மகாராஷ்டிரத்து பைத்தானி கைத்தறிப் பட்டுப்புடவைகள்!

தமிழ்நாட்டில் கல்யாணம் என்றால் காஞ்சீவரத்தை எப்படித் தவிர்க்க முடியாதோ அப்படியே மகாராஷ்டிரத்து கல்யாணங்களில் ‘பைத்தானி’ இல்லாது கல்யாணமே நிறைவடையாது.
மகாராஷ்டிரத்து பைத்தானி கைத்தறிப் பட்டுப்புடவைகள்!

இந்தியாவின் விலை உயர்ந்த பட்டு மற்றும் கைத்தறிப் பட்டுப்புடவைகள் வரிசையில் தமிழகத்தின் காஞ்சீவரம் பட்டுப்புடவைகளுக்கு இணையாகவும் அதைத் தாண்டியும் மதிக்கப்படக் கூடிய வகையில் இருப்பவை ’மகாராஷ்டிரத்தின் பைத்தானி’ கைத்தறிப் பட்டுப்புடவைகள். இவை மற்றெல்லா பட்டுப் புடவைகளைக் காட்டிலும் காலத்தால் முந்தியவை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் ’பைத்தன்’ எனும் இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு ரோம் நகரத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

ரோமானியர்கள் இந்தப் புடவையை தங்கத்துக்கு நிகராக விலை கொடுத்து வாங்கிச் சென்றிருக்கின்றனர். இந்தப் புடவையின் தோற்றத்தைப் பற்றி அறிந்து கொள்ள நாம் 2000 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் புடவையில் முழுக்க முழுக்க தங்க நூல் வேலைப்பாடுகள் அதிகமிருப்பதால் அந்நாட்களில் இவற்றை அதிகார மட்டத்தில் உயர்ந்திருந்த குறிப்பிட்ட சில வர்க்கத்தினர் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. பெரும்பாலும் அரச குடும்பத்தினர், பேஷ்வாக்களின் குடும்பப் பெண்கள், அரசு உயர் அதிகாரிகள் குடும்பத்துப் பெண்கள், ஜமீந்தாரிணிகள் இப்படிச் சில தேர்ந்தெடுத்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்தப் புடவைகள் நெசவு செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் கல்யாணம் என்றால் காஞ்சீவரத்தை எப்படித் தவிர்க்க முடியாதோ அப்படியே மகாராஷ்டிரத்து கல்யாணங்களில் ‘பைத்தானி’ இல்லாது கல்யாணமே நிறைவடையாது.

பைத்தானி புடவைகளின் தோற்றம்:

இன்றைய மும்பையிலிருந்து 400 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பைத்தன் நகரம் தக்காணத்தின் மிகப் பழமையான முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்றாக இன்றளவிலும் சிறந்து விளங்க இந்தப் புடவை நெசவும் ஒரு காரணமே!.

சாதவாகன மன்னன் சாலிவாகனன் காலத்தில்...

இந்தியாவில் பிரதிஸ்தானத்தை ஆட்சி செய்த சாதவாகனரான சாலிவாகன மன்னனின் காலத்தை பைத்தானி கைத்தறிப் புடவைகளின் பொற்காலம் என்று கூறலாம். அன்றைக்கு அவுரங்காபாத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்த மராத்வாடா என்றழைக்கப்பட்ட சிற்றூரில் பைத்தானி நெசவு முதலில் தொடங்கியது. இந்த மராத்வாடா பின்பு பைத்தன் என்றானது. இந்த ஊரிலிருந்து தயாரான பட்டுப் புடவைகளின் பெருமை உலகெங்கும் பரவ, கூடிய விரைவில் பைத்தன் சாதவாகனர்கள் ஆட்சியில் சர்வ தேச பட்டு மற்றும் ஜரிகைச் சந்தைகளில் ஒன்றாக மாறியது.

முகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில்...

