குளிர்பானங்களில் பயன்படுத்தும் செயற்கை இனிப்பினால் புற்றுநோய் ஏற்படுமா?
By DIN | Published On : 15th July 2023 12:44 PM | Last Updated : 15th July 2023 12:44 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் அஸ்பார்டேம் எனும் செயற்கை இனிப்பு, புற்றுநோயை ஏற்படுத்தலாம் என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
செயற்கை இனிப்பான்கள் உள்ள குளிர்பானங்களை இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் 'லோக்கல் சர்க்கிள்ஸ்' என்ற சமூக வலைத்தளம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல்வேறு தரவுகளை வெளிகொண்டுவந்துள்ளது.
இதற்காக நாட்டில் 295 மாவட்டங்களில் சுமார் 23,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மூன்றில் ஒருவர், டயட் சோடா, சூயிங்கம் ஆகியவற்றின் மூலமாக செயற்கை இனிப்பான்களை எடுத்துக்கொள்கின்றனர்.
26% பேர் செயற்கை குளிர்பானங்கள் மூலமாகவும் 18% பேர் இனிப்பில்லா சாக்லேட் மற்றும் ஐஸ்க்ரீம் மூலமாகவும் எடுத்துக்கொள்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் 38% இந்தியர்கள் செயற்கை இனிப்பு கலந்த பானங்களை அருந்துகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | செல்போன் அழைப்பு வந்தாலே எரிச்சலாக, பதற்றமாக இருக்கிறதா?
அதேநேரத்தில், ஆனால் 91 சதவீதம் பேர், செயற்கை இனிப்புகளின் பயன்பாட்டை உணவுப்பொருள் அட்டையின் முன்புறத்தில் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் அஸ்பார்டேம் எனும் செயற்கை இனிப்பு கலந்த டயட் சோடா மற்றும் சர்க்கரை இல்லாத உணவுப் பொருள்களை சாப்பிடும்போது புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறியுள்ளது. குறிப்பாக கல்லீரல், மார்பகம், ரத்த புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அஸ்பார்டேம் என்பது ஒரு செயற்கை (ரசாயன) இனிப்பு. இது 1980களில் இருந்து பல்வேறு உணவு மற்றும் குளிர்பான தயாரிப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. குளிர்பானங்கள், சூயிங்கம், ஜெலட்டின், ஐஸ்கிரீம், தயிர், தானியங்கள், பற்பசை ஆகிய பொருள்களிலும் இருமல் மருந்துகள் மற்றும் மெல்லக்கூடிய வைட்டமின்கள் போன்ற மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு கேன் டயட் சோடாவில் சுமார் 200 முதல் 300 மில்லிகிராம் அஸ்பார்டேம் உள்ளதாகவும் சராசரியாக 70 கிலோ எடையுள்ள ஒருவர் 9 முதல் 14 கேன்கள் வரை பாதுகாப்பாக உட்கொள்ளலாம் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், அதேநேரத்தில் மக்கள் இனிப்பு உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க | தினமும் பால் குடிப்பது அவசியமா?
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...