மென்மையிலும் ’மெஜஸ்டிக் லுக்’ தரும் மங்களகிரி கைத்தறிப் புடவைகள்...

‘பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணனுக்காக அப்படத்தின் காஸ்டியூம் டிஸைனர் ரமா ராஜமௌலி விரும்பித் தேர்ந்தெடுத்தது இந்த மங்களகிரி கைத்தறிப் புடவைகளைத் தான்.
மென்மையிலும் ’மெஜஸ்டிக் லுக்’ தரும் மங்களகிரி கைத்தறிப் புடவைகள்...

அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மங்களகிரி கைத்தறிப் புடவைகளில்?! ஒரு தீபாவளி சமயம் பக்கத்து வீட்டு அம்மாவும் எங்களோடு புதுத்துணிகள் வாங்க ஜவுளிக்கடைக்கு வந்திருந்தார். அந்தம்மாள் அரசுப்  பள்ளியில் தலைமை ஆசிரியர், கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து புடவைகளுக்கு மேலேயே எடுத்தார். அடர் நீலம், இளம் மஞ்சள், கருஞ்சிவப்பு, மென் பசுமை, குங்கும நிறம், வாடா மல்லி, என எல்லாமும் கலர் கலராக மங்களகிரி மட்டுமே, ஏன் வேறு வகைப் புடவைகள் பிடிக்கவில்லையா? என்று கேட்டதற்கு, அப்படி இல்லை இந்த மங்களகிரியில் கிடைக்கும் 'மெஜஸ்டிக் லுக்' வேறு புடவைகளில் கிடைப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதோடு இந்தப் புடவைகள் உடுத்திக் கொள்ள மிருதுவாக இருப்பதோடு பயன்பாட்டுக்கும் எளிதாக இருப்பதால் நான் மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்வேன், சரி தானே! என்றார்.

அந்தம்மாள் கட்டும் புடவையும் சரி அதைக் கட்டிக்க கொள்ளும் நேர்த்தியும் சரி எப்போதுமே அத்தனை அழகாக இருக்கும். எட்டு பிளீட்ஸ் வைத்து புடவை கட்டிக் கொள்ளவும், முந்தானை மடிப்புக் கலையாது எடுத்து முன்புற இடுப்பில் செருகிக் கொள்ளவும் அவரிடம் தான் கற்றுக் கொள்ள  வேண்டும். அப்படி அத்தனை பாந்தமாக புடவை காட்டுபவர் அவர். அவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அவர் மட்டுமல்ல பல ஆண்டுகளாக நடுத்தர வயது கடந்த வயதான மூத்த பெண்மணிகள் பலரது ஏகோபித்த விருப்பமாகவும் இந்த மங்களகிரிப் புடவைகள் தான் இருந்து வருகின்றன என்பது பலரிடம் பேசியதிலிருந்து கிடைத்த செவிவழிச் செய்தி.

சரி இனி புடவையைப் பற்றி பேசுவோமா?

ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து  19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறுநகரம் மங்களகிரி. இந்தப் பக்கம் விஜயவாடாவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவு. இங்கே வசிக்கும் மக்களில் பெரும்பான்மையினர் நெசவாளர்கள். மங்களகிரி எனும் இந்த ஊர் புடவைகளுக்கு மட்டும் பிரசித்தி பெற்றதல்ல இங்கே மலை மீது கோயில் கொண்டுள்ள பானகால நரசிம்ம சுவாமிக்காகவும், லட்சுமி நரசிம்ம சுவாமிக்காகவும் மகாபாரத காலம் முதற்கொண்டு பாடப்பெற்ற சிறப்பு ஸ்தலமாகத் இருந்து வந்திருக்கிறது. இரண்டு நரசிம்ம சுவாமிகளையும் வழிபட வரும் பக்தர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக இங்குள்ள நெசவாளர்களிடம் இருந்து மங்களகிரிப் புடவைகளை வாங்கிச் செல்வதோடு தான் இந்த ஸ்தல வழிபாடு நிறைவடைகிறது என்பது ஆந்திர மக்களின் தொன்று தொட்ட நம்பிக்கை. அப்படி பக்தி யாத்ரீகர்கள் மூலமாக  மங்களகிரிப் புடவைகளின் பெருமை இந்தியா மட்டுமல்ல இன்று உலகெங்கும் பரவி ஊருக்கும், புடவைக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.