சாலிவாகனர் ஆட்சிக்குப் பின்  பைத்தானி புடவைகளின் அதி தீவிர ரசிகராகவும், ரட்சகராகவும் ஒரு முகலாய மன்னர் இருந்தார். அவர் யார் தெரியுமா? தான் வாழந்த காலத்தில் சிக்கனத்தின் மறு உருவமாக சற்றேறகுறைய கஞ்ச மகாப் பிரபு என்று சூழ இருந்தோரால் பகடி செய்யப்பட்ட முகலாய மன்னர் அவுரங்கசீப் தான் பைத்தானிப் நெசவுக் கலையின் தீவிர ரசிகராக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் ஜம்தானிப் புடவை நெசவை தடுத்து நிறுத்தி அதற்குப் பதிலாக பைத்தானி நெசவை அவர் போற்றி வளர்த்தார். மன்னரது உத்தரவு மீறி ஜம்தானி புடவைகளை நெசவு செய்தவர்கள் அவுரங்கசீப்பால் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

அவுரங்கசீப்புக்கு முன்பே பேஷ்வாக்கள் பைத்தானி நெசவின் தீவிரப் புரவலர்கள் என்பது தனிக்கதை.

நிஜாம்களின் காலத்தில் பைத்தானி...

இவர்களை அடுத்து கி.பி 17 லிருந்து 19 வரை ஹைதராபாத் நிஜாம் வம்சத்து மன்னர்கள் பைத்தானி ரசிகர்களாகி அதிக அளவில் பைத்தானி புடவைகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்தினர். நிஜாம் காலத்தில் பைத்தானி நெசவுக் கலையில் ஓரளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சி இருந்தது. ஏனெனில் நிஜாமின் மனைவி பேகம் நிலோஃபர் பைத்தானி பட்டுப்புடவைகளில் புதுப் புது மோட்டிஃப்களை அறிமுகப்படுத்துவதை மிகுந்த விருப்பத்தோடு செய்து கொண்டிருந்தார். பைத்தானி பட்டுப் புடவைகளின் தனித்த அடையாளமான புறா மோட்டிஃப்கள் பேகம் நிலோஃபரின் கண்டுபிடிப்புகளே!

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் பைத்தானி நெசவின் வீழ்ச்சி...

சாதவாகனர்கள், முகலாயர், பேஷ்வாக்கள், நிஜாம்கள் என சமூகத்தின் உயர் மட்டத்தில் சீரும், சிறப்புமாக கோலோச்சிக் கொண்டிருந்த பைத்தானி புடவை நெசவுக் கலையானது பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்தில் ஏனைய கைத்தறி நெசவுக் கலைகளைப் போலவே களையிழக்கத் தொடங்கியது. நெசவுக்கான மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக ஒரு வழியாக கைத்தறி காலம் முடிந்து மெஷின்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. என்ன தான் மெஷின் மூலம் புடவை நெசவு அபிரிமிதமாக இருந்தாலும், பல வெரைட்டிகளில், பல வண்ணங்களில் புடவைகள் கிடைத்தாலும் கூட மகாராஷ்டிரத்து பைத்தானி நெசவுக் கலைஞர்களுக்கு இணையாக எந்த மெஷினாலும் அத்தனை கச்சிதமாக உலகப் புகழ் பைத்தானி புடவை ஒன்றை நெசவு செய்து விட முடியாது என்பது தான் நிஜம்.

பைத்தனிலிருந்து  நாக்பூரின் இயோலாவுக்கு இடம்பெயர்ந்த நெசவுக்கலை...

படிப்படியாக கைத்தறிப் புடவை நெசவு குறைய ஆரம்பித்ததும் பைத்தனிலிருந்து நெசவுக்கலை இயோலாவுக்கு இடம் மாறியது. இது நாக்பூருக்கு அருகிலிருக்கும் ஒரு சிறு நகரம். இங்கிருக்கும் செல்வந்தர்களின் விருப்பத்துக்கு இணங்கி பைத்தானி நெசவாளர்களில் சிலர் பைத்தனில் இருந்து இங்கு இடம் பெயர்ந்தார்கள். தற்போது இந்தியாவில் பைத்தன் மற்றும் நாக்பூரின் இயலோ இரு இடங்களிலும் பைத்தானி நெசவு நடைபெறுகிறது.

