டூத் பிரஷ்களை சுத்தப்படுத்த சோப்பு பயன்படுத்தலாமா?

டூத் பிரஷ்களை சுகாதாரமாக வைக்க பல வழிமுறைகள் உள்ளன.
பல் ஆரோக்கியம்
பல் ஆரோக்கியம்

பொதுவாகவே வாய் சுகாதாரம் என்பது மருத்துவர்களால் அதிகம் எச்சரிக்கப்படும் விஷயமாகும். அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம், பல்வேறு நோய்களுக்கும் வாய் சுகாதாரமின்மைதான் வழிவகுக்கிறது.

சிலர் பற்களை நல்ல முறையில் சுத்தம் செய்வார்கள். சாப்பிட்டதும் வாய் கொப்பளிப்பது, உறங்கச் செல்லும் முன் பல் துலக்குவது என அனைத்தையும் சரியாக செய்வார்கள். ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடுவார்கள். அதுதான் டூத் பிரஷ் பாதுகாப்பு.

மருத்துவர்கள் டூத் பிரஷ் பற்றி முதலில் சொல்லும் தகவல் என்னவென்றால், பொதுவாக யாரும் கழிப்பறையில் அல்லது குளியலறையில் டூத் பிரஷ்களை வைக்க வேண்டாம் என்பதே.

எல்லாருமே குளியலறையில்தான் டூத் பிரஷ்களை வைப்பார்கள். வைக்க முடியும் என்ற நிலையில், அவ்வாறு செய்வதால், பிரஷ்கள் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கவும், பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கிறார்கள்.

எனவே, கழிப்பறைக்கு வெளியே சூரிய வெளிச்சம் படும் இடத்தில் டூத் பிரஷ்களை வைப்பது நல்ல பழக்கமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், பலரும், பல் தேய்த்த பிறகு அல்லது பல் தேய்க்கும் முன்பு, தாங்கள் பயன்படுத்தும் பிரஷ்களை சோப்பு போட்டுத் தேய்க்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்களாம். இது மிகவும் தவறான பழக்கம்தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சோப்பு போட்டுக் கழுவும்போது, டூத் பிரஷ்-ஷில் உள்ள பாக்டீரியா வெளியேற்றப்படும் நன்மை இருக்கிறது என்றாலும், டூத் பிரஷ்ஷில் சோப்புகளின் எச்சம் விடுபட்டுவிட்டால், அது வாய்க்குள் சென்று தேவையில்லாத உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம். அது பல் தேய்க்காமல் இருப்பதைவிட மோசமான நோய்களாகக் கூட இருக்கலாம் என்றும் எச்சரிக்கிறார்கள்.

கூடுதலாக, சோப்பின் மணம் மற்றும் அதற்கென இருக்கும் ஒரு சுவையுடன் டூத் பேஸ்ட் சுவை மற்றும் மணம் சேர்ந்து, பல் தேய்ப்பதையே ஒரு கெட்டக் கனவாகக் கூட மாற்றிவிடலாம் என்றும் கூறப்படுகிறது.

சரி, குளியலறையிலும் வைக்கக் கூடாது, சோப்பு போட்டும் கழுவக்கூடாது என்றால், டூத் பிரஷ்களை எப்படித்தான் சுத்தமாக வைத்துக் கொள்வது என்று கேட்டால், பல் தேய்த்ததும், கொட்டும் தண்ணீரில் பிரஷ்ஷை நன்கு கழுவ வேண்டும். அதில் இருந்து நுரை வராத நிலை வந்ததும், அதனை உலர்ந்த இடத்தில் நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்கலாம். இதனால், அதில் பாக்டீரியாக்கள் பரவாமல் தடுக்கப்படும்.

சிலர், பிரஷ்களுக்கு மூடி போட்டு வைத்துவிடுவார்கள். காற்றிலிருந்து தூசுகள் படாமல் இது தடுக்கும் என்றாலும், பாக்டீரியாக்கள் பல்கிப்பெருகும் அபாயம் இருப்பதால், காற்றோட்டமாக வைத்து காய்ந்த பிறகு வேண்டுமானால் மூடியை பொருத்திக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார்கள்.

ஒருவேளை இதெல்லாம் போதவே போதாது என்று கருதுபவராக இருந்தால், நுண்ணுயிர் தடுப்பு வாய்க்கொப்பளிப்பு திரவங்களில் சிறிது நேரம் டூத் பிரஷ்களை போட்டு வைக்கலாம் அல்லது டூத் பிரஷ் சானிடைசர்களை வாங்கி வந்து அவற்றைப் பயன்படுத்தலாம். குறைந்த செலவில் டூத் பிரஷ்களை சுத்தம் செய்யவும் ஒரு எளிய வழி இருக்கிறது. அதாவது வெள்ளை வினிகரில் சிறிது நேரம் டூத் பிரஷ்ஷை ஊற வைத்தால், நல்ல சுகாதாரம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com