தெலுங்கானா ஸ்பெஷல் போச்சம்பள்ளி ஐகாட் கைத்தறிப் பட்டு!

போச்சம்பள்ளி ஐகாட் புடவைகள் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் எத்தனை ஸ்பெஷலோ அத்தனைக்கத்தனை தமிழ் நாட்டு மக்களுக்கும் மிகப் பிடித்தமான ஒரு புடவை.
தெலுங்கானா ஸ்பெஷல் போச்சம்பள்ளி ஐகாட் கைத்தறிப் பட்டு!

போச்சம்பள்ளி தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தை அடுத்து 50 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ஒரு நெசவாளக் கிராமம். இங்கு கைத்தறி மற்றும் ஐகாட் பட்டு நெசவு தான் பிரதானத் தொழில். போச்சம்பள்ளி ஐகாட் புடவைகள் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் எத்தனை ஸ்பெஷலோ அத்தனைக்கத்தனை தமிழ் நாட்டு மக்களுக்கும் மிகப் பிடித்தமான ஒரு புடவையாகவே இன்றளவிலும் இருந்து வருகிறது.இந்த வகைப் புடவைகளில்
தனித்துவமாக பெருமை சேர்ப்பவை புடவைகளின் பளீரிடும் வண்ணங்களும் அவற்றில் பயன்படுத்தப்படும் ஜியோமெட்ரிக்கல்(கணிதம்) டிஸைன்களும் தான். ஜியோமெட்ரிகலை அடிப்படையாகக் கொண்ட டிஸைன்களில் உண்டாக்கப்பட்ட பூக்கள், இலைகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவங்கலைப் போச்சம்பள்ளி ஐகாட