

ஸ்மார்ட்போனை 3 நாள்கள் பயன்படுத்தாமல் இருப்பதால் ஏற்படும் நேர்மறை விளைவுகள் பற்றி சமீபத்தில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் 70 கோடிக்கும் அதிகமானோர் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதாகவும் சுமார் 85% குடும்பங்களில் ஒருவராவது ஸ்மார்ட்போன் வைத்திருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த காலகட்டத்தில் அனைத்து தரப்பினருக்கும் மிகப்பெரிய பொழுதுபோக்கு என்றால் அது ஸ்மார்ட்போன் பயன்பாடுதான். தொடர்ந்து பல மணி நேரம் பயன்படுத்துவதாலும் குறிப்பாக இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு பயன்படுத்துவதால் உடல் மற்றும் மன ரீதியாக பல விளைவுகளை ஏற்படுத்துவதாக தொடர்ந்து ஆய்வுகள் கூறி வருகின்றன.
இந்நிலையில் தொடர்ந்து 3 நாள்களுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பது மூளையின் செயல்பாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
ஸ்மார்ட்போன் பயன்பாட்டை வெறும் 72 மணி நேரத்திற்கு ஒதுக்கிவைப்பதன் மூலமாக உங்கள் மூளை மீண்டும் புதிதாக செயல்படத் தொடங்கும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
3 நாள்கள் போன் பயன்படுத்தாமல் இருப்பது கடினம்தான். ஆனால் முடிந்தவரை சில மணி நேரங்கள்கூட போன் பயன்பாட்டை ஒதுக்கிவைத்தால் மூளையின் செயல்பாட்டில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜெர்மனியில் உள்ள ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகம் மற்றும் கொலோன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 18 முதல் 30 வயதுடைய 25 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் 72 மணி நேரம் ஸ்மார்ட்போனை உபயோகிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். வேலை மற்றும் பயனுள்ள வேலைகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். குடும்பத்தினரை தொடர்புகொள்ள என அவசியமென்றால் மட்டும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சோதனைக்கு முன்பும் பின்பும் இளைஞர்களின் மூளை செயல்பாடுகள் மற்றும் நரம்பியல் செயல்பாடுகள் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதபோது அவர்களது மூளையின் செயல்பாட்டில் பெரிதளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்கேன் பரிசோதனைகளில், அந்த இளைஞர்களின் மனநிலை, உணர்ச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவும் டோபமைன் மற்றும் செரோடோனின் ஹார்மோன் செயல்பாடுகள் மேம்பட்டன. அதாவது ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் மனநலம், தூக்கம் தொடர்பான பிரச்னைகள் படிப்படியாக சரிபடுத்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் குறையும் , பயம் மற்றும் பதற்றம் குறையும், நினைவுத்திறன் அதிகரிக்கும், கவனச் சிதறல் படிப்படியாக குறையும், நல்ல தூக்கம் கிடைக்கும் என்கிறது இந்த ஆய்வு.
ஒரு போதைப்பொருள் பயன்பாட்டைக் கைவிடுவது எப்படியோ, அப்படிதான் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைப்பதும் நமது உடல் செயல்பாடுகளுக்கு பலனளிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
டிஜிட்டல் சாதனங்கள் நமது மூளை, நரம்பியல் செயல்பாடுகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்த ஆய்வு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.