மங்களகிரிப் புடவைகள் நெசவின் சிறப்பு:

மங்களகிரிப் புடவைகளில் பெரும்பாலும் கோடுகள் மற்றும் சிறு சிறு கட்டங்கள் போன்ற டிஸைன்களே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கோடுகள் மற்றும் கட்டங்களோடு அடர்த்தியான ஜரிகை கரையிட்ட இந்தப் புடவையின் உடற்பகுதி பெரும்பாலும் பிளெயின் ஆகத்தான் நெய்யப்படும், சில புடவைகளில் புடவை முழுதும் குறுக்காகவோ, நெடுக்காகவோ வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கெட்டியான ஜரிகைக் கரையுடன் கூடிய மெல்லிய கோடுகள் புடவை முழுதும் நீண்டிருக்கும். அதோடு சுத்தமான பருத்தி நூலில் நெய்த புடவை  சாயமேற்றும் போது ஊடும், பாவுமாக இரு நிற வண்ணங்கள் பயன்படுத்தப் படுவதால் புடவைக்கு  ’டபுள் ஷைனிங்’ கிடைக்கிறது. இதனால் புடவைக்கு கிடைக்கும் மெஜஸ்டிக் லுக்கை வேறெந்தப் புடவையிலும் கூடக் காண்பது அரிது.  

பொதுவாக இந்த வகைக் கைத்தறிப் புடவைகள் 80s கணக்கில்   பிரித்தெடுக்கப்பட்ட தூய பருத்தி நூல்களின் மூலமாகவே நெய்யப்படுகின்றன. புடவையின் இருபுறமும் நீளும்  கெட்டியான ஜரிகை கரை 'நிஜாம் பார்டர்' என்றழைக்கப்படுகிறது.  இந்த நிஜாம் பார்டரும், பழங்குடியினரின் ஸ்டைல் எனும்  பொருள் தரக்கூடிய வகையில் கோடுகளும் கட்டங்களும் கலந்த 'ட்ரைபால் டிசைன்களும்' தான் இந்தப் புடவைகளுக்கான மற்றுமொரு சிறப்பு. 

இந்தப் புடவைகளுக்கான வரவேற்பையும் சிறப்பையும் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ள கீழே உள்ள இந்த யூ டியூப் விடியோவைப் பாருங்கள். 

தெலுகு புரியாதவர்கள் விடியோ பார்த்து விட்டு இதை வாசிக்கவும்.

‘பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணனுக்காக அப்படத்தின் காஸ்டியூம் டிஸைனர் ரமா ராஜமௌலி விரும்பித் தேர்ந்தெடுத்தது இந்த மங்களகிரி கைத்தறிப் புடவைகளைத் தான். பாகுபலி 2 வுக்காக சுமார் 12 லட்சம் ரூபாய்களுக்கு புடவைகள், வேஷ்டிகள் மற்றும் பிற ஆடை வகைகளுக்கு படத்தயாரிப்புக் குழுவினர் ஆர்டர் தந்திருப்பதாக இந்த விடியோவில் பேசும் நெசவாளர் தெரிவிக்கிறார்.

இது மட்டுமல்ல இயக்குனர் வம்சி மற்றும் ராஜமௌலி இருவரும் தொடர்ந்து தங்களது திரைப்படங்களில் மங்களகிரி புடவைகளைப் பயன்படுத்தி வருவது நெசவாளர்களான தங்களுக்குப் பெருமைக்குரிய விசயம் என்றும் தெரிவிக்கிறார்.

