

சிலருக்கு சாப்பிடாமலேயே வயிறு நிரம்பியது போன்ற உணர்வு இருக்கும். வயிறு வீங்கியிருப்பது போலத் தோன்றும். ஒரு சிலருக்கு இது லேசாகவும் சிலருக்கு அதிகமாகவும் இந்த உணர்வு இருக்கலாம்.
இதற்கு காரணம் வயிற்றில் இறுக்கம், அழுத்தம், செரிமானப் பகுதியில் அல்லது குடலில் வாயு அடைந்திருப்பது. முன்பு சாப்பிட்ட உணவுகள், ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தமும் இதற்கு காரணமாக இருக்கலாம். அதிகமாக கார்போஹைடிரேட் எடுத்துக்கொண்டதனால் இவ்வாறு இருக்கலாம்.
சாப்பிட்டவுடன் வயிறு வீங்கியினால் அது செரிமானக் கோளாறாக இருக்கலாம்.
இதனால் வயிறு நிரம்பியிருப்பது போன்ற உணர்வு, மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள் இருக்கும்.
இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
வயிறு வீக்கம் போன்ற உணர்வு, செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் மெதுவாகச் சாப்பிட வேண்டும்.
உடலில் வாயு சேரும் சில உணவுகளைத் தவிர்த்து நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
வழக்கமான உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தைக் குறைப்பது உதவும்.
இதற்கு முன்னதாக நீங்கள் வேகமாக சாப்பிட்டது மற்றும் சில உணவுகள் செரிமானம் ஆகாமலும் இருக்கலாம். எனவே, சில வீட்டு உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதன் மூலமாக வயிற்றுப் பிரச்னைகளை குறிப்பாக செரிமானத்தைச் சரிசெய்ய முடியும்.
சரிசெய்யும் உணவுகள்
இஞ்சி செரிமானத்தை எளிதாக்குகிறது. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு இஞ்சியைத் துருவி போட்டு சிறிது நேரம் கழித்து குடிக்கலாம்.
வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்து கொண்டது. இது வயிறு வீக்கத்திற்கு காரணமான வயிற்றில் உள்ள கூடுதல் சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது. வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிடலாம். தயிருடன் சேர்த்து சாலட் செய்தும் சாப்பிடலாம்.
பப்பாளியில் பப்பைன் என்ற செரிமான நொதி உள்ளது. இதுவும் செரிமானத்தைத் துரிதப்படுத்தும்.
சீரகம் அல்லது பெருஞ்சீரகம் சாப்பிடலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தலாம்.
அன்னாசி பழம் புரதங்களை ஜீரணிக்கவும் குடலில் வாயு மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
புதினா செரிமானப் பிரச்னைகளுக்கு விரைந்து நிவாரணம் அளிக்கக்கூடியது. புதினா டீ அல்லது தண்ணீரில் புதினாவை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். புதினாவை துவையல்/சட்னி செய்தும் சாப்பிடலாம்.
உணவில் அல்லது சாலட்டில் தயிர் சேர்ப்பதும் செரிமானத்திற்கு உதவும்.
காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் எலுமிச்சை நீர் விட்டு பருகினால் உடலுக்கு நல்லது. எந்தவித செரிமானக் கோளாறுகளும் வராது.
வயிற்று உப்புசத்துக்கு பொட்டாசியம் நல்ல தீர்வாகும், அந்தவகையில் வாழைப்பழம் எளிதில் உதவக்கூடியவை. நன்றாக பழுத்த வாழைப்பழங்களைச் சாப்பிடுங்கள்.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.