இந்த 7 தவறான பழக்கங்கள் உங்கள் மூளையைப் பாதிக்கும்!

மூளையைப் பாதிக்கும் சில தவறான பழக்கவழக்கங்கள் பற்றி...
brain
கோப்புப் படம்ANI
Published on
Updated on
2 min read

மூளை, உடலில் அனைத்து செயல்பாடுகளுக்கும் அத்தியாவசியமானது. எண்ணங்கள், உணர்ச்சிகள், இயக்கங்கள், புலன்கள் என அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.

ஆனால் மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறையால் மூளையின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது.

அந்தவகையில், மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும் சில பழக்கங்கள்....

தூக்கமின்மை:

போதிய தூக்கம் இல்லாதது மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கும். டிமென்ஷியா எனும் மறதி நோயை ஏற்படுத்துகிறது. நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் என மூளையின் அத்தியாவசிய செயல்பாடுகளை சீர்குலைக்கிறது. எனவே நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியம். அதிலும் இரவில்தான் தூங்க வேண்டும். தூக்கத்தில் பிரச்னை இருந்தால் ஆல்கஹால், காபின் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

உணவு முறை:

கற்றல், நினைவுத்திறன் ஆகியவற்றுக்கு முக்கியமானது மூளை. ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவதும் மூளையின் செயல்பாட்டைக் குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் அறிவாற்றலில் பிரச்னையை ஏற்படுத்தும்.

பீட்ஸா, பர்கர், பிரென்ச் பிரைஸ், செயற்கை குளிர் பானங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து சத்தான காய்கறிகள், பழங்கள், நட்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். மறதியைக் குறைக்கிறது.

அதேபோல தேவைக்கு அதிகமாக உணவைச் சாப்பிட்டாலும் மூளையின் சிந்திக்கும் திறன் குறையும். அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பு அதனால் இதய நோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

அதிக இரைச்சல்:

அதிகப்படியான இரைச்சல் மூளையுடன் தொடர்புடையது. அதிகப்படியான இரைச்சலைக் கேட்பது உங்கள் காதுகளை மட்டுமல்ல, மூளையையும் பாதிக்கும். ஹெட்போனில் முழுமையான ஒலியுடன் அரை மணி நேரம் கேட்டாலே காது கேட்கும் தன்மையை இழந்துவிடும். வயதானவர்களிடையே காது கேட்கும் தன்மை குறைவது மூளையில் பாதிப்பு இருப்பதைக் குறிக்கும். அதனால் 60%-க்கும் அதிகமான ஒலியைக் கேட்கக் கூடாது. அதேபோல பல மணி நேரங்கள் தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

உடல் இயக்கம்:

உடல் செயல்பாடு இல்லாதது மூளைக்கு ரத்த ஓட்டத்தை குறைக்கிறது, அறிவாற்றல் செயல்பாட்டை பாதிக்கிறது. மேலும் நீரிழிவு நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், மறதி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தினமும் குறைந்த அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு அரை மணி நேரம் அல்லது ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

புகைப்பழக்கம், மது அருந்துதல்:

புகைப்பிடித்தலும் நினைவாற்றலை கடுமையாகக் குறைக்கும். மறதி, இதய நோய், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

அதேபோல மது அருந்துவதால் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் ரத்த ஓட்டத்தை குறைக்கும்.

மன அழுத்தம்:

நீண்ட நாள்களாக மன அழுத்தமாக இருப்பது மூளையின் ஹிப்போகேம்பஸை சேதப்படுத்தும். இது நினைவாற்றல், அறிவாற்றல் திறன்களைப் பாதிக்கும்.

தனிமை:

நீண்ட நாள்கள் தனிமையில் இருப்பது, அதிக நேரம் இருட்டில் இருப்பது உங்கள் மூளையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

செல்போன், மடிக்கணினி குறிப்பாக பொழுதுபோக்குக்கு சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துவது தூக்கத்தைக் கெடுக்கும், மூளையின் செயல்திறனை கடுமையாகப் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com