பைத்தானி கைத்தறிப் புடவை நெசவில் பயன்படுத்தப் படும் மூலப் பொருட்கள்:

பைத்தானி பட்டுப் புடவைகள் நெசவு செய்ய;

  • பட்டு நூல்,
  • ஜரிகை நூல் மற்றும்
  • சாயம்

இந்த மூன்று மூலப் பொருட்களும் மிகவும் அவசியம். பட்டு நூலில் நெசவுக்கு ஏதுவாகப் பிரித்துத் தொகுக்கப்பட்ட ஃபிலியேச்சர் பட்டு நூல் வார்ஃப் நெசவிலும், சிட்லகட்டா அல்லது சரஹா பட்டு நூல் வெஃப்ட் பாக நெசவிலும் பயன்படுத்தப் படுகிறது.

சாமனியர்களுக்கும் எட்டும் விலையில் பைத்தானி பட்டு...

மன்னர்கள் காலத்திலும் நிஜாம்கள் காலத்திலும் ஒரிஜினல் தங்க நூல்களே ஜரிகை வேலைப்பாடுகளில் பயன்படுத்தப் பட்டன. இதனால் இந்த வகைப் புடவைகள் சாமனிய மக்களுக்குப் எட்டாக் கனவாகவே இருந்து வந்தது. ஆனால் இன்று தங்க நூலுக்குப் பதிலாக வெள்ளி ஜரிகை நூல் பயன்படுத்தப் படுகிறது. அது தவிர ஜரிகைகளிலும் பார்டருக்கு ஒரு வகை, முந்தானைக்கு ஒரு வகை, புட்டாக்களுக்கு ஒரு வகை என மூன்று வகையான ஜரிகை நூல்கள் பயன்படுத்தப் படுகின்றனவாம். இதனால் நடுத்தர மக்களும் வாங்கி உடுத்தும் விலையில் தற்போது பைத்தானி புடவைகள் கிடைக்கின்றன.

பைத்தானி புடவைகளில் காணப்படும் பிரத்யேக வண்ணங்கள்:

தமிழ்நாட்டில் நல்லி பட்டுப் புடவைக் கடைகளில் எம்.எஸ் புளூ என்றொரு நிறத்தில் பட்டுப்புடவைகள் கிடைக்கின்றன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்தப் பெயரில் இப்படி ஒரு வண்ணம் இல்லை. இசையரசி எம்.எஸ் நினைவாக நல்லி தனது பட்டுப்புடவைகளில் எம்.எஸ் க்கு பிடித்தமான நீல நிறப் புடவைகளில் ஒன்றுக்கு இப்படி அவரது பெயரை வைத்து கவுரவித்தது. இதே போல பைத்தானி பட்டுப் புடவைகளுக்கும் உள்ளூர் வண்ணப் பெயர்கள் உண்டு. அது பிற மாநிலத்து வாடிக்கையாளர்களுக்குப் புரியாது. அவர்களுக்கு பைத்தானி புடவை வண்ணங்களுக்கான இந்தப் பட்டியல் உதவலாம்.

  1. அபோலி- பீச் பிங்க்
  2. ஃபிரோஷி- வெள்ளை- சிவப்பு இளம்பச்சை
  3. குஜ்ரி- கருப்பும் வெளுப்பும் கலந்த கலவை
  4. காளி சந்திரகலா, மிராணி- கருப்பு, சிவப்பு கலந்த டபுள் ஷேட் 
  5. மோதியா- இளஞ்சிவப்பு
  6. நீலிகுஞ்ஜி- நீலம்
  7. பாசிலா- சிவப்பு, இளஞ்சிவப்பு, பச்சை டிரிபிள் ஷேட்
  8. போபாலி- மஞ்சள்

இப்படி நீளும் வண்ணப் பட்டியலில் அடர் வண்ண ஷேட்களில் சிவப்பு, பச்சை, மஞ்சள் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமானவை.

