பனாரஸ் பட்டுக் கைத்தறிப் புடவைகள்!

பனாரஸ் நெசவுத் தொழில் நுட்பத்தில் ஒரு புடவை தயாராக குறைந்த பட்சம் 15 நாட்கள் முதல் 1 முழு மாதம் தேவைப்படும், அதிலும் ஜரிகை வேலைப்பாடுகள் மிகுந்த கலை நயமிக்க புடவைகள் வேண்டுமெனில் 3 மாதங்கள் வரையிலான  
பனாரஸ் பட்டுக் கைத்தறிப் புடவைகள்!

'காசிப்பட்டு' என்ற பெயரில் தொன்று தொட்டு  தென்னிந்தியர்களுக்கு நன்கு அறிமுகமானவை தான் பனாரஸ் அல்லது பெனாரஸ் பட்டுப்புடவைகள்  . காசி மாநகரம் வேத காலத்திலும், வரலாற்றுக்காலத்திலும் வாரணாசி என்று  வழங்கி வந்தது. வாரணாசியில்  உற்பத்தியாகி இந்தியா முழுவதும் பிரபல்யமான இந்தப் பட்டுப் புடவைகள் பிற இந்திய பகுதிகளில் நெசவு செய்யப்படும் பட்டுப்புடவைகளைக் காட்டிலும் சற்று அதிகமான எடை கொண்டவை, இந்த அதிக எடைக்கு காரணம் இந்த வகைப் புடவைகளில் பிரத்யேகமாகச் செய்யப்படும் நுட்பமான ’புரோகேட் ஜரிகை’ போன்றகலைநயமிக்க வேலைப்பாடுகள் தான். இந்த வகைப் பட்டுப் புடவைகளில் சிறப்புறச் செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகை நூல் வேலைப்பாடுகளுக்காக இவை பெரிதும் விரும்பப்பட்டன.

பனாரஸ் புடவைகளின் தோற்றம்:

பனாரஸின் புராதனத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் ரிக் வேத காலத்துக்குச் சென்று ராமாயணம், மகாபாரத காலத்த்தையெல்லாம் அலசிப் பின்னர் புத்தர் வாழ்ந்த வரலாற்றுக்காலத்துக்கு வர வேண்டும். வாரணாசி  ஆரம்ப காலத்தில் அதன் தூய பருத்தி ஆடைகளுக்காகவும் பின்னர் பட்டாடைகளுக்காகவும் சிறப்புற்ற நகரமாயிருந்தது. அப்போதெல்லாம் பனாரஸ் அரசகுடும்பத்தினரின் பிரத்யேக ஆடைகள் நெசவில் பெரும்பங்கு வகித்தது. அன்றைய நாட்களில் இந்த வகை ஆடைகள் 'ஹிரண்ய வஸ்திரம்' என்றும் 'புதம்பர் வஸ்திரம்' என்ற பெயரிலும் புழக்கத்தில்இருந்தன. புத்தர் துறவறம் மேற்கொள்ள முடிவு செய்த போது அவர் வாரணாசியின் இளவரசராக இருந்தார் என்று புத்த ஜாதகக் கதைகளில் குறிப்புகள் இருக்கின்றனவாம். துறவறத்தின் போது ஆடம்பரத்தை விட்டொழிக்கும் முயற்சியில் அவர் தமது காசிப் பட்டாடைகளையும் அப்புறப் படுத்தச் சொன்னதாக அந்தக் கதைகள் கூறுகின்றன. புத்தரின் காலத்தில் காசியின் சிறப்புக்குரிய  மென்மையான பருத்தி மட்டும் பட்டாடைகள் முக்கியமான வணிகப் பொருட்களாக இந்தியா முழுதும் பண்டமாற்று செய்யப்பட்டனவாம். அதுமட்டுமல்ல புத்தர் மோட்சமடைந்த நேரத்தில் காசியில் நெசவுசெய்த தூய பருத்தி ஆடை தான் அவரது உடல் மீது போர்த்தப் பட்டது என்றும் கூட சில பௌத்தக் கதைகள் கூறப்படுகின்றன.

அந்தக் காலத்தில் ஜரி மற்றும் புரோகேட் நெசவு வேலைகளில் குஜராத் நெசவாளர்கள் பெரும் பெயர் பெற்றவர்களாயிருந்தனர். பதினேழாம் நூற்றாண்டில் குறிப்பாகச் சொல்வதென்றால் கி.பி.1603 ஆண்டில் குஜராத்தில் பெரும் பஞ்சம் வந்த காலகட்டத்தில் இந்த நெசவாளர்கள் அனைவரும் பஞ்சம் பிழைக்க குஜராத்தில் இருந்து காசிக்கு இடம் பெயர்ந்தனராம். புது இடமும், அந்த இடத்தின் வளமையும் நெசவாளர்களுக்கு புது உற்சாகத்தை தந்ததோ என்னவோ இவர்களின் வருகைக்குப் பின்னர் பனாரஸ் பட்டு நெசவுத் தறிகள் காசி மன்னர் குடும்பத்தின் அரசாங்க அலுவல் ஆடைகள் தயாராகும் மையங்களாகின. புத்தர் காலத்திலிருந்து பனாரஸ் பட்டின் சிறப்பை உலகறிந்தாலும் முகலாய மன்னர்கள் காலத்தில் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகமான புரோகெட் நெசவு முறைகளின் வருகைக்குப் பின் பனாரஸ் புரோகேட் முறையுடன் இணைந்து நெசவு செய்யப்பட்டு தனிப்பெரும் சிறப்புற்றது. அக்பர் காலத்தில் பனாரஸ் மோகம் மேலும் வலுவடைந்து இந்தியா முழுதும் பனாரஸ் கைத்தறிப் பட்டாடைகளுக்கான வரவேற்பு அமோகமாயிருந்தது.

