காது கேட்கவில்லையா? அலட்சியம் வேண்டாம்! உங்கள் மூளையைப் பாதிக்கலாம்!!

காது கேளாமைக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு பற்றி...
ear problems
கோப்புப்படம்ENS
Updated on
2 min read

காது கேளாமல் போவது வயதானவர்களுக்கு ஏற்படும் ஒரு சாதாரண பிரச்னை என்று நினைக்க வேண்டாம். அது நினைவாற்றலில், மூளையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

காது நன்றாக கேட்பவர்களைவிட காது கேளாதவர்களுக்கு டிமென்ஷியா எனும் மறதி நோய் வருவதற்கான ஆபத்து இருப்பதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன.

மூளையை எவ்வாறு பாதிக்கிறது?

காது கேளாதவர்களுக்கு வார்த்தைகளை புரிந்துகொள்வதற்கு மூளை அதிகமாக செயல்பட வேண்டியிருக்கும். இதனால்தான் நினைவாற்றலிலும் பிரச்னை ஏற்படுகிறது. இதுவே காலப்போக்கில் மூளையில் நினைவாற்றல், கற்றல், சிந்தித்தல் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.

காதுகளில் இருந்து மூளை சமிக்ஞை அல்லது உள்ளீட்டைப் பெறாதபோது மூளையில் அதற்கான பதிலை வழங்கக் காத்திருக்கும் பகுதிகள் சுருங்கலாம் என்று கூறப்படுகிறது.

வயதான காது கேளாதவர்களுக்கு 3ல் ஒருவருக்கு மறதி ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவே காது கேட்கும் கருவிகளைப் பயன்படுத்துவோருக்கு மறதி ஏற்படுவது குறைவதாகவும் நினைவாற்றல் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இளம் அல்லது நடுத்தர வயதில் காது கேட்கும் தன்மையை இழந்தால் உடனடியாக அது சரிசெய்வதன் மூலமாக எதிர்காலத்தில் ஏற்படும் மறதி, மூளை தொடர்பான பாதிப்புகளைக் குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகில் 3 நொடிக்கு ஒருவர் டிமென்ஷியாவால் பாதிக்கப்படுகிறார். 2019ல் 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் டிமென்ஷியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2036ல் இது 1.7 கோடியாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வயதானவர்களில் காது கேளாதவர்களில் 61% பேருக்கு டிமென்ஷியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2020ல் லான்செட் இதழில் இதுகுறித்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

செய்ய வேண்டியது..

50 வயதுக்கு மேல் உள்ளவர்கள், காது கேட்கும் திறனை 1 - 3 வருடங்களுக்கு ஒருமுறை சோதித்துக்கொள்ள வேண்டும்.

காது கேட்கும் திறன் கொஞ்சம் குறைந்தாலே அதை அலட்சியம் செய்ய வேண்டாம். சிறிய மாற்றங்கள்கூட பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

தேவைப்பட்டால் காது கேட்கும் கருவிகளைப் பயன்படுத்தலாம், அது உங்கள் நினைவாற்றலை, மூளையைப் பாதுகாக்கும்.

ஒரு காது கேட்கவில்லை என்றாலும் அதனைச் சரிசெய்ய சிகிச்சை எடுங்கள் அல்லது காது கேட்கும் கருவிகளைப் பயன்படுத்துங்கள்.

காது கேளாமல் போனால் சோர்ந்துவிடாதீர்கள். முன்பைவிட சுறுசுறுப்பாக இருங்கள். தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டாம்.

காது நன்றாக கேட்பவர்கள்கூட இரைச்சலான பகுதிகளுக்குச் செல்லும்போது காதில் பஞ்சு அல்லது ஹெட்போன் கொண்டு அடைத்துக்கொள்ளுங்கள். ஒலி மாசிலிருந்து தள்ளி இருங்கள்.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை இருந்தால் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

லேசான உடற்பயிற்சி, சத்தான உணவு என உங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

Summary

Hearing loss: Ears are connected with brain health

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com