குழந்தை வேண்டுமா? செல்போன் பயன்படுத்தாதீர்கள்!

செல்லிடபேசிகளை அதிகம் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு விந்தணுக்களின் அளவு குறையும் அபாயம் 21 சதவீதம் அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குழந்தை வேண்டுமா? செல்போன் பயன்படுத்தாதீர்கள்!

ஒரு நாளில் 20 முறைக்கும் அதிகமாக செல்போன்களைப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு  விந்தணுக்களின் எண்ணிக்கை  குறையும் அபாயம் 21  சதவீதம் கூடுதலாக இருப்பதாக புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 

இந்த ஆய்வில், 18 - 22 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள்  பங்கேற்றனர். ஆய்வின் முடிவில், ஒரு நாளைக்கு 20 முறைக்கும் மேல் செல்போனை பயன்படுத்துவதாக இருந்தால், அவர்களுடைய விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான அபாயம் 21 சதவீத அதிகம் என்றும், ஒட்டுமொத்தமாக, குறைவாக செல்போன்யைப் பயன்படுத்துபவர்களைவிடவும், அதிக நேரம் செல்போனை பயன்படுத்துபவர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைவிடவும், அதிகம் செல்போன் பயன்படுத்துவோருக்கு விந்து செறிவு பாதிக்கப்படும் அபாயம் 30 சதவீதம் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.  அதேவேளையில், விந்தணு இயக்கம் மற்றும் விந்தணு வடிவத்தில் எந்த  பாதிப்பும் ஏற்படவில்லை என்ற ஆறுதல் தகவலும் கிடைக்கப்பெற்றுள்ளது.

குழந்தை பெறும் தகுதி


குழந்தை பெறும் தகுதியைப் பெற, ஒரு இளைஞரின் விந்தணுவின்  எண்ணிக்கை, அதன் நீந்தும் திறன், அவற்றிலிருக்கும் ஆரோக்கியமான மரபணு, சரியான வடிவம் ஆகியவை முக்கியமான அம்சங்களாகக் கருதப்படுகின்றன. 

தற்போது வரை, செல்போன் பயன்பாட்டினால் இளைஞர்களிடையே குழந்தை பெறுவது பாதிக்கப்பட்டிருப்பது குறித்து மிகத் தெளிவான - உறுதியான தகவல்கள் இல்லையெனினும், அதிகப்படியான செல்போன் பயன்பாடு விந்தணுவை பாதித்துக் குழந்தை பெறும் தகுதியை குறைக்கிறது என்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.

பொதுவாகவே அண்மை ஆண்டுகளில் இளைஞர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் குறைந்து வருகிறது. குழந்தையின்மை குறைபாட்டுடன் வரும் ஆண்களில் பெரும்பாலானோருக்கு விந்தணு இயக்கம் அல்லது டிஎன்ஏ குறைபாடு காணப்படுகிறது. 

செல்போன்களிலிருந்து வெளியாகும் மிகச் சிறிய அளவிலான மின்காந்த கதிர்வீச்சு, நேரடியாகவே விந்தணுவை பாதிக்கிறது. விலங்குகளிடம் செய்யப்பட்ட சோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஒரே ஒரு நல்ல தகவல் என்னவென்றால், தகவல்தொழில்நுட்பம் உயர உயர, புதிய நவீன செல்போன்களால் ஏற்படும் பாதிப்புக் குறைகிறதாம். அதாவது, 2ஜி மற்றும் 3ஜி செல்போன்களோடு ஒப்பிடுகையில் 4ஜி மற்றும் 5ஜி செல்போன்களால் நேரிடும் பாதிப்புக் குறைவாக இருக்கிறதாம்.

இதற்குக் காரணம், புதிய வகை செல்போன்களில் மிகக் குறைந்த அளவில் மின்காந்த கதிர்வீச்சு வெளியாகிறது என்பதே.

இந்த ஆய்வுகள், இளைஞர்களிடையே விந்தணு குறைபாட்டுக்கான காரணத்தை மிகத் துல்லியமாக நிரூபிக்க முடியவில்லை என்றும், வாழ்முறை பழக்க வழக்கங்கள் மற்றும் மன அழுத்தம், உணவு போன்றவையும் இதில் முக்கிய காரணிகளாக இருக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள்.

குறைந்தபட்சம், உண்மை உறுதி செய்யப்படும்வரை, இளைஞர்கள்,  செல்போன்களைக்  கூடுமானவரை தவிர்க்கலாம், தடுக்கலாம் என்கிறார்கள். ஸ்பீக்கர்ஃபோன், ஹெட்போன்களைப் பயன்படுத்தலாம்  என்றும், செல்லிடப்பேசியை காதில் வைத்துப் பேசுவதை முற்றிலும் குறைக்கலாம் என்றும் ஆலோசனை கூறுகிறார்கள்.

நாட்டில் செல்போன் எண்களே ஒவ்வொருவரின் தனி அடையாளங்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் -  செல்போன் இல்லாமல் ஒருவரால்  வாழவே முடியாது என்ற நிலைக்கு எளிய மனிதர்கள்கூட  தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்... செல்போன் பேசாமல் புதிய  தலைமுறையால் இருக்க முடியாது என்ற இன்றைய நிலை மாறி, எதிர்காலத்தில் செல்போனில் பேச புதிய தலைமுறையே இருக்காதோ  என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது இந்தக் கண்டுபிடிப்புத் தகவல்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com