ஹெட்ஃபோன் போடாதீங்க..!!

கரோனா ஊரடங்கின்போது மொபைல் போன், லேப்டாப், ஹெட்ஃபோன், இயர்ஃபோன் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
ஹெட்ஃபோன் போடாதீங்க..!!
Published on
Updated on
2 min read

கரோனா ஊரடங்கின்போது மொபைல் போன், லேப்டாப், ஹெட்ஃபோன், இயர்ஃபோன் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அலுவலக வேலை, தனிப்பட்ட கலந்துரையாடல்கள் என ஹெட்ஃபோன்/ இயர்ஃபோன் பயன்பாடு முன்பைவிட தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு, மற்றவருடன் பேசுவதற்கு, பாடல் கேட்பதற்கு, திரைப்படம் பார்ப்பதற்கு என 24 மணி நேரமும் இதனைப் பயன்படுத்துகின்றனர். மொபைல்போனும் இயர்போனும் மனித வாழ்வில் இன்று அத்தியாவசியமாகிவிட்டது. 

ஹெட்ஃபோன் மற்றும் இயர்பட்ஸ்களைப் பயன்படுத்துவதாலும் அதிக ஒலி கொண்ட இசை அரங்குகளில் கலந்துகொள்வதாலும் 100 கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு காது கேளாமை ஏற்படும் அபாயம் உள்ளதாக பி.எம்.ஜே. குளோபல் ஹெல்த் என்ற இதழ் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

அதுபோல, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி உலகம் முழுவதும் 43 கோடி பேர் காது கேளாமை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள், ஸ்மார்ட்போன், ஹெட்ஃபோன், இயர்பட்ஸ்களைப் பயன்படுத்துதல், அதிக ஒலி கொண்ட இசை அரங்குகளால் பாதிப்புக்கு ஆளாவதாகத் தெரிவித்துள்ளது. 

இவர்கள் பெரும்பாலும் 105 டெசிபல் (dB) அளவுக்கு அதிகமான ஒலியைக் கேட்கிறார்கள். பொழுதுபோக்கு இடங்களில் சராசரி ஒலி அளவு 104 முதல் 112 டெசிபல் வரை இருக்கும்.

ஆனால், வயது வந்தவர்கள் கேட்க வேண்டிய ஒலி வரம்பு 80 டெசிபல், குழந்தைகளுக்கு 75 டெசிபல் என்பது குறிப்பிடத்தக்கது. வரம்பைவிட அதிக ஒலியைக் கேட்பதால் காது கேளாமை பிரச்னை ஏற்படுகிறது. இதேநிலை நீடித்தால் 2050ல் 4ல் ஒருவருக்கு காது கேட்பதில் பிரச்னை இருக்கும் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம். 

மருத்துவர்கள் கூறுவது என்ன?

♦உங்கள் சாதனங்களில் முடிந்தவரை ஒலி அளவைக் குறைத்துக் கேட்க வேண்டும். வரம்பைவிட அதிகம் இருக்கக்கூடாது. 70 டெசிபலுக்கு மேல் உள்ள ஒலியை கேட்கக்கூடாது.

♦ஹெட்ஃபோன் பயன்படுத்தும்போது 45 நிமிடத்திற்கு ஒருமுறை 10-15 நிமிடங்கள் இடைவெளி வேண்டும். அதுபோல இயர்போன் என்றால் இரண்டு காதிலும் அல்லாமல் ஒரு காதில் மட்டும் வைத்துக் கேட்கலாம். சிறிது நேரம் கழித்து மற்றொரு காதில் கேட்கலாம். 

♦காதில் சரியாக உட்காரும்படியான, வெளிப்புற சத்தத்தை அனுமதிக்காத இயர்ஃபோன்களை பயன்படுத்தவும். 

♦இசை அரங்குகளில் அதிக ஒலி இருந்தால் சத்தம் உட்புகுவதைத் தடுக்கும் இயர்பிளக்குகளைப் பயன்படுத்தவும். 

♦ விழாக்களில் ஸ்பீக்கருக்கு அருகில் அமர்வதைத் தடுக்கவும். 

♦இயர்ஃபோன் அதிக நேரம் பயன்படுத்தினால் எச்சரிக்கை செய்யுமாறு உங்கள் ஸ்மார்ட்போன் செயலியில் செட் செய்துகொள்ளவும். 

♦காது கேட்கும் திறனை அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 

♦வயர்லெஸ் ஹெட்ஃபோன்களை வயர் ஹெட்ஃபோன்கள் நல்லது. அதுபோல, இயர்ஃபோன்/ இயர்பட்ஸ்களைவிட காது முழுவதும் கவர் செய்யக்கூடிய ஹெட்ஃபோன்கள் நல்லது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். 

♦சமீபமாக அதிகம் பேர் காது கேளாமை பிரச்னையுடன் வருவதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஹெட்ஃபோன் அதிகம் பயன்படுத்துவதே காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com