குறைவாக இருந்தால் முடி உதிர்தல், முடி உடைதல் ஏற்படும். 

புரதம் மிக்க உணவுகள் - முட்டை, கோழி, மீன், வான்கோழி மற்றும் பால் பொருட்கள்.

முடி உதிர்வதை தடுக்கும் இரும்பு

மிகக் குறைந்த இரும்புச்சத்து முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். எனவே, முடி உதிர்வதைத் தடுக்க மிக முக்கியமான ஒரு சத்து இரும்புச் சத்து. உடலில்  இரும்பு அளவு குறையும்போது, ​​ரத்த சோகையை ஏற்படுத்தும். இதுவே முடியின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. 

இரும்புச் சத்து மிக்க உணவுகள் - பருப்பு, சிவப்பு இறைச்சி, கோழி, மீன், ப்ரோக்கோலி, கீரைகள்.

முடி வளர உதவும் தயிர்

'கிரீக் யோகர்ட்' வகை தயிர் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முடி வளர்ச்சிக்கு உதவும். இதிலுள்ள வைட்டமின் பி5 முடி உதிர்தலுக்கு எதிராக செயல்படுகிறது. 

பளபளப்புக்கு சால்மன்

சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் ஆரோக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிரம்பியுள்ளன. உங்கள் உடல் இந்த நல்ல கொழுப்புகளை உருவாக்க முடியாது என்பதால் கண்டிப்பாக உணவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உங்களை நோயிலிருந்து பாதுகாப்பதுடன் முடி வளரவும், பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது. 

முடியை வலுப்படுத்த வைட்டமின் சி

வைட்டமின் சி இரும்பை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. எனவே, வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது, இது முடி வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது. 

வைட்டமின் சி உணவுகள் - கருப்பட்டி, அவுரிநெல்லி, ப்ரோக்கோலி, கொய்யா, கிவி, ஆரஞ்சு, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு.

முடி உதிர்வைத் தவிர்க்க அவோகேடா

அவோகேடா பழம் சுவையானது, சத்தானது மற்றும் நல்ல கொழுப்புகளைக் கொண்டது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். வைட்டமின் இ அதிகம் கொண்ட ஒரு முக்கிய உணவுப்பொருள். 

முடி வளர்ச்சிக்கு சோயாபீன்ஸ், பீன்ஸ்

பீன்ஸ், சோயாபீன்ஸ் புரதத்தின் சிறந்த ஆதாரங்கள். மேலும் துத்தநாகம் இதில் அதிகம் காணப்படுகிறது. இது முடி வளர்ச்சிக்கு அவசியம். சோயாபீன்களில் உள்ள ஸ்பெர்மிடினும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com