ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே- 6!

குயில் விரும்பி உண்ணும் கனிகள் மாங்கனியும், நெல்லிக்கனியும்தான். பறவைகளின் உணவுப் பழக்கம் என்ற நூலில் கூட இது குறிப்பிடப்பட்டிருக்கிறது'' என்றேன்.
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே- 6!

"குயில் என்ன கனிகளையா தின்னும்? கனிதேடும் கிளியினமே என்ற வரிகளை மாற்று'' என்று இயக்குநர் கே.சங்கர் கூறினார். உடனே நான், "பலபேர் குயில் கனி தின்னாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது தவறு. உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியரான திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். அதுபோல் குயிலுக்கும் மாங்கனி என்றால் மிகவும் பிடிக்கும். குயில் விரும்பி உண்ணும் கனிகள் மாங்கனியும், நெல்லிக்கனியும்தான். பறவைகளின் உணவுப் பழக்கம் என்ற நூலில் கூட இது குறிப்பிடப்பட்டிருக்கிறது'' என்றேன்.

"கனிகள் இல்லாத நேரத்தில் எதைத் தின்னும்?'' என்று மடக்கினார். ""மாங்கொழுந்தைத் தின்னும்'' என்றேன். அவர் மலர்ச்சியை முகத்தில் காட்டினார்.
இப்படியெல்லாம் கேட்டால் இவன் என்ன பதில் சொல்வான் என்பதை அறிந்து கொள்ள சில நேரங்களில் இப்படிக் கேள்விக் கொக்கியைப் போட்டு இழுக்கப் பார்ப்பார். சாமர்த்தியமாகப் பதிலுரைத்தால் தட்டிக் கொடுப்பார். இல்லையென்றால் நீ லாயக்கில்லை என்று பட்டென்று சொல்லிவிடுவார். நான் எழுதிப் பிரபலமான பாடல்களில் ஒன்றிரண்டு பாடல்களுக்கு இவரே முதலடியை எடுத்துக் கொடுத்திருக்கிறார். நல்ல தமிழார்வம் உள்ள இயக்குநர்.

புலமைப்பித்தனை முதன்முதல் பாடலாசிரியராக அறிமுகப்படுத்திய இயக்குநரே இவர்தான். பாடல் ஒலிப்பதிவின் போதுதான் எம்.ஜி.ஆரின் அறிமுகம் புலமைப்பித்தனுக்குக் கிடைத்தது. "குடியிருந்த கோயில்' என்ற படத்தில் இடம்பெற்ற "நான் யார்... நீ யார்?' என்ற பாடல்தான் அது.

பாடல்களுக்கான காட்சியைப் படமாக்குவதில் சிறப்புக்குரிய இயக்குநர்களில் கே. சங்கர் குறிப்பிடத்தக்கவர். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மறைந்துவிட்டார்.
இவர் இயக்கும் படங்களில் பாடல்கள் எழுதுவதென்றால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வேடிக்கை விளையாட்டாகப் பேசிக் கொண்டே எங்களிடம் வேலை வாங்கிவிடுவார். இவர் இயக்கிய பல படங்களுக்கு நான் பாடல் எழுதியிருக்கிறேன். அதில் எம்.ஜி.ஆர் நடித்த "இன்று போல் என்றும் வாழ்க' என்றொரு படம். அதில் இரண்டு பாடல்கள் எழுதினேன்.

நாகரிகம் என்ற பெயரில் பண்பாட்டைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பாடுவதுபோல ஒரு காட்சி.
பாதை மாறிப் போனவரே
பயணம் எங்கே சொல்லுங்கள்
போதை மீறிப் போனவரே
புத்தியை மாற்றிக் கொள்ளுங்கள்
என்றொரு பல்லவி எழுதி அதற்கு டியூன் பண்ணினோம். எம்.எஸ்.

விசுவநாதனைப் பார்க்க வந்த டைரக்டர் ஸ்ரீதரிடம் காட்சியைச்சொல்லி இந்தப் பல்லவியைச் சொல்லி பாடிக் காட்டினார் எம்.எஸ்.விசுவநாதன். காட்சிக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று பாராட்டினார் அவர்.

அதன்பின் வேறு இரண்டு பல்லவிகள் எழுதி டியூன் போட்டு எம்.ஜி.ஆரிடம் காட்டினோம். ""பாதை மாறிப் போனவரே என்று சொல்லக்கூடாது. அது அறச்சொல். நான் பாடுவதில் அப்படிப்பட்ட வார்த்தை வரக்கூடாது. கண்ணதாசன் அறச் சொல் விழாமல் எழுதுவார். சோகப் பாடலில் கூட அமங்கலமான வார்த்தை அவரிடம் வராது. அதுபோல் நீ எழுத வேண்டும். இதில் இன்னொரு பல்லவி நன்றாக இருக்கிறது. ஆனால் அது எனக்கு நிறைவாக இல்லை. வேறு எழுது'' என்றார்.

மறுநாள் வேறு சில பல்லவிகள் எழுதி டியூன் போட்டோம். அதில் ஒன்றை மிகவும் நன்றாக இருக்கிறது என்று தேர்ந்தெடுத்தார்.
எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்த அந்தப் பாடல்,
அன்புக்கு நானடிமை - தமிழ்ப்
பண்புக்கு நானடிமை - நல்ல
கொள்கைக்கு நானடிமை - தொண்டர்
கூட்டத்தில் நானடிமை
- பல்லவியை எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுத்ததால் எம்.எஸ்.வி. போட்ட சரணத்திற்கான மெட்டிற்குப் பாடலை எழுதி வாருங்கள் காலையில் ரிக்கார்டிங் என்று இயக்குநர் கே.சங்கர் சொல்லிவிட்டார்.