பைத்தானி கைத்தறிப் பட்டின் சிறப்பு அம்சங்கள்:

தேர்ந்த பைத்தானி நெசவாளரால் கைகளால் நெசவு செய்யப்பட்ட சுத்தமான அசல் பைத்தானி கைத்தறிப்பட்டு

  • பிற பட்டுப் புடவைகளைக் காட்டிலும் மிகவும் கனமானது.
  • புடவையில் வண்ணக் கலவையும் அடர்தியாக இருக்கும்.
  • புட்டாக்கள் மற்றும் பார்டர்களில் ஜரிகையும் அடர்த்தியாக இருக்கும்.

பைத்தானி புடவைகளின் வழக்கமான அளவென்பது 61/4 கஜம். இதில் 1/4 கஜம் ரவிக்கைக்குப் போகும். அசல் பைத்தானியில் 500 லிருந்து 575 கிராம் எடை வரை பட்டும், 200 லிருந்து 250 கிராம் எடை வரை ஜரிகையும் பயன்படுத்தப் பட்டிருக்கும். கச்சிதமாக நெய்து முடிக்கப்பட்ட பைத்தானிப் புடவையின் ஒட்டுமொத்த எடை என்பது 600 முதல் 750 வரை இருக்கலாம். 7 முதல் 9 இஞ்ச் வரை பார்டர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. பார்டர்களில் பயன்படுத்தப் படும் மோட்டிஃப்களுக்கு அவை நெசவு செய்யப்பட்ட அந்தந்த ஊர்களின் பெயரே வழக்கில் புழங்கி வருகிறது. உதாரணமாக அஸ்வலிகத், நார்லிகத், பங்காகத், பைத்தானிகத் இப்படி...

முந்தானைப் பகுதி 18 இஞ்ச் சிங்கிள் பள்ளு இணைப்பிலும்...

அல்லது 36 இஞ்ச் டபுள் பள்ளு இணைப்பிலும் கிடைக்கும்.

பைத்தானி கைத்தறிப் பட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் மோட்டிஃப் டிசைன்கள்:

நமது காஞ்சிப் பட்டில் அன்னப் பட்சி, மாங்காய், மயில், பாய், ருத்ராட்ச மோட்டிஃப்கள் அதிகம் பயன்படுத்தப் படுவதைப் போல பாரம்பரிய பழமை வாய்ந்த பைத்தானிப் புடவைகளில் பெரும்பாலும் திராட்சைக் கொத்து, மலர் கொத்து, காத்தாடி வடிவம், பருத்தி மொட்டு போன்ற டிசைன் மோட்டிஃப்கள் பயன்படுத்தப் பட்டன. முகலாயர் வருகைக்குப் பின் பழமை மாறி மோட்டிஃப்களில் புறாக்கள், மயில்கள், மாதுளம் பூக்கள், அன்னப் பட்சி, கிளிகள் போன்ற டிசைன்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இப்போதும் பைத்தானிப் பட்டுப் புடவை மோட்டிஃப்களில் மயில்களுக்கு தனித்த இடம் உண்டு.