மலையாள ரீமேக் படமான பிரேமம் தெலுகு வெர்ஷனில் மலர் டீச்சர் ஷ்ருதி ஹாசன் அணிவதற்காக தேர்வு செய்யப் பட்டிருப்பதும் இந்த மங்களகிரி கைத்தறிப் புடவைகளைத்தானாம். அதாவது மேற்கண்ட பெண் கதாபாத்திரங்களுக்கு இந்தப் புடவைகள் தேர்வு செய்யப்படுவதற்கான பிரதான காரணம் ஒன்றே ஒன்று மட்டும் தான்! அந்தப் பெண்கள் அந்தந்த படங்களில் கம்பீரமாக சித்தரிக்கப்பட அவர்களின் நடிப்புத் திறனோடு இந்தப் புடவைகளும் துணை நிற்கின்றன என்பதால் மட்டுமே! இந்தப் புடவைகளின் மற்றொரு வி.ஐ.பி. விசிறி என்றால் அது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மம்தா குறிப்பிட்ட இடைவெளிகளில் மொத்தமாக மங்களகிரி புடவைகள் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். 

ஒரிஜினல் மங்களகிரிப் புடவையா என்று எப்படி கண்டுபிடிப்பது?

  • மங்களகிரிப் புடவைகளின் உடல் பகுதியில் எந்த விதமான  எக்ஸ்ட்றா மோட்டிஃப்களோ, கூடுதல் வடிவமைப்புகளோ பயன்படுத்தியிருக்கப்பட மாட்டாது.
  • வழக்கமான மெஷின் மேட் காட்டன் புடவைகளைப் போல ஸ்டார்ச் அதிகம் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் என்பதால் புடவை மிருதுவாக இருக்கும்.
  • பிற காட்டன் புடவைகளைக் காட்டிலும் மங்களகிரி கைத்தறிப் புடவைகளின் நெசவும் சரி வடிவமைப்பும் சரி கன கச்சிதமாக இருக்கும் என்பதோடு நிஜாம் பார்டர் என்று சொல்லப்படுகிற  வார்ஃப் டிஸைன் புடவையின் ஆரம்பம் முதல் இறுதி வரை சிறு பிசிறு கூட இல்லாமல் தொய்வின்றி சீரான நெசவாக இருக்கும். 

பயனாளர்களின் மனக்குறை:

மங்களகிரி கைத்தறிப் புடவைகளை பயன்படுத்துவோர் சொல்லும் ஒரே ஒரு சின்ன குறை என்னவெனில் இந்தப் புடவைகளை கவனமாகக் கையாள வேண்டும் என்பது மட்டுமே! ஏனெனில் இந்தப்புடவைகளை எல்லாக் கைத்தறிப் புடவைகளை போலவே  கஞ்சி போட்டு இஸ்திரி செய்யாமல் பயன்படுத்த முடியாது.  சாதாரண புடவைகளை போலவே இதையும் கவனமின்றி பயன்படுத்தினால் புடவையின் மெருகு குன்றி  கொச கொசப்பாக மாறி மங்களகிரி  புடவை எனும்  பெருமையே அர்த்தமற்றதாகி விடும். எனவே அதிகம் அழுக்காக்கமால் ,கசக்காமல் இரண்டு முறை உடுத்தியதும் உலர் சலவைக்கு அனுப்புவதே உத்தமம்.

சென்னையில் ஒரிஜினல் மங்களகிரி புடவைகள் எங்கு கிடைக்கும்?

சென்னையில் நல்லி, பாலம், சுந்தரி சில்க்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் சில்க்ஸ், ராதா சில்க் எம்போரியம், மதார்ஷா, சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட இடங்களில் ஒரிஜினல் மங்களகிரி புடவைகள் கிடைக்கின்றன.

