தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிகாரில் தாய்ப் பாலிலும் தில்லியில் நிலத்தடி நீரிலும் யுரேனியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பற்றி மருத்துவர்கள் கருத்து...
கோப்புப்படம்
கோப்புப்படம்ENS
Updated on
2 min read

இந்தியாவின் சில பகுதிகளில் தாய்ப் பாலைத் தொடர்ந்து, நிலத்தடி நீரிலும் யுரேனியத் தாதுப் பொருள் கண்டறியப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது!

பிகார் மாநிலத்தில் சில மாவட்டங்களில் பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியத் தாதுப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கடந்த மாதம் தகவல்கள் வெளியாகின.

இதன் தொடர்ச்சியாகத் தற்போது நாட்டின் தலைநகரான தில்லியில் நிலத்தடி நீர் பரிசோதனையில் நீரில் யுரேனியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் இரு முக்கிய பகுதிகளில் முறையே தாய்ப்பாலில், நீரில் யுரேனியம் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உடலில், குறிப்பாக சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பிகாரில் பாட்னா மகாவீர் புற்றுநோய் மருத்துவமனைக் குழு மற்றும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை குழு இணைந்து மேற்கொண்ட ஓர் ஆய்வில்தான் அங்கு போஜ்பூர், சமஸ்திபூர், பெகுசராய், ககாரியா, கதிஹார், நாளந்தா ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் 17-35 வயதுடைய 40 தாய்மார்களின் தாய்ப்பாலிலும் யுரேனியம் (U238) இருப்பது கண்டறியப்பட்டது. இதன் செறிவு லிட்டருக்கு அதிகபட்சமாக 5.25 மைக்ரோ கிராம் வரை இருந்தது. இதனால் பிகாரில் உள்ள சுமார் 70% குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

தில்லியில் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் பரிசோதனைக்கு எடுத்துக்கொண்ட 83 மாதிரிகளில் 24 மாதிரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட யுரேனியம் அளவு அதிகமாக இருந்துள்ளது.

பாதிப்பு இருக்குமா?

உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய தரநிலைகள் பணியகம் (பிஐஎஸ்) ஒரு லிட்டர் நீரில் 30 மைக்ரோ கிராம் அளவுக்கு யுரேனியம் இருக்கலாம் என்று பரிந்துரைக்கிறது. அந்த வகையில் பிகார் மற்றும் தில்லியில் பதிவான அளவு குறைவுதான் என்கின்றனர் நிபுணர்கள்.

வடமேற்கு இந்தியாவில் நிலத்துக்கு கீழே பாறைகள் உருவாகும்போது ஏற்படும் புவியியல் மாற்றங்களால் யுரேனியம் நிலத்தடி நீரில் கலக்கிறது. நைட்ரேட், புளூரைடு, உப்புத்தன்மை மற்றும் சில உலோகங்கள் நீரில் இருப்பது கண்டறியப்படுகிறது.

நிலத்தடி நீரில் காணப்படும் யுரேனியத்தைப் பொருத்தவரை அதில் உள்ள கதிர்வீச்சைவிட அதன் ரசாயன நச்சுத்தன்மையே மிக முக்கியமானது என்று பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதுபற்றி, மூத்த இரைப்பை குடல் மருத்துவரும் கொச்சின் ஐஎம்ஏ முன்னாள் தலைவருமான டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறுகையில், சுரங்கத் தொழிலாளர்கள் அல்லது பதப்படுத்தும் ஆலைத் தொழிலாளர்கள் போன்ற ஆலைகளில் வேலை செய்வோருக்கு சிறுநீரகப் பாதிப்பு அதிகமாக இருப்பதாகத் தரவுகள் உள்ளதாக கூறுகிறார்.

தற்போது கண்டறியப்பட்டுள்ள நிலத்தடி நீரில் உள்ள யுரேனிய செறிவுகளால் சிறுநீரகப் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அல்லது சுரங்கங்களில் வேலை செய்வோர்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று விளக்கமளிக்கிறார்.

