நாட்டில் 50 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதே தெரியாது!

நாட்டில் 35-50% பேருக்கு தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியாது என்று சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. 
நாட்டில் 50 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதே தெரியாது!

நாட்டில் 35-50% பேருக்கு தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியாது என்று சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. 

நாட்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நடப்பாண்டில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் - இந்தியா டையாபெட்டீஸ்(ICMR - INDIAB) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் 13.6 கோடி பேர் ப்ரீ- டையாபெட்டீஸ் என்றும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் இந்த நீரிழிவு நோய், இதயம், ரத்த நாளங்கள், கண்கள், சிறுநீரகங்கள், நரம்புகளை ஒரு குறிப்பிட்ட காலத்தில் கடுமையாக சேதப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்'-க்காக கவிதா பஜிலி தத்துடன் பேசிய மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் (MDRF) தலைவர் டாக்டர் வி. மோகன், 'இன்னும் ஐந்து ஆண்டுகளில் உலகின் நீரிழிவு நோயின் தலைநகரமாக இந்தியா' இருக்கும் என்று கூறுகிறார். 

நாட்டில் நீரிழிவு நோய் நிலைமை குறித்த சில கேள்விகளும் டாக்டர் மோகன் அளித்த பதில்களும்... 

இந்தியாவில் நீரிழிவு நோய், பிரச்சனையான சூழ்நிலையில் உள்ளதா? 

உண்மையில் இந்தியா நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 2019 சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு உலக நிலவரை கூற்றின்படி, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 7.4 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஐசிஎம்ஆர் - இந்தியா டையாபெட்டீஸ் ஆய்வின்படி லான்செட் டையாபெட்டீஸ் & எண்டோகிரினாலஜி (Lancet Diabetes & Endocrinology) என்ற இதழில், இந்தியாவில் இப்போது 10 கோடி(101 மில்லியன்) மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், அடுத்த சில ஆண்டுகளில், இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் இந்த சூழ்நிலையில் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும் நீரிழிவு நோயைத் தடுக்கும் வாய்ப்பும் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்டறியப்படாத சர்க்கரை நோய் இந்திய மக்களுக்கு எப்படி ஒரு பிரச்னையாக உள்ளது? என்ன செய்ய வேண்டும்?

ஐசிஎம்ஆர் - இந்தியா டையாபெட்டீஸ்(ICMR-INDIAB) ஆய்வின்படி இந்தியாவில் 35-50% நீரிழிவு நோயாளிகளுக்கு தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவே தெரியாது. இது அமைதியாக ஏற்படும் கோளாறு, பெரும்பாலும் எந்த அறிகுறிகளும் இருக்காது. எனவே இதனை சமாளிக்க, பெரிய அளவிலான நீரிழிவு பரிசோதனைகளை செயல்படுத்துவதே செலவு குறைந்த வழியாகும். 

குடும்பத்தில் நீரிழிவு நோய் உள்ளவர்கள், உடல் பருமன், உடல் செயல்பாடு இல்லாதவர்கள் நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்டுகின்றனர். இவர்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை நீரிழிவு நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறியலாம். 

மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை, ஐசிஎம்ஆர் - இந்தியா டையாபெட்டீஸ் உடன் இணைந்து, தொற்று அல்லாத நோய்களின் பெரும் சுமையை இந்தியா எதிர்கொள்வதைக் கண்டறிந்தது. தவிர வேறு ஏதேனும் கண்டறியப்பட்டுள்ளதா? 

ஆம், மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையில் உள்ள நாங்கள் இந்த ஆய்வின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்தோம். இது நிறைவடைய 15 ஆண்டுகள் ஆனது. ஆனால் இந்தியா முழுமையும் ஆய்வு செய்யப்பட்டது. 

ஒவ்வொரு மாநிலத்தின் உண்மையான நகர்ப்புற-கிராமப்புற பிரதிநிதியின் மாதிரி என  இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஆய்வு செய்துள்ளோம். ஆய்வில், நீரிழிவு நோய் மட்டும் அதிகம் என கண்டறியப்படவில்லை. அத்துடன் உயர் ரத்த அழுத்தம் (35.5%), வயிற்றுப் பருமன் (39.5%) மற்றும் கெட்ட கொழுப்பு அல்லது அதிக கொழுப்பு- ஹைபர்கொலஸ்டிரீமியா(24%) ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தப் பெரிய பிரச்சனையை எதிர்த்துப் போராடுவதற்கு தனிநபர்களும் அரசாங்கமும் என்ன அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

நாட்டில் ப்ரீ-டையாபெட்டீஸ்(pre-diabetes) என்றும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை (உயர் ரத்த அழுத்தம்) அதிக அளவில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ப்ரீ-டையாபெட்டீஸ் உள்ளவர்கள் மீது கவனம் செலுத்தி, கார்போஹைட்ரேட் உட்கொள்வதைக் குறைத்தல், புரதம் உட்கொள்வதை அதிகரிப்பது, பச்சை இலைக் காய்கறிகள் உட்கொள்வதை அதிகரிப்பது என ஆரோக்கியமான உணவு முறை, உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது, யோகா, தியானம், பிராணாயாமம் போன்றவற்றின் மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பது ஆகியவற்றை அறிமுகப்படுத்தி வாழ்க்கைமுறையை மாற்றினால் ப்ரீ-டையாபெட்டீஸ், நீரிழிவு நோயாக முன்னேறுவதைத் தடுக்கலாம். அதிக எடை கொண்ட நபர்கள், உடல் எடையை 5-10 கிலோ குறைப்பதன் மூலம்கூட ப்ரீ-டையாபெட்டீஸ் நிலை மாறும். இது 'நீரிழிவு நோய் நிவாரணி'(Remission of Diabetes) என்று அழைக்கப்படுகிறது. எனினும் இந்த நடவடிக்கை தனிநபர்களால் மட்டும் எடுக்கப்படக்கூடாது. இந்தியாவில் நீரிழிவு பிரச்சனையை சமாளிக்க வேண்டுமென்றால் பல துறை சார்ந்த அணுகுமுறை தேவை. 

இன்னும் 5 ஆண்டுகளில் நீரிழிவு நோய் மற்றும் தொற்று அல்லாத நோய்களில் இந்தியாவின் நிலைமை என்ன? 

எனது மதிப்பீட்டின்படி, இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியா, உலகின் நீரிழிவு நோயின் தலைநகராக இருக்கும். 144 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்தியா, உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக, ஏற்கெனவே சீனாவை முந்திவிட்டது என்பதால் இதை நான் முதலில் கூறுகிறேன்.

இரண்டாவதாக, சமூகப் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, உடல் பருமனும் அதிகரித்து வருகிறது. எனவே, விரைவில் நீரிழிவு மற்றும் பிற தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்று கருதலாம். நாட்டில் 1,50,000 சுகாதார, நல மருத்துவமனைகளை அமைப்பதன் மூலமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இது முதனமையானது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com