உங்கள் குழந்தை மன அழுத்தத்தில் இருக்கிறதா? எப்படி கண்டறிவது? தீர்வு என்ன?

உங்கள் குழந்தை மன அழுத்தத்தில் இருக்கிறதா? எப்படி கண்டறிவது? அறிகுறிகள் மற்றும் தீர்வுகள். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்களுக்கு சவாலான விஷயம்தான். குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிவது கடினமாகவே இருக்கிறது. 

அதிலும் சமீபமாக குழந்தைகள் மனரீதியாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனை எப்படி கண்டறிவது? 

குழந்தைகளின் நடத்தையை வைத்தே பெற்றோர்களால் இதனை அறிய முடியும். அதாவது குழந்தைகள் வழக்கமாக நடந்துகொள்ளும் விதத்தில் இருந்து மாறும்போது அந்த நடத்தைகளைக் கொண்டு அவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதை தெரிந்துகொள்ளலாம். 

♦ இரவு சரியாக தூங்காத குழந்தைகள் அல்லது கெட்ட கனவுகள் வருவதாகக் கூறினால் அவர்கள் மன அழுத்தத்தில் இருக்கலாம். 

♦ நன்றாக படித்து வந்த குழந்தை, படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது,

♦ மற்றவர்களை உடல் ரீதியாக தாக்குவது, அதாவது அடிப்பது, கடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது, திட்டும் வார்த்தைகளை பயன்படுத்துவது, 

♦ குடும்பத்தினரிடமிருந்து விலகி தனிமையில் இருக்க விரும்புவது 

♦ குறைவாக அல்லது வழக்கத்திற்கு மாறாக அதிகமாக சாப்பிடுவது 

♦ பிடித்த விஷயங்கள் இப்போது பிடிக்காமல் போவது

♦ சிறிய விஷயங்களுக்கு கோபப்படுவது, அடம் பிடிப்பது 

♦ தொடர்ந்து தலைவலி, வயிற்றுப் பிரச்னைகள் என உடல் சார்ந்த தொந்தரவுகள் இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தை மன அழுத்தத்தில் இருக்கலாம். 

தீர்வு என்ன? 

♦ குழந்தைகள் எந்த ஒரு உணர்வையும் முழுமையாக சொல்லத் தெரியாதவர்கள், வெளிப்படுத்தவும் தெரியாதவர்கள். எனவே, அவர்களை கண்காணித்துதான் அவர்கள் பிரச்னையில் இருக்கிறார்கள் என்பதே கண்டறிய வேண்டும். 

♦ நவீன காலத்தில் பெற்றோர் குழந்தைகளிடம் நேரம் செலவழிப்பதே கிடையாது. குழந்தைகளுக்கென தினமும் நேரம் ஒதுக்கி அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் குறித்துப் பேச வேண்டும். தினமும் பேசும்போது அவர்களுக்கான பிரச்னைகளை சொல்ல வாய்ப்பு நிறைய இருக்கிறது. 

♦ இப்போது உங்கள் குழந்தை மன அழுத்தத்தில் இருப்பது தெரிந்தால் அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். அதிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். 

♦ மன அழுத்தத்தில் இருந்து விடுபட, அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு கூட்டிச் செல்லலாம். விளையாட்டுகளில் ஈடுபட வைக்கலாம். இது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். 

♦ அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லிக்கொண்டே இருங்கள். அதனை ஒரு கடிதமாக எழுதியும் கொடுக்கலாம். 

♦ உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகளுடன் விளையாட பேச அனுமதியுங்கள். 

♦ இவற்றையெல்லாம் முயற்சி செய்தும் குழந்தையின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியவில்லை என்றால் யோசிக்காமல் மனநல மருத்துவரை அணுக வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com