சிறுநீரகம் என்பது உடலில் முதன்மையான உறுப்பு. தற்போது பதிவாகியுள்ள அளவுகளில் கதிர்வீச்சு பாதிப்பு என்பது குறைவானதுதான். ஒருவேளை மிதமான யுரேனியம் கலந்த நீரை அருந்தினால் ரசாயன நச்சுத்தன்மை ஏற்படுமே தவிர கதிர்வீச்சு ஏற்பட வாய்ப்பில்லை. இங்குள்ள அளவில்தான் பல்வேறு நாடுகளிலும் நீரில் யுரேனியம் காணப்படுகிறது என்று டாக்டர் ஜெயதேவன் தெரிவித்தார்.

தற்போது நிலத்தடி நீரில் கண்டறியப்பட்டுள்ள யுரேனியம், பலவீனமான கதிரியக்கத் தன்மை கொண்டது என்கிறார் தில்லியைச் சேர்ந்த டாக்டர் யோகேஷ் குமார்.

டாக்டர் அதுல் காகர் இதுபற்றிக் கூறுகையில், "சாதாரணமாக யுரேனியம் உடலுக்குள் நீர், உணவு, மாசுள்ள காற்றை சுவாசிக்கும்போது, பாதிப்புற்ற சருமங்களின் மூலமாக உடலுக்குள் செல்கிறது. யுரேனியம் உடலுக்குள் சென்றால் சிறுநீரகத்தில் சென்று தங்கிவிடும். இது முதலில் சிறுநீரகக் குழாய்களைச் சேதப்படுகிறது, அதிகபட்சமாக சிறுநீரக செயலிழப்பு வரை கொண்டு செல்கிறது.

யுரேனியத்தில் சிறிய அளவு, சில நேரங்களில் எலும்புகளில் தங்கி விடுகிறது. இதனால் கால்சியம் அளவு குறைந்து கல்லீரல், நுரையீரல், நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதால் மறதி, பதற்றம், தூக்கத்தில் பிரச்னைகள் உருவாகின்றன. மேலும் கர்ப்பிணிகளில் கருவில் உள்ள குழந்தை எடை குறைவு, குறைப் பிரசவம் நிகழலாம். யுரேனியம் அளவு மிகவும் அதிகமாக இருந்தால் மட்டுமே இதுபோன்ற விளைவுகள் இருக்கும்" என்றார்.

பிகாரில் கண்டறியப்பட்ட அளவு, உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 6 மடங்கு குறைவானதுதான். வயிற்றில் உள்ள கருவும் குறைவாகவே யுரேனியத்தை எடுத்துக்கொள்வதால் இதனால் பாதிப்புகள் மிகவும் குறைவுதான் என்று டாக்டர் கவிதா கூறுகிறார். நீரில் உள்ள யுரேனியம் அளவு மறைமுகமாக சிறுநீரக செயல்பாடுகளைப் பாதிக்கும் என்றாலும் பிகார், தில்லியில் கிடைத்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை.

ஏற்கெனவே சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்போர், குறைந்த எடை கொண்டவர்கள், அதிகமாக யுரேனியம் உள்ள நீரை எடுக்கும்போது பாதிப்புகள் வரலாம். எதிர்பாராத வாந்தி , உடல் எடை குறைவு, சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் கவனிப்பது அவசியம்.

கர்ப்பிணிகள், குழந்தைகள் ஏற்கெனவே சிறுநீரக பிரச்னைகள் உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும். கருவில் உள்ள குழந்தையிலும் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சிறுநீரக பிரச்னை இல்லாத பாலூட்டும் தாய்மார்களுக்கு பெரிதாக பிரச்னை இருக்காது.

தற்போது யுரேனியம் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் குறிப்பாக குழந்தைகளுக்கு பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். வீடுகளில் தலைகீழ் சவ்வூடுபரவல் வடிகட்டிகள்(reverse osmosis filters) போன்றவற்றை பயன்படுத்தலாம். இது 90% வரை நீரில் உள்ள யுரேனியத்தை நீக்குகிறது. தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டறியப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை நிறுத்தக்கூடாது, அது மேலும் குழந்தைகளுக்கு உடல்ரீதியான குறைபாடுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

Summary

Uranium in ground water and mothers breast milk: what is the risk behind this

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com