முட்டை ஒரு முழுமையான ஊட்டச்சத்து மிக்க உணவு. உடலுக்குத் தேவையான புரோட்டீனை எளிதாகப் பெற உதவுகிறது. இதில் ஏ, டி, ஈ, கே, பி2, பி6, பி12 ஆகிய வைட்டமின்களும், செலினியம், ஜிங்க், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன.
ஒரு முட்டையில் 75 கலோரிகள் உள்ளன. 7 கிராம் புரோட்டீன், 5 கிராம் கொழுப்பு, 1.6 கிராம் இரும்பு, வைட்டமின், தாதுக்கள், கரோட்டினாய்டுகள் ஆகியவை உள்ளன.
இதுவரை 20 அமினோ அமிலங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் 11 அமினோ அமிலங்களை உடலே உற்பத்தி செய்யும். எஞ்சிய 9 அமினோ அமிலங்களை உணவு மூலமாகவே உடல் பெற முடியும். இந்த அத்தியாவசிய 9 அமினோ அமிலங்கள் கொண்ட ஒரே உணவுப்பொருள் 'முட்டை' என்று கூறலாம்.
தினமும் முட்டை சாப்பிடலாமா?
முட்டை ஒரு முழுமையான புரதம் மிக்க உணவு. எனவே, இதனை தினமும் சாப்பிடலாம்.
தினமும் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு ஆபத்தா?
முட்டை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் முட்டை உடல் எடையைக் குறைக்கிறது.
முட்டையை தனியாக சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்து கிடைப்பதுடன் உடல் எடையைக் குறைக்கும். இது உடலில் ஹெச்டிஎல் எனும் அமிலச் சுரப்பை அதிகரித்து கொழுப்பைக் கரைக்கிறது. பசியைக் குறைக்கிறது. கலோரி குறைவு என்பதாலும் உடல் எடை அதிகரிக்காது.
எனவே, முடிந்தவரை மற்ற உணவுடன் முட்டை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
சிலர் உடல் எடையை காரணம் காட்டி முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவார்கள். இது முற்றிலும் தவறு. முட்டையில் உள்ள கொழுப்பு நல்ல கொழுப்பு என்பதால் அது உடலுக்குத் தேவையானது.
முட்டையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்ற கொழுப்பு அமிலம் உள்ளதால் உடல் எடையைக் குறைப்பதுடன் இதயத்தை பாதுகாக்கிறது. மேலும் முட்டையில் நோயை எதிர்க்கக்கூடிய சத்துகள் உள்ளன.
எவ்வளவு சாப்பிடலாம்?
பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு 2-3 முட்டை தாராளமாக சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் தினமும் ஒன்று கொடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். அதேநேரத்தில் முட்டையை வேகவைக்காமல் சாப்பிடுவது தொற்றை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்.
அதாவது ஹாப்-பாயில், அப்படியே குடிப்பதைத் தவிர்க்கவும். மாறாக முட்டையை அவித்தோ, ஆம்லெட் அல்லது பொடி மாஸ் செய்தோ சாப்பிடலாம். அதாவது முழுவதுமாக வேகவைத்து சாப்பிடலாம்.
(அக். 14 - உலக முட்டை நாள் இன்று!)
இதையும் படிக்க | இதயத்தைக் காக்கும் 'வால்நட்'; எவ்வளவு, எப்போது சாப்பிட வேண்டும்?