சாதனை படைக்க முக்கியம் எதிரிகள்தான்

ஒருவரது வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகளும், தடைகளும், அவர்களது எதிரிகளும்தான்.
சாதனை படைக்க முக்கியம் எதிரிகள்தான்
சாதனை படைக்க முக்கியம் எதிரிகள்தான்

வாழ்க்கையில் குறிப்பாக முன்னேறிய, சாதனை படைத்தவர்களின் வாழ்க்கையில் உண்மையான நண்பர்கள் யார் தெரியுமா? ஒருவரது வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகளும், தடைகளும், அவர்களது எதிரிகளும்தான்.

இப்படி சொல்வதைக் கேட்டால் சிலருக்குக் கோபம் கூட வரலாம். ஆனால். இது உண்மை. அது எப்படி என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள் விளங்கும்..

பொதுவாகவே, ஒருவரது வாழ்க்கையில் உயர வேண்டும் என்று அவர்களுடனே இருக்கும் நண்பர்கள் கூட நினைக்க மாட்டார்கள். அது அவர்களுக்குப் பிடிக்கவும் பிடிக்காது. ஆனால் அதை நேரடியாக சொல்லவும் மாட்டார்கள். ஆனால், ஏதேனும் நீங்கள் முயற்சிக்கும் போது அது குறித்து கிண்டல் செய்வார்கள். உங்களை ஏளனமாகப் பேசுவார்கள். அதனைக் கேட்டு பலரும் மனம் தளரத்தான் செய்வார்.

அதே வேளையில், ஒரு எதிரி நீ ஒரு ஆளா, இதைக் கூட உன்னால் செய்ய முடியாது, உனக்கு ஒன்றும் தெரியாது என்று நேரடியாகவே கூறுவார்கள். இப்படிப் பேசி உங்களை எரிச்சல் அடைய வைக்கும் போது, ஏன் இது என்னால் முடியாது என்று ஒருவர் எழுந்து நின்று சாதிக்கும் வாய்ப்பு ஏற்படும். அந்த வைராக்கியத்தோடு எடுக்கும் முயற்சி  வெற்றியை அளிக்கலாம்.

ஒருவர் இது உங்களால் முடியாது என சொல்லும் போதுதான், அதை  செய்ய வேண்டும் என்ற ஒரு உந்துதல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்படுகிறது. எனவே, கூட இருக்கும் நண்பன் கொடுக்கும் உற்சாகத்தை விடவும், எதிரி சொல்லும் கடினமான சொற்கள் பலரது வாழ்க்கையிலும் ஒளி விளக்காக அமைந்திருப்பது உண்மை.

ஒரு பயிற்சி வகுப்புக்கு செல்கிறீர்கள்.. அந்த வகுப்புக்குச் சென்ற சில நாள்களில், உங்களுக்குப் பிடிக்காத ஒருவர், நீ எல்லாம் அங்க போய் படித்து கடினமான தேர்வை எழுதி பாஸ் ஆக முடியாது.. நான் வேண்ணா சொல்றேன் பாரு என்று சொன்னால், ஆமாம், நம்மால் அப்படி முடியாது என்று நினைக்காமல், அவர் சொன்னதற்காகவே, அந்த பயிற்சியை முடித்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். 

அதே போல, நாம் நடந்து கொண்டிருக்கும் போது, நமது பாதையில் ஒன்று சிறிய சாக்கடை குறுக்கிட்டால் திரும்பி வந்துவிடுவோமா அல்லது அந்த சாக்கடையை தாண்டி குதித்து செல்வோமா.. பெரும்பாலானோர் தாண்டி குதித்துத் தான் செல்வோம். அவ்வாறு ஒரு சாக்கடை வரும் போதுதானே நமக்கு தாண்டி குதிக்கத் தெரியும் என்பதை நாம் உணர்வோம். இதுவும் ஒரு உதாரணம்தான்.

நீங்கள் சென்று கொண்டிருக்கும் பாதையில் (வாழ்க்கையில்) எந்த தடையும் ஏற்படவில்லை, சுமூகமாக செல்கிறது என்றால், நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்பதை உணருங்கள் என்று விவேகானந்தர் கூறியிருக்கிறார்.

இந்த வார்த்தைகளை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

எனவே, வாழ்க்கையில் நிகழும் துன்பங்கள், துயரங்களை நேசியுங்கள். அது ஒவ்வொன்றில் இருந்தும் நீங்கள் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டிருப்பீர்கள். 

வேதனைகள் சோதனைகளைத் தயக்கம் இன்றி தைரியமாக சந்திக்கத் தயாராகுங்கள். சோதனைகளையும், வேதனைகளையும், எதிர்கொள்பவர்கள்தான் சாதனையாளர்களாகின்றார்கள்.  சும்மா ஓரமாக உட்கார்ந்து கொண்டு செல்ஃபோனையே நோண்டிக்கொண்டிருப்பவர்கள் அல்ல...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com