எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடுவது எப்படி?

வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் நடக்கவில்லை என்றாலோ திடீரென ஏதோ ஓர் இழப்பு ஏற்பட்டாலோ எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். இதற்கு நம்மைச் சுற்றி பல காரணங்கள் இருக்கின்றன. 
எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடுவது எப்படி?
Published on
Updated on
2 min read

வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் நடக்கவில்லை என்றாலோ திடீரென ஏதோ ஓர் இழப்பு ஏற்பட்டாலோ எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். இதற்கு நம்மைச் சுற்றி பல காரணங்கள் இருக்கின்றன. 

எதிர்மறையான நம்பிக்கை கொண்டவர்களுடன் பழகினால்கூட நமக்கும் அந்த பிரச்னை ஏற்படலாம். எவ்வாறாயினும் எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்ற ஆரம்பித்துவிட்டால் உடனே அதனை அகற்றி விட வேண்டும். 

பயம், கோபம், பதட்டம், நம்பிக்கையின்மை, முடிவெடுக்க முடியாமல் திணறுதல், தாழ்வு மனப்பான்மை, அதிகமாக சிந்திப்பது, மன அழுத்தம் உள்ளிட்டவை எதிர்மறை எண்ணங்களுக்கான அறிகுறிகள் என்று சொல்லலாம். 

♦எதிர்மறை எண்ணங்கள் தோன்றினால் முதலில் என்ன காரணம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த கசப்பான அனுபவத்தினால் அல்லது இழப்பினால்தான் நமக்கு இப்படி தோன்றுகிறதா என்பதை முதலில் கண்டறிந்து உறுதி செய்துகொள்ள வேண்டும். 

♦ அடுத்து உங்களை மிகவும் பிசியாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வேலைகளில் முடிந்தவரை கவனம் செலுத்துங்கள். அடுத்தடுத்த வேலைகளை தொடர்ந்து திட்டமிட்டுக் கொள்ளுங்கள். 

♦ மனதில் ஒரு விஷயத்தைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தால் தேவையற்ற எண்ணங்கள்தான் தோன்றும். எனவே, நெருக்கமான ஒரு நண்பருடன் உங்கள் மனதில் இருப்பதை பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்கள் உங்கள் பிரச்னைக்கு ஒரு தீர்வைக்கூடத் தரலாம். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க மனம் திறந்த உரையாடல்கள் அவசியம். 

♦ நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்த, நேர்மறையாக சிந்திக்கும், உங்களுக்கு ஆறுதலாக, ஊக்கப்படுத்தும் நபர்களுடன் நேரம் செலவிட வேண்டும். 

♦ மன நலப் பிரச்னைகளுக்கு பயணங்கள் ஒரு மிகச்சிறந்த மருந்து. உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ செல்லலாம். 

♦  உங்களுடைய மனநலம் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தால் கண்டிப்பாக மனநலம் தொடர்பான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மன நல ஆலோசகரை அணுகத் தயக்கம் கூடாது. 

♦  நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும், உங்களை ஊக்கப்படுத்தும் புத்தகங்களை வாசிக்கலாம், தியானம், யோகா ஆகியவையும் உதவும். 

♦   தவறு செய்யாத மனிதர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை. உங்கள் பிரச்னைக்கு நீங்களே காரணம் என்றால் உங்களை நீங்களே மன்னித்துவிடுங்கள். 

♦ உங்கள் மன அழுத்தத்திற்குக் காரணமான நபர்களிடம் இருந்து விலகி இருத்தல் நலம். 

♦ உங்களுக்கென்று குறிக்கோள்களை நிர்ணயித்துக்கொண்டு அதனை நோக்கி பயணியுங்கள்.

♦  இறுதியாக, உங்கள் பிரச்னைக்கு நீங்கள்தான் தீர்வு. நீங்கள் நினைத்தால் எப்படிப்பட்ட மன அழுத்தத்தில் இருந்தும் எதிர்மறை எண்ணங்களில் இருந்தும் விடுபடலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com