மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

மன அழுத்தத்தைக் குறைப்பது பற்றிய ஆய்வுத் தகவல் ....
Gardening helps to boost mental wellbeing
கோப்புப்படம்ENS
Published on
Updated on
2 min read

தோட்டக்கலையில் நேரத்தைச் செலவிட்டால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

பறவை ஒலி, செடி, கொடிகள், பூக்களுக்கு நடுவே நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கும்போதே நன்றாக இருக்கிறது அல்லவா? அதிலேயே தினமும் சில 10- 20 நிமிடங்கள் செலவிட்டால்...

ஆம், தோட்டக்கலையில் மண்ணைத் தோண்டுதல், செடிகளை நடுதல், நீர் பாய்ச்சுதல், தொடர்ச்சியான பராமரிப்பு என செய்யும்போது உடல் வேலை செய்கிறது. மேலும் இயற்கையுடன் ஒன்றிய வேலையைச் செய்யும்போது அது மன ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் லாங் பீச்சில் உள்ள தோட்டக்கலை பயிற்றுநர் கரேன் ஹேனியின் கூற்றுப்படி, மன நல சிகிச்சை தேவைப்படும் நபருக்கு தோட்டக்கலை ஒரு சிறந்த பயிற்சியாக இருக்கும் என்று கூறுகிறார்.

வாரத்திற்கு ஒரு சில நாள்கள் 20-30 நிமிடங்கள் தோட்டக்கலையில் ஈடுபடுவது மன அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியமான மனநிலையை உயர்த்தும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. அதுமட்டுமின்றி உங்களால் ஒரு தோட்டத்தை உருவாக்க முடியும் என்று தோட்டக்கலை நிபுணரான சாரா தாம்சன் கூறுகிறார்.

இயற்கையுடன் இருப்பது போன்ற ஒரு எளிமையான செயல், மனநிலையை மேம்படுத்தி கவனத்தை மீட்டெடுக்கும், பதற்றம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாம் வைக்கும் செடிகள் வளரும்போது அது நமக்கு பயன்தரும்போது கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் அலாதியானது என்றும் தோட்டக்கலையில் உள்ள ஈடுபாட்டை அது மேலும் அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்.

கொலராடோ-போல்டர் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு இதை உறுதி செய்கிறது.

அங்குள்ள ஆய்வாளர்கள், ஒரு குழுவினருக்கு விதைகள், தாவரங்கள், தோட்டக்கலைக்கான திட்டங்களை வழங்கினர். மற்றொரு குழுவினர் முற்றிலும் 2 ஆண்டுகளுக்கு தோட்டக்கலையைத் தவிர்த்தனர்.

இதில் தோட்டக்கலையில் ஈடுபட்டவர்களுக்கு மன அழுத்தம் முற்றிலும் இல்லாமல் அல்லது குறைவாகவே இருந்தது. அவர்கள் அதிகமாக நார்ச்சத்துள்ள உணவுகளைச்(7%) சாப்பிட பழக்கப்பட்டிருந்தனர். அவை மனச்சோர்வு, உயர் ரத்த அழுத்தம், டைப் 2 நீரிழிவு , புற்றுநோய் உள்ளிட்ட சில உடல் மற்றும் மன நோய்களுக்கான ஆபத்து காரணிகளைக் குறைக்கிறது. அவர்கள் வாரத்திற்கு 42 நிமிடங்கள் அதிகமாக உடல் செயல்பாட்டில் ஈடுபட்டனர்.

இதுபோன்ற பல ஆய்வுகளும் முன்னதாக செய்யப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டில், எக்ஸிடர் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள ராயல் தோட்டக்கலை சங்கம் நடத்திய ஆய்வில் தோட்டக்கலையில் இல்லாதவர்களைவிட தோட்டக்கலையில் ஈடுபட்டவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவாற்றல் அதிகரிப்பு, அந்தந்த தருணங்களில் மகிழ்ச்சியாக இருப்பது என தோட்டக்கலை நிபுணர்கள் தங்கள் வாழ்வைக் கொண்டிருக்கின்றனர்.

சூரிய ஒளியில் இருப்பது செரோடோனின் அளவை அதிகரிக்கும் என்றும் மண்ணுடனான தொடர்பு மனநிலையை மேம்படுத்தும் என்று கூறும் சாரா தாம்சன், உடல் ரீதியாக தோட்டக்கலை வலிமை, நெகிழ்வுத்தன்மை, சமநிலையை மேம்படுத்துகிறது. சமூக ரீதியாக சமூகத்துடன் தொடர்பை வளர்க்கும். அறிவுரீதியாக சிக்கலை தீர்க்கும் தன்மையை வளர்க்கும், படைப்பாற்றலை அதிகரிக்கும் என்கிறார்.

தற்போது மாடித் தோட்டங்கள் அதிகரித்துள்ளதால் தோட்டம் இல்லாதவர்கள், மாடித் தோட்டங்களை முயற்சி செய்யலாம். வீட்டில் சிறிய செடிகளை வைத்து வளர்க்கலாம். உடல் மற்றும் மன நலத்திற்கு நாம் பல்வேறு முயற்சிகள் செய்துவரும் வேளையில், இதுபோன்ற எளிய முயற்சி உங்களுக்கு பெரிதாக பலனளிக்கலாம்.

Summary

Research has shown that spending time gardening can reduce stress.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com