2023-ஆம் ஆண்டோடு வாழ்க்கைப் பந்தயத்துக்கு விடைகொடுங்கள்!

2023ஆம் ஆண்டு நிறைவை நெருங்கி வருவதால், பலரும் சோர்வாகவும், எரிச்சலாகவும், அதிக அசதியாகவும் உணர்கிறீர்களா? அதனை எல்லாம் ஒரு நொடியில் தூள் துளாக்கிவிடலாம்.
2023-ஆம் ஆண்டோடு வாழ்க்கைப் பந்தயத்துக்கு விடைகொடுங்கள்!

வாழ்க்கை என்பது வாழ்வதற்கு உரியதே தவிர, மற்றவர்களுக்கு இணையாக நாமும் வாழ வேண்டும் என்று நினைத்து பந்தயத்தில் ஈடுபடுவதல்ல. இந்த 2023ஆம் ஆண்டோடு வாழ்க்கை என்பதை பந்தயமாக மாற்றும் போக்கை கைவிடுதல் நலம்.

2023ஆம் ஆண்டு நிறைவை நெருங்கி வருவதால், பலரும் சோர்வாகவும், எரிச்சலாகவும், அதிக அசதியாகவும் உணர்கிறீர்களா? அதனை எல்லாம் ஒரு நொடியில் தூள் துளாக்கிவிடலாம்.

நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடித்துவிட்டு, அழுத்தமான இலக்குகளை நோக்கி ஓடி ஓடி களைப்பாகி, சில தவறுகளால் மனம் நொந்து, இந்த ஆண்டு பலருக்கும் எப்படியோ ஒரு வழியாக முடிந்தது என்றிருக்கலாம்.

சிலர், இந்த ஆண்டு முடிகிறதே என்று, கையிலிருக்கும் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அடுத்தாண்டுக்கான திட்டங்களைத் தீட்டத் தொடங்கியிருப்பார்கள். இந்த ஆண்டில் ஓய்வில்லாமல் உழைத்ததால் வந்த அசதி உள்ளிட்டவற்றால் பலரும் அதிருப்தியோடுதான் அடுத்த ஆண்டை வரவேற்கத் தயாராகியிருக்கக் கூடும்.

அதோடு, இந்த ஆண்டில் வென்றவர்களைப் பார்த்து நம்மை தோல்வியாளர்களாகக் கருதுவது, புத்தாண்டு விடுமுறையைத் திட்டமிடும் மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டு தன்னம்பிக்கையை இழப்பது போன்றவை, இருக்கும் கொஞ்சம் உத்வேகத்தையும் குலைக்கிறது.  மேலே கூறப்பட்ட காரணிகள்,  கார்டிசோலின் அதிகரிப்புக்கும் வழிகோலும். இது மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தி, கவனச் சிதறல் போன்றவ ஏற்பட்டு மனநிம்மதியை, திறனை மோசமாக பாதிக்கிறது.

மஸ்லாஸ், ஜேக்சன் மற்றும் லெய்தர் (1996) கருத்துப்படி, அயர்ச்சி என்பது உணர்ச்சி ரீதியான சோர்வு, நமது பழக்க வழக்கத்தில் மாற்றம், ஒருவரது ஆளுமையின் கீழ் பணியாற்றியதால் சாதித்த உணர்வு குறைதல் ஆகிய மூன்று வகைகளால் வகைப்படுத்தப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள மானசா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் விரிஞ்சி ஷர்மா விளக்குகிறார், “ஆண்டின் இறுதியில் ஏற்படும் சோர்வு உடல், உணர்வு மற்றும் உளவியல் சோர்வாக வெளிப்படும். இது நமது அன்றாட நடவடிக்கைகளில் வேலை செய்வதற்கான உந்துதலை குறைக்கிறது என்கிறார்.

இந்த நிகழ்வை டிகோடிங் செய்து, அவர் விளக்குகிறார், அதாவது,“உயிரியல் அடிப்படையில், ஒரு ஆண்டின் இறுதியில் சில நாள்கள் மூளையின் செயல்பாடுகள் எதிர்மறையாக பாதிக்கப்படுகிறது. இது குறைவான செரோடோனின் மற்றும் டோபமைனை உற்பத்தி செய்கிறது. இது, உளவியல் ரீதியாக, ஆண்டின் தொடக்கத்தில் தனிநபரால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய  முடியாமை, நம்பிக்கையின்மை, சுயமரியாதை மீதான வெறுப்பு, சவால்களை சமாளிக்கும் வழிமுறைகளை பாதிக்கத் தொடங்கலாம் என்கிறார்கள். 