கடைசியாக மங்களகிரிப் புடவைகள் எப்படி நெசவு செய்யப்படுகின்றன? என்னென்ன விதமான ஆடைகள் மங்களகிரி நெசவில் தயாராகின்றன போன்ற இன்னபிற செய்திகளை எல்லாம் கீழே உள்ள இந்த விடியோ பார்த்து புரிந்து கொள்ளலாம்.

விடியோ விளக்கம்:

முதலில் விளைந்த பருத்தி ஸ்பின்னிங் மில்லுக்குச் சென்று அங்கிருந்து "யார்ன்' அதாவது பருத்தி நூலாகத்  தயாராகி வருகிறது. இந்த நூல் பண்டில்கள் ஒரு இரவு முழுதும் கொதிக்கும் நீரில் வைக்கப்படுகின்றன. பின்பு தேவையான வண்ணம் ஏற்றுவதற்காக 70 டிகிரி வெப்பத்தில் 30 நிமிடங்கள் வரை  இந்த தூய பருத்தி நூல் பண்டில்கள் இயற்கைக் சாயத்தில் மீண்டும் மீண்டும் முக்கி எடுத்து பிழியப்படுகின்றன. சாயமேற்றப்பட்ட நூல் பண்டில்கள் ஒரு நாள் முழுதும் காய வைக்கப்படுகின்றன. இந்த காய்ந்த நூல்களைக் கொண்டு இனி கைத்தறிப் புடவைகள், வேஷ்டிகள், பிளவுஸ்கள் எது வேண்டுமானாலும் தயார் செய்யலாம்.

இவற்றைக் கொண்டு புடவைகள் நெய்வதென்றால் அடுத்த ஸ்டெப் நூல்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு கஞ்சி ஏற்றப்படுகின்றன. கஞ்சி ஏற்றப்பட்ட புடவைகள் மெல்லிய மரக்குச்சிகள் மூலம் தொடர்ந்து இறுக்கமாக நீவப்பட்டு ஷைனிங் ஏற்றப்படுகின்றன. ஷைனிங் ஏற்றப்பட்ட நூல் பண்டில்கள் கலர் வேரியேஷனுக்காகவும் தொய்வின்றி நெய்வதற்காகவும் இரு வேறு நூல்கள்சா ம்பல் சேர்த்து ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகின்றன  பிறகு மறுபடியும் சில நூறு மீட்டர் நீளத்துக்கு மரக்குச்சிகளில் இறுக்கமாக சிக்கல்கள் இன்றி நீட்டப்பட்டு ராட்டையில் சுட்டப்படுகின்றன.பின்  நெசவுக்கு எளிதான வகையில் தறிக்கு மாற்றப்படுகின்றன. இதற்கு இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை ஆகலாம். இப்படித் தயாராகும் கைத்தறி நூல் இப்போது புடவையாக நெய்வதற்குத் தயார் நிலையில் உள்ளது. இனி இதை வைத்து ஒரு தடவைக்கு நான்கு புடவைகள் வரை நெய்யலாம். 

ஸ்பெஷல் டிசைன்கள் உருவாக்கத்துக்கு வடிவமைக்கப்பட்ட டோபி இணைக்கப்பட்ட  கைத்தறியில் ஒரு புடவை நெய்வதற்கு காலை ஆறுமணி முதல் மாலை 6 மணி வரையாகுமாம். இப்படித்தான் மங்களகிரிப் புடவைகள் தயாராகின்றன என்று இந்த விடியோ பதிவு கூறுகிறது.

சரி இனி அடுத்த வாரம் எந்தப் புடவை?

பலுச்சாரி கைத்தறிப் பட்டுப்புடவைகள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பகீரதி ஆற்றங்கரையின் எழில் கொஞ்சும் சிற்றூர் ஒன்றில் தயாராகும் பலுச்சாரி கைத்தறிப் புடவைகளைப் பற்றி அடுத்த வெள்ளியன்று காண்போம். 

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com