எச்சரிக்கை! தூக்கத்தில் பிரச்னையா.. அது மூளை, நினைவாற்றலை பாதிக்கலாம்!!

தூக்கத்தில் பிரச்னை இருந்தால் அது மூளை, நினைவாற்றலை பாதிக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உறங்கும் போது, ஒருவருக்கு அடிக்கடி தூக்கம் கலைவது அல்லது மூச்சுத் திணறலுடன் குறட்டை பிரச்னைகள் இருந்தால், அதனை அலட்சியப்படுத்த வேண்டாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

இது மூளையின் செயல்பாடுகள் மற்றும் நினைவாற்றலை கடுமையாக பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் துறை நடத்திய ஆய்வில்தான் இந்த அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, சீரான தூக்கமின்மை, ஆழ்ந்த உறக்கம் கிடைக்காதது போன்றவை, நேரடியாகவே உடலில் பல எதிர்மறை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்கிறது.

தூக்கத்தில் ஏற்படும் கோளாறுகள், இந்தியாவின் நகர்ப்புறப் பகுதிகளில் நடுத்தரம ற்றும் வயதானவர்களை பாதித்து, அது நேரடியாக பல உடல்நலப் பாதிப்புகளுக்குக் காரணியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், 6,795 பேர் பங்கேற்றனர். இவர்களில் 49 சதவீதம் பேர் பெண்கள், 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு தூக்கத்தில் உள்ள கோளாறுகள், மிக மோசமாக அவர்களது அறிவாற்றல், நினைவாற்றல் மற்றும் அன்றாட செயல்பாடுகளில் பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 50 - 60 வயதுடையவர்களுக்கு இது அதிகமாகவே இருப்பதும், பெரிய அளவிலான மக்களுக்கு இந்த பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மேற்பட்ட வயதினருக்கு பெரிய பாதிப்புகள் இருப்பதாகத் தெரியவரவில்லை.

மிக மோசமான உறக்கநிலை என்பது, அறிவாற்றலை மட்டுப்படுத்தி, பொதுவான திறமைகள், நினைவாற்றல், செயல்படும் திறனை பாதிக்கிறது என்றும், ஆனால், தகவல்களை அளிக்கும் திறனை பாதிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

உறக்கத்தில் ஏற்படும் கோளாறும் ஒரு நோய் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படாத நிலையில், இது உடலை பாதித்து, சிகிச்சையை ஏற்க மறுக்கும்நிலையில், உடல் மோசமாகி, சிகிச்சை எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும்போது, உடல் சிகிச்சை ஏற்றுக்கொண்டு சீராகும்பட்சத்தில் நரம்புச் சிதைவுகள் ஏற்படாமல் தடுக்கப்படலாம் என்கிறது ஆய்வு முடிவுகள்.

தூக்கத்தில் கோளாறு அல்லது குறட்டை, குறட்டையின்போது மூச்சு அடைத்தல் போன்ற பிரச்னை உள்ளவர்கள், தாமதிக்காமல் சிகிச்சை எடுத்துக்கொண்டு, மூளை செயல்பாடு மற்றும் நினைவாற்றலை பாதிக்காமல் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று, இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவக் குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

மோசமான உறக்கப் பிரச்னை இருப்பவர்களுக்கு அறிவாற்றல் குறைதல் போன்ற பிரச்னைகள் இருப்பதாகவும், திட்டமிடுதல், வடிவமைத்தல், பிரச்னையை கையாளுதல் போன்றவற்றில் அவர்கள் பின்தங்குகிறார்கள் என்பதும் தெரிய வருவதாகவும் கூறப்படுகிறது.

நல்ல உறக்கம் வேண்டும் என்றால், ஒவ்வொரு நாளும், ஒரே நேரத்தில் உறங்கி, ஒரே நேரத்தில் எழ வேண்டும். மது உள்ளிட்ட போதைப் பொருள் பழக்கத்தைக் கைவிட வேண்டும். காலையில் உடற்பயிற்சி செய்யலாம், மாலையில் தியானம் மற்றும் ஓய்வாக செய்யும் உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒரே நேரத்தில் அளவாக சாப்பிடலாம், எண்ணெய் சேர்ந்த பொருள்களை இரவில் குறைத்துக் கொள்ளலாம். சாப்பிட்டதும் உறங்கச் செல்வதைத் தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com