செரிமானத்திற்கு வீட்டிலுள்ள இந்த 5 பொருள்கள் போதும்!
By DIN | Published On : 01st September 2022 06:21 PM | Last Updated : 01st September 2022 07:49 PM | அ+அ அ- |

உணவு முறைகள் மாற்றத்தினால் இன்று பலருக்கும் அன்றாடம் ஏற்படும் ஒரு பிரச்னை செரிமானம் மற்றும் வயிற்றுக் கோளாறுகள்.
குறிப்பாக துரித(fast food) மற்றும் பொருந்தா(junk food) உணவுகள் பெரும்பாலும் வயிற்றுப் பிரச்னைகளை உண்டுபண்ணுகின்றன. சிலர் நன்றாகச் சாப்பிட்டவுடன் செரிமானம் அடைவதற்கு குளிர்பானங்கள் அருந்துகின்றனர். இது மிகவும் தவறான விஷயம். உண்மையில் அவ்வாறு செய்வது மேலும் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
எனவே, செரிமானம் மற்றும் உண்ட உணவினால் ஏற்படும் வயிற்றுப் பிரச்னைகளை சரிசெய்ய வீட்டில் உள்ள இந்த 5 பொருள்களே போதுமானது.
இஞ்சி
செரிமானத்தில் முதன்மையாகப் பயன்படக்கூடிய ஒரு பொருள். இஞ்சியை அப்படியே எடுக்காமல் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். பால் கலக்காத இஞ்சி டீ குடிக்கலாம். இது செரிமானத்தை ஊக்குவிக்கும். மேலும் உடல் உறுப்புகளில் உள்ள வாயுவை வெளியேற்றுகிறது.
புதினா
நறுமணம் மிக்க புதினாவை உணவுப் பொருள்களில் தொடர்ந்து சேர்க்கலாம். அசைவ உணவுகளில் கூட செரிமானத்திற்குத் தான் புதினா சேர்க்கப்படுகிறது. புதினா இலைகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது புதினா துவையல், புதினா டீ குடிக்கலாம்.
இதையும் படிக்க | ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுபவரா? செலவைக் குறைப்பது எப்படி?
ஓமம்
வீட்டில் சிறு குழந்தைகளுக்கு வயிற்றுக் கோளாறுகளுக்கு ஓம வாட்டர் தான் கொடுப்பார்கள். அதுபோல ஓமம் எந்த வயதினரும் செரிமாணத்திற்காக சாப்பிடலாம். ஓமம் செரிமான நொதிகளை எளிதில் தூண்டும் திறன் கொண்டது. வயிற்றுப் போக்கு பிரச்னைக்கும் ஓம வாட்டர் சிறந்தது.
சீரகம்
சீரகத் தண்ணீர் குடித்தால் எளிதில் செரிமானம் அடையும். குறிப்பாக அசைவம் சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து சீரகம் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை அருந்த வேண்டும். நாள்பட்ட செரிமானக் கோளாறுக்கு இது அருமருந்து.
வெந்நீர்
செரிமானத்திற்கு மிகவும் அடிப்படையானது வெந்நீர். அதிகம் சாப்பிட்டதாக உணர்ந்தாலோ அல்லது செரிமானக் கோளாறு ஏற்பட்டாலோ முதலில் வெந்நீர் குடித்துவிடுங்கள். அதன்பின்னரும் சரியாகாதபட்சத்தில் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பொருளை பயன்படுத்தலாம்.
இதையும் படிக்க | டயட் இருப்பவர்களுக்கு... விழா நாள்களில் செய்ய வேண்டியது என்ன?