கணினி, ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துபவரா? மருத்துவர்கள் எச்சரிக்கை!

கணினி, ஸ்மார்ட்போன் பயன்பாட்டினால் கண் பார்வைக் குறைபாடு ஏற்படுவது பற்றி...
vision
பிரதிப் படம்dotcom
Published on
Updated on
2 min read

ரிஷிதா கன்னா

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வேலைகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டதால் கணினி பயன்பாடு அதிகரித்துவிட்டது. கணினியில் வேலை செய்யும் பலருக்கும் உடல் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக கண் பார்வையில் குறைபாடு ஏற்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கணினி, மொபைல்போன்கள் ஆகியவற்றில் இருந்து வெளியாகும் 'நீல ஒளியினால்' பார்வைக்கு குறைபாடு ஏற்படுகிறது. இதனால் நீல ஒளியைத் தடுக்கும் கண்ணாடிகளைப் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இந்நிலையில் கணினி பயன்படுத்துவதால் ஏற்படும் 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்'(Computer vision syndrome) அல்லது 'டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெய்ன்'(digital eye strain) பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது.

குறிப்பாக 25-40 வயதுடையவர்களை, கணினிகள், ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தைச் செலவிடும் குழந்தைகளையும் அதிகம் பாதிக்கிறது.

இது கண் பார்வையில் சிரமம், தலைவலி, உள்ளிட்ட கோளாறுகளுக்கு வழிவகுக்கும். இடைவெளி இல்லாமல் தொடர்ந்து மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது இதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையின் கண் மருத்துவரான டாக்டர் அஷ்வின் சந்தோஷ் ஷெட்டி இதுகுறித்து கூறுகையில், 'டிஜிட்டல் திரையினால் கண் பார்வைக் குறைபாடு அதிகரித்து வருகிறது, கணினி முன் இடைவெளியின்றி தொடர்ந்து அமர்வதால் 25-40 வயதிற்குட்பட்டவர்களில் 25% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரச்னை பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளும் அதிகளவில் எதிர்கொள்கின்றனர்.

ஏனெனில் குழந்தைகளிடம் வெளி விளையாட்டு என்பது குறைந்துவிட்டது, ஆன்லைன் வழி கற்றலினால் குழந்தைகள் அதிகமாக கணினி, ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர்.

டிஜிட்டல் திரைகளின் பயன்பாட்டைக் குறைத்தல், வெளிப்புற செயல்பாடுகளை ஊக்குவித்தல், பார்வையில் பிரச்னை இருந்தால் உடனடியாக மருத்துவமனைகளை அணுகுதல், தேவைப்படும்பட்சத்தில் கண்ணாடிகளை அணிதல் ஆகியவற்றின் மூலமாக பாதிப்பைக் குறைக்கலாம்' என்றார்.

வகைகள்

க்ளீனிகள்ஸ் பிஜிஎஸ் மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர் சுகன்யா மெய்கண்டசிவம் இதன் அறிகுறிகள், வகைகள் குறித்து பேசுகிறார்.

'இதில் மூன்று வகைகள் உள்ளன.

காட்சி அறிகுறிகள் (மங்கலான பார்வை, பார்வைக் கோளாறு, இரட்டை பார்வை),

கண் அறிகுறிகள் (கண்கள் உலர்தல், கண் சிவத்தல்),

வெளிப்புற அறிகுறிகள் (தலைவலி, தோள்பட்டை வலி, கழுத்து மற்றும் முதுகில் அசௌகரியம்).

வீட்டிலிருந்து வேலை செய்வது, ஆன்லைன் வகுப்புகளின் எழுச்சி ஆகியவற்றால் கண் பாதிப்பு அதிகரித்துள்ளது.

ஆன்லைன் செயலி மூலமாக உரையாடல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் குழந்தைகள், இளைஞர்களிடையே கணினி, மொபைல் பயன்பாடு அதிகரிக்கக் காரணம்' என்கிறார்.

தடுக்கும் வழிமுறைகள்

இந்த பாதிப்பைக் குறைக்க, வல்லுநர்கள் 20-20-20 என்ற விதியைப் பரிந்துரைக்கின்றனர். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை குறைந்தது 20 வினாடிகளுக்குப் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

முடிந்தவரை கணினி, மொபைல்போனின் ஒளியை சரி செய்தல் (அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்),

இடைவெளியுடன் டிஜிட்டல் திரைகளை பயன்படுத்துதல் வேண்டும்.

கண்களில் கண்ணீர் வந்தால் வறட்சியைத் தடுக்கலாம், இதற்கு மருத்துவர்களின் அறிவுரைப்படி சொட்டுமருந்துகளைப் பயன்படுத்தலாம்.

மருத்துவர்களின் பரிந்துரைப்படி உங்கள் கண்களுக்கு ஏற்ற கண்ணாடிகளை அணிவது அவசியம். குறிப்பாக கணினியில் பணியாற்றுபவர்கள் கண்ணாடி அணிவது கட்டாயம்.

கண்களில் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக ஒரு கண் மருத்துவரை அணுகுவது அவசியம் என்கின்றனர்.

தமிழில்: எம். முத்துமாரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com