உட்கார்ந்தே வேலை செய்பவரா நீங்கள்? கல்லீரல் கொழுப்பு நோய் வரலாம்! - ஏன்? எப்படி?

கல்லீரல் கொழுப்பு நோய் எப்படி ஏற்படுகிறது? தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனைகள் என்னென்ன?
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
3 min read

தற்போது இளைஞர்களிடையே அதிகரித்து வரும் கல்லீரல் கொழுப்பு நோய் எப்படி ஏற்படுகிறது? தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனைகள் என்னென்ன?

கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்வதே கல்லீரல் கொழுப்பு நோய் (fatty liver disease). கல்லீரலில் குறிப்பிட்ட அளவைவிட அதிக கொழுப்பு சேரும்போது அது வீக்கமடைகிறது அல்லது சேதமடைகிறது. இதில் ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய்(NAFLD), ஆல்கஹால் கல்லீரல் கொழுப்பு நோய் என இரு பிரிவுகள் உள்ளன.

இதில் அதிக அளவு மது அருந்துவதால் ஆல்கஹால் கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படுகிறது. உடல் பருமன், நீரிழிவு நோய் போன்ற காரணங்களால் கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்வது 'ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய்' எனப்படுகிறது.

ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவ் உடனான கலந்துரையாடலில் தில்லி ஆகாஷ் ஹெல்த்கேர் மருத்துவமனையின் கல்லீரல் - இரைப்பை குடல் நோய் அறுவை சிகிச்சை மைய இயக்குநர் டாக்டர் அங்கூர் கார்க், இந்த கல்லீரல் கொழுப்பு நோய் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய், குறிப்பாக இளம்வயதினரிடையே எவ்வாறு பரவுகிறது?

இந்தியாவில் குறிப்பாக இளைஞர்களிடையே இந்த கல்லீரல் கொழுப்பு நோய் அதிகம் பரவி வருகிறது. உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்குத்தான் அதிகம் ஏற்படுகிறது. முன்னதாக வயதானவர்களுக்குத்தான் அதிகம் ஏற்பட்ட இந்த நோய், தற்போது 20 முதல் 30 வயதுடையோரை அதிகம் பாதிக்கிறது. 'நேச்சர்' இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், ஐடிஊழியர்களில் (30- 40 வயது) 84% பேர் 'ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு' நோயால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலப்போக்கில் இது எவ்வாறு மாறும்? அமைதியான பொது சுகாதாரப் பிரச்னையாக ஏன் உள்ளது?

இது பெரும்பாலும் அமைதியாக உருவாகி, ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பு அல்லது சேதம் ஏற்படும் வரை வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டாது. கல்லீரலில் அதிகமாக கொழுப்பு சேரும்போது பாதிப்பு தொடங்குகிறது. ஆனால் கல்லீரல் வழக்கம்போல செயல்படுவதால் அறிகுறிகள் ஏதும் இல்லாததால் யாருக்கும் இதன் பாதிப்பு தெரிவதில்லை.

இந்த கொழுப்பு சேரும்போது கல்லீரலில் வீக்கம் மற்றும் செல்களில் காயத்தை ஏற்படுத்தினால் பாதிப்பு இன்னும் தீவிரமாகும். இது ஆல்கஹால் அல்லாத ஸ்டீட்டோஹெபடைடிஸ், ஃபைப்ரோஸிஸ், சிரோசிஸ், கல்லீரல் புற்றுநோயாகக்கூட மாற வாய்ப்புள்ளது. மேலும் இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இதய பாதிப்புகளுக்கான ஆபத்து அதிகம். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், முன்பாக முதியவர்களிடம் அதிகம் காணப்பட்ட இந்த நோய், தற்போது இளம்வயதினரிடமும் உடல் பருமன் போன்ற ஆபத்துக் காரணிகள் இல்லாதவர்களிடமும்கூட அதிகம் காணப்படுகிறது. அதனால் இந்த நோய் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

ஆபத்து காரணிகள் இல்லாத நபர்களை இது எவ்வாறு பாதிக்கிறது?

உடல் பருமன், நீரிழிவு நோய் ஆகியவை கல்லீரல் கொழுப்பு நோயின் முக்கிய ஆபத்துக் காரணிகளாக இருக்கின்றன. எனினும் உடல் பருமன், நீரிழிவு நோய் இல்லாதவர்களிடம் மரபணு காரணங்கள், இன்சுலின் எதிர்ப்பு, வயிறு, குடல், கல்லீரலில் கொழுப்பு சேர்வதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

தனிப்பட்ட நபர்களை இந்த நோய் எவ்வாறு பாதிக்கிறது? ஆரம்ப அறிகுறிகள் என்ன?

பெரும்பாலானோர் பல ஆண்டுகளாக நோய் பாதிப்பு இருப்பது தெரியாமலேயே இருக்கின்றனர். எனினும் தொடர்ச்சியான சோர்வு, பலவீனம் இதன் முதல் அறிகுறியாகும்.

சிலருக்கு கல்லீரல் இருக்கும் பகுதியான வலது பக்க மேல் வயிற்றில் அசௌகரியம் அல்லது மந்தமான வலி இருக்கலாம். அடுத்த கட்டங்களில் எடை குறைவது, குமட்டல், பசியின்மை ஏற்படலாம்.

ENS

ஆரோக்கியமாக இருப்பதாக நினைப்பவர்களிடம் இந்த நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, உடல் செயல்பாடு இல்லாதது ஆகியவை உடலின் இயற்கையான வளர்சிதை மாற்றத்தை சீர்குலைக்கிறது. இதுவே கல்லீரலில் கொழுப்பு சேர்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. உடல் பருமன் இல்லாதவர்களிடம்கூட இது தாக்கத்தை ஏற்படுத்தி உடலில் இன்சுலின் சுரப்பில் பாதிப்பை உண்டாக்குகிறது. அமர்ந்தே வேலை செய்பவர்கள், கணினி முன் அதிக நேரம் இருப்பவர்களுக்கு, அதிக கலோரிகள் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இதன் ஆபத்து அதிகம். உடனடியாக உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி? தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனைகள் என்னென்ன?

வழக்கமான கல்லீரல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக உடல் பருமன், நீரிழிவு நோய், உடலில் அதிக கொழுப்பு கொண்டவர்கள் தொடர்ந்து பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று நினைத்தாலும் கல்லீரல் கொழுப்பு நோயைக் கண்டறிய தொடர் பரிசோதனை அவசியம்.

மேலும் உடற்பயிற்சி உள்பட நாள்தோறும் உடல் செயல்பாடு தேவை. புரதம், நார்ச்சத்து, முழு தானியங்கள் என சத்தான உணவுகளை உட்கொள்வது அவசியம். மேலும் இந்தியாவில் இந்த கல்லீரல் கொழுப்பு நோய் பரவல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இதுதொடர்பான வலுவான ஆய்வுகள் மற்றும் தரவு சேகரிப்பு அவசியம் என்றும் கூறுகிறார் டாக்டர் அங்கூர் கார்க்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com