நானும் இரவோடு இரவாக சரணத்தை எழுதி காலையில் வாகினி ஸ்டுடியோவில் இருந்த எம்.எஸ்.வியிடம் காட்டினேன். ""மெட்டுக்குச் சரியாக இருக்கிறது எம்.ஜி.ஆரிடம் காட்டி ஓகே வாங்கி வாருங்கள்'' என்றார்.

அப்போது ஏவி.எம். படப்பிடிப்பு நிலையத்தில் ஒரு படத்திற்கான படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தார். அவரிடம் காட்டிய போது ""சரணம் நான் நினைத்தபடி சரியாக அமையவில்லை. வேறு எழுதிக் கொண்டு வா'' என்றார். மறுபடி வாகினி ஸ்டுடியோ வந்து அண்ணன் விஸ்வநாதன் (ஏ.சி.) அறையில் இருந்து எழுதினேன்.

எப்போதும் ஒரே இடத்தில் இருந்து சிந்தித்தால் எனக்குச் சிந்தனை வராது. பெரும்பாலும் நடந்து கொண்டே யோசிப்பேன். இல்லையென்றால் வீட்டிற்கு வெளியே அல்லது மாடியில் சுருட்டுப் பிடித்தபடியே யோசிப்பேன். நான் எழுதிய பெரும்பாலான பாடல்கள் இப்படித்தான்.

மொழி மாற்றுப் படத்திற்கு எழுதும்போது மட்டும் நான்கு மணி நேரம் ஆனாலும் ஒரே இடத்தில் இருந்துதான் பாட்டெழுதுவேன். நடிக நடிகையரின் வாயசைப்புக்கு ஏற்றாற்போல் அதே நேரத்தில் அந்தக் காட்சிக்கும் தகுந்தாற்போல் எழுதவேண்டுமல்லவா? அதனால் ஒரே இடத்தில் இருந்து டேப் ரிக்கார்டரைப் போட்டு எழுதிக் கொண்டிருப்பேன்.

அண்ணன் விஸ்வநாதனின் கம்போசிங் அறை ஏ.சி. அறை. அதனால் எனக்கும் சிந்தனை வரவில்லை. அதனால் அறைக்கு வெளியே வந்து அங்கு வளர்ந்திருந்த சவுக்கு மரக்கன்றுகளில் ஒன்றைப் பிடித்தபடி யோசித்தேன். எதுவும் தோன்றவில்லை. பிறகு இன்னொரு சவுக்குக் கன்றைப் பிடித்தபடி யோசித்துக் கொண்டிருந்தேன்.
(இன்னும் தவழும்)

பாராட்டு!
இந்தத் தொடரை நான் எழுதத் தொடங்கியபோது முதல் தொடரைப் படித்துவிட்டு முதலில் பாராட்டிய நண்பர் திருவில்லிப்புத்தூர் கண்ணன். இவர் பத்திரிகையாளர். ஆண்டாள் கோயில் அரையர் அனைவரும் பாராட்டியதாகக் கூறினார்.

அடுத்து மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் பாராட்டினார். மதுரை ஆதீனமும் நானும் ஆரம்பத்தில் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர்கள். நான் முரசொலியில் பணியாற்றிய போது அவர் அன்றைய அமைச்சர் மாதவன் நடத்திய தமிழ்முரசு பத்திரிகையில் பணியாற்றினார்.

நாங்கள் இருவரும் மாலைநேரத்தில் சந்தித்துக் கொண்டால் ஆழ்வார் பேட்டைப் பகுதியில் இருக்கும் ஓட்டலில் காபி சாப்பிடுவது வழக்கம்.

மதுரை ஆதீனம் எம்.ஏ. தத்துவம் படித்தவர். அவர் ஆதீனம் ஆனபோது அவரைவிட என்னைப் போன்றவர்கள்தாம் அதிகம் மகிழ்ச்சியடைந்தோம்.

"தினமணி, அறிவாளிகளும் இலக்கியவாதிகளும் விரும்பிப் படிக்கக் கூடிய செய்திப் பத்திரிகை. அதில் உங்கள் தொடர் வருவது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. சினிமா, இலக்கியம், அரசியல் இம்மூன்றிலும் தொடர்புடையவர் நீங்கள். மற்றவர்களுக்குத் தெரியாத விஷயங்களும் உங்களுக்குத் தெரியும். ஆகவே தொடர்ந்து எழுதுங்கள் நாங்கள் தொடர்ந்து படிக்கிறோம்' என்றார்.

காற்றில் விதைத்த கருத்து என்ற நான் எழுதிய புத்தகத்திற்கு 2006-ஆம் ஆண்டில் தினத்தந்தி ஆதித்தனார் விருது கிடைப்பதற்கு மதுரை ஆதீனமும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும்தான் காரணம். அதையும் இந்த நேரத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அதுபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சிவகங்கை நகராட்சித் தலைவருமான இராஜசேகரன் இரவு பத்து மணிக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.

நான் மிகவும் மதிக்கக் கூடிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான லேனா தமிழ்வாணனும் குறிப்பிட்ட சில வரிகளைச் சொல்லிப் பாராட்டினார். இதுபோல் அன்றைக்கு 120 பேர் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்களுக்கெல்லாம் என் நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com