பைத்தானி  கைத்தறிப் பட்டுப் புடவைகளின் வகைகள்:

இந்த வகை படு மற்றும் கைத்தறிப் புடவைகளை அவற்றின் நெசவு முறை, பயன்படுத்தம் படும் மோட்டிஃப்கள், புடவையின் வண்ணங்கள் இவற்றின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

மோட்டிஃப்களின் அடிப்படையில்:

பங்கடி மோர்:

பங்கடி என்றால் மராத்தியில் வளையல் என்று அர்த்தம், மோர் என்றால் மயில், அதாவது வளையல் டிசைனில் மயில் மோட்டிஃப்களைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. முந்தானைப் பகுதியில் வளையல் வடிவ மயில்களைச் சுற்றி பிற மயில் மோட்டிஃப்கள் நடனமாடுவதைப் போல இந்த புடவை வடிவமைப்பட்டிருக்கும். பைத்தானி மோட்டிஃப்களில் இது மிகவும் விலை அதிகம். ஏனெனில் அதன் கலை நுணுக்கம் அத்தகையது.

முனியா புரோகேட்:

முனியா என்றால் மராத்தியில் கிளி என்று அர்த்தம், முந்தானையிலும் பார்டர்களிலும் பச்சைக் கிளிகள் பறந்தால் அந்த வகை பைத்தானி புடவைளுக்கு முனியா மோட்டிஃப் புடவைகள் என்று பெயர்.கிளிகள் பச்சை நிறத்தில் அல்லாது தங்க நிற பட்டு நூலில் ஜொலித்தால் அந்த மோட்டிஃப் டிசைனுக்கு டோட்டா மைனா மோட்டிஃப் புடவை என்று பெயர்.

லோட்டஸ் புரோகேட்:

தாமரைப் பூ வடிவ மோட்டிஃப்கள் முந்தானை மற்றும் பார்டர்களில் வடிவமைக்கப் பட்டிருந்தால் அதற்கு லோட்டஸ் புரோகேட் என்று பெயர். இந்த வகை மோட்டிஃப்கள் ஏழெட்டு வண்ணங்களில் கிடைக்கின்றன.

நெசவின் அடிப்படையில்:

கடியல் பார்டர் பைத்தானிப் பட்டுப் புடவைகள்:  

கடியல் என்றால் இடைப்பூட்டிய அல்லது பின்னிய என்றூ பொருள். அதாவது இந்த வகை பைத்தானி கைத்தறீப் பட்டில் வார்ஃப் மற்றும் வெஃப்ட் பார்டர்கள் ஒரே நிறத்தில் அமைந்து புடவையின் உடல்பகுதியில் மட்டும் வெவ்வேறு வகையான வண்ணங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கும்.

காட்/எக்தோத்தி:

இந்த வகை நெசவில், வார்ஃப் மற்றும் வெஃப்ட் இரண்ட்டுக்குமே வேறு வேறு நிற நூல்கள் பயன்படுத்தப்படும். சின்னச் சின்ன புட்டாக்களுடன் கூடிய மோட்டிஃப்கள் நெசவு செய்யப்படும், பெரும்பாலும் மகாராஷ்டிரத்து ஆண்கள் அணியும் லுங்கி போன்ற ஆடை வடிவில் நெசவு செய்யப்படும். இந்த வகை நெசவு ஆண்களுக்கானது.

வண்ணங்களின் அடைப்படையில்: பைத்தானி கைத்தறிப் பட்டுப் புடவைகளை நிறத்தை அடிப்படையாகக் கொண்டும் மூன்று வகைகளாகப் பிரித்துள்ளனர்;

களிசந்திரகலா: சுத்தமான கருப்பில் சிவப்பு நிற பார்டர் கொண்ட பைத்தானி புடவை


ரகு: கிளிப்பச்சை நிறப் பைத்தானிப் பட்டுப் புடவை


ஷிரோதக்: அசல் வெண்மை நிறப் பைத்தானி கைத்தறிப் பட்டு

பைத்தானி பட்டுப் புடவைகளைப் பற்றி விலாவாரியாகத் தெரிந்து கொண்டோமில்லையா?

இனி அடுத்த வாரம் என்ன புடவை?

வங்காளத்தின் ஜம்தானி புடவைகளின் மலிவான மாற்றாகக்கருதப் படும் ’டாங்கைல் கைத்தறிப் புடவைகளைப்’ பற்றி காண்போம்.

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com