காசியின் தனிச்சிறப்பு மிக்க பனாரஸ் கைத்தறிப் பட்டுப் புடவைகள் இந்தியாவின் பிற பிராந்திய நெசவுத் தொழில்கள் நசிந்த போதும் கூட சிறிதும் நலிவற்று இன்றளவிலும் பொலிவுடன் விளங்க அதன் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும் பிரத்யேக வண்ண வேறுபாடுகள், பார்டர் டிஸைன்கள், மோட்டிஃப்கள், போன்றவற்றில் கையாளப்படும் கலநயமிக்க வேலைப்பாடுகளும் ஒரு காரணம். உதாரணமாக 

  • கி.பி. 350 லிருந்து 500 வரை பனாரஸ் கைத்தறி பட்டுப் புடவை ஆடை நெசவில் பூக்கள், வளர்ப்பு விலங்கினச் சித்தரிப்புகள், மற்றும் பறவைகளின் உருவங்கள் போன்ற டிஸைன்கள் பிரபலமாகப்பயன்படுத்தப்பட்டன.
  • 13 ஆம் நூற்றாண்டில் புடிதார் டிஸைன்களுக்கு பெருமளவில் வரவேற்பு இருந்தது.
  • 16 ஆம் நூற்றாண்டில் முகலாயர் வருகைக்குப் பின் பூக்களில் இஸ்லாமிக் பேட்டர்ன்ஸ் என்று சொல்லப்படும் 'ஜலி அல்லது ஜாலா' நுட்பத்தைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படும் டிஸைன்களுக்குமக்களிடையே மிகுந்த டிமாண்ட் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இந்த வகைத் தொழில்நுட்பம் இந்தியாவுக்குப் புதிது எனவே அப்போதைய ஃபேஷன் உலகில் அப்போது இது ரசனைக்குரிய மறுமலர்ச்சியாக கொண்டாடப் பட்டது.
  • அதைத் தொடர்ந்து 19 ஆம் நூற்றாண்டில் இந்திய டிஸைன்கள் வெகு விரைவில் விக்டோரியன் ஸ்டைல் வால் பேப்பர்கள் மற்றும் கணித ஜியோமெட்ரிக் பேட்டர்ன்களில் உருவாக்கப்படும் முகலாய 'லாட்டிஸ் வேலைப்பாடுகளுடன்' ஒத்துப் போய் இந்தோ மொகல் டிரான்ஸ் டிஸைன்கள் உருவாகி ஜவுளிச் சந்தையில் பனாரஸ் கைத்தறிப் பட்டின் மவுசு கூடிப் போனது.

பனாரஸ் கைத்தறிப் புடவைகளின் வகைகள்:

வாரணாசி கைத்தறி நெசவில்;

  • பனாரஸி புரோக்கேட்
  •  
  •   புரோகேட்
  • பனாரஸ் பட்டு ஜம்தானி
  • ஜாங்லா பட்டுப் புடவை
  • ஜமவார் தாஞ்ஞோய் பட்டு
  • டிஷ்யூ பட்டு
  • கட் வொர்க் பட்டுப் புடவைகள்
  •  
  • புடிதார் பட்டுப் புடவைகள்

முதலிய எட்டு வெரைட்டிகளில் பனாரஸ் பட்டுக் கைத்தறிப் புடவைகள் கிடைக்கின்றன. இந்த வகைக்கொன்றான வெரைட்டிகளை ஒருங்கிணைக்கும் பொதுவான ஒரே அம்சம் பனாரஸ் கைத்தறிப் பட்டு. பனாரஸ் கைத்தறி நெசவில் மேற்கண்ட விதம் விதமான மாறுபட்ட நெசவுத் தொழில்நுட்பங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த முடிவதால் தான் இந்தப் புடைவகள் நசிவின்றி அன்றிலிருந்து இன்று வரை சிறப்புற விளங்குகின்றன.

பனாரஸ் நெசவுத் தொழில்நுட்பம்:

பனாரஸி புரோகேட் நெசவில் இரண்டு அடுக்காக மடிக்கப்பட்ட மல்பெரி பட்டு நூல் பயன்படுத்தப் படுகிறது. உடல் பகுதிக்கு பனாரஸ் சில்க் ஃபேப்ரிக்கும் ஜரிகை மற்றும் மோட்டிஃப் டிஸைன்களுக்கு வெள்ளி மற்றும் தங்க நூல் வேலைப்பாடுகளும் நெசவு செய்யப்படுகின்றன.