ஏதேனும் ஒரு தோல்வி, சங்கடம் உங்கள் மனநிலையை பாதித்தால், அது நிச்சயம் உடலையும் பாதிக்கும் என்பது நிதர்சனம். மனநிலையையும் உடல்நிலையையும் தனித்தனியே பிரிக்க முடியாது. மனதில் ஏதேனும் குழப்பம், சங்கடம் இருக்கும்போது சரியாக சாப்பிடாமல் இருப்பது உறங்காமல் இருப்பது, இன்னமும் அதிகப்படியாக உடலை நேரடியாகவே பாதிக்கும். 

தனி நபர்கள் பலரும், இந்த டிசம்பர் மாதத்தை ஒரு புதுப்பித்துக்கொள்ளும் ஆண்டாகவே வைத்திருக்கிறார்கள். காரணம், இதுவரை செய்யாதது, இதுவரை செய்த தவறு போன்றவற்றை மாற்றிக் கொள்ள டிசம்பரை விட சிறந்த மாதம் இல்லை என்பதும் உண்மைதானே

ஆனால், அதற்கு முன்பு, நாம் சில சின்ன சின்ன விஷயங்களை மாற்றிக் கொள்ளலாம். அதாவது, வாழ்முறையை சற்று மாற்றுவது. போதுமான உறக்கம், சமூக ஊடகத்தில் செலவிடும் நேரத்தைக் குறைத்தல், மது உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாட்டைக் குறைத்தல், காபி, டீ போன்றவை அதிகம் குடிக்கும் நபராக இருந்தால் அதனைக் குறைப்பது, ஆரோக்கியத்துக்கு அதிக நேரம் ஒதுக்குதல் மற்றும் கவனம் செலுத்துதல், யோகா, தியானம் செய்வது, மனதுக்கு நிம்மதியான இடத்துக்குச் சென்று சில மணி நேரங்கள் செலவிடுதல் போன்றவற்றை திட்டமிட்டு செய்து, உங்கள் இருப்பை இருக்கிறோம் என்பதிலிருந்து  வாழ்கிறோம் என்ற அளவுக்கு உயர்த்தலாம்.

எதிர்காலத்தை நினைத்து எந்த உயிரினமும் கவலைகொள்வதில்லை. எதிர்காலத்தை எதிர்கொள்கிறது. ஏற்றுக்கொள்கிறது. வாழ்கிறது. அதுபோலவே மனிதமும் அனைத்தையும் எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். இன்றைய நாளை, எதிர்காலத்தை நினைத்தே வீணடித்துவிட்டு, எதிர்காலத்தில் மட்டும் என்ன வாழ்ந்துவிடப்போகிறோம் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

குறைந்தபட்ச தேவைகளுடன், மனநிறைவான நாளைக் கழித்து, இந்த நாள், இந்த வினாடியில் வாழ்ந்துப் பாருங்கள். 

வாழ்க்கை ஒன்றும் மாரத்தான் போட்டியல்ல. அதுபோல, ஆண்டு இறுதியும், மாரத்தான் போட்டியின் எல்லைக்கோடு அல்ல. மெதுவாகவும் செல்லுங்கள். மற்றவர்கள் கோவாவுக்குச் சென்றால் நீங்கள் மெரினா கடற்கரைக்குச் செல்லுங்கள். ஆனந்தமாக அந்த நாளைக் கொண்டாடுங்கள். கடற்கரையே இல்லாத பல நகரங்கள் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஐஸ்க்ரீம் சாப்பிடுங்கள். சளி பிடித்தால் மாத்திரை அல்லது கசாயம் குடியுங்கள்.

ஆனால், இந்த வினாடியில் வாழுங்கள்.

நாம் இந்த ஆண்டு அடைந்த சின்ன மற்றும் பெரிய வெற்றி என்ன? கடந்த 12 மாதங்கள் எனக்கு என்னக் கற்றுக்கொடுத்தது? இந்த ஆண்டில் நிம்மதியைக் குறைத்தது எது? நான் உத்வேகமாகவும், மன அழுத்தம் குறைவாகவும் இருக்க, வரும் ஆண்டில் என்ன செய்ய வேண்டும்? இப்படி யோசித்து பதில் சொல்லுங்கள். இந்த பதிலுக்கு விளக்கமாக இந்த ஆண்டு அமையும் வகையில் வாழ்ந்து பாருங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com