பனாரஸ் பட்டுப் புடவைகள் வழக்கமான பாரம்பரிய கைத்தறிக் கூடங்களில் நெசவு செய்யப்பட்டாலும் மோடிஃப்கள் ஜக்கார்டு அல்லது ஜலா மற்றும் பாகியா தறிகளில் நெசவு செய்யப்படுவது தான் வழக்கம். இரண்டு அடுக்கு மல்பெரி துணியில் சாட்டின் ஃபேப்ரிக் பயன்படுத்தப்பட்டு வார்ஃப் அண்டு வெஃப்ட் நெசவு செய்யப்பட்டு மோட்டிஃப் மற்றும் சிறப்பு பல்லு, புட்டா டிஸைன்களுக்கு தங்கம் மற்றூம் வெள்ளி நூல்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றில் பனாரஸ் கட் வொர்க் புடவைகள் சற்று வித்யாசமானவை. மோட்டிஃப்கள் மற்றும் புட்டா டிஸைன்கள் தெளிவாக பகட்டாகத் தெரியும் பொருட்டு இவ்வகைப் புடவைகளின் உடல் பகுதி சற்று மெல்லியதாகவும் டிரான்ஸ்பரண்ட்டாகவும் நெசவு செய்யப்படுகிறது. 

பனாரஸ் நெசவுத் தொழில் நுட்பத்தில் ஒரு புடவை தயாராக குறைந்த பட்சம் 15 நாட்கள் முதல் 1 முழு மாதம் தேவைப்படும், அதிலும் ஜரிகை வேலைப்பாடுகள் மிகுந்த கலை நயமிக்க புடவைகள் வேண்டுமெனில் 3 மாதங்கள் வரையிலான  அதிக அவகாசம் தேவைப்படும்.

ஒரிஜினல் பனாரஸ் படுப்புடவைகளை எப்படி அடையாளம் காண்பது?

  • பனாரஸ் புரோகேட் பட்டுப் புடவைகளில் தூய கனமான தங்கம் மற்றும் வெள்ளி நூல்கள் பயன்படுத்தப் படுவதால் இவ்வகைப் புடவைகள் பிற புடவைகளைக் காட்டிலும் கனமானதாக இருக்கும். 
  • மேலும் இரண்டு அடுக்கு நெசவில் அடிப்படை கிரவுண்டு  ஃபேப்ரிக்காக சாட்டின் மெட்டீரியல் மட்டுமே பயன்படுத்தப் படும்.
  • சாட்டின் மெட்டீரியல் ஃபேப்ரிக்கில் மெட்டாலிக் விஷுவல் எபெக்டுகள் தனித்துத் தெரியும் வண்ணம் நெசவு செய்யப்படுகின்றன.
  • கனமான மெட்டாலிக் யார்ன் மற்றும் கூட்டு நெசவு தொழில்நுட்பத்தால் இவ்வகைப் புடவைகளில் கனம் அதிகமிருக்கும். 

மேற்குறிப்பிட்ட காரணிகளை வைத்து மிக எளிதாக  பனாரஸ் பட்டுப் புடவைகளை அடையாளம் காணலாம்.

பனாரஸ் புடவைகள் எங்கு கிடைக்கும்?

தமிழ்நாட்டில் பிரபலமான பெரிய ஜவுளிக் கடைகள் அனைத்திலும் பனாரஸ் புடவைகள் கிடைக்கக் கூடும். கோ ஆஃப்டெக்ஸ், காதி, சர்வோதயா, வள்ளுவர் கோட்டத்தில் குறிப்பிட்ட இடைவெளிகளில் நடத்தப் படும் இந்தியக் கைத்தறிப் புடவைகளுக்கான கண்காட்சிகள் போன்ற இடங்களில் எல்லாம் தூய பனாரஸ் புடவைகளைத் தேடிக் கண்டடையலாம்.

அடுத்த வாரம் எந்தக் கைத்தறிப் புடவை?

தீபாவளியை வெகு நெருக்கத்தில் வைத்துக் கொண்டு வேறு மாநிலப் புடவைகளை எல்லாம் தேடிப் போய் வாங்குவதைக் காட்டிலும் நம்ம ஊர் காஞ்சிபுரம் பட்டுக் கைத்தறிப் புடவைகளை நிதானமாக கடை கடையாக ஏறி இறங்கி தேடி வாங்குவது எளிதானது இல்லையா? அதனால் இந்த வாரம் நமது தமிழகத்தின் ஈடில்லா பெருமை மிகு காஞ்சிபுரம் (பேச்சுவழக்கில் காஞ்சிவரம்) பட்டுப் புடவைகளைப் பற்றித் தான் அலசப் போகிறோம். பொங்கல் பண்டிகையை விட இங்கே தீபாவளிக்கு பட்டுப்புடவை வாங்குவோரின் எண்ணிக்கை தான் அதிகம் என்பதை யாராவது மறுக்க முடியுமா?
அதனால்  அடுத்த வாரம் ”காஞ்சிவரம்” போகலாம் தயாராக இருங்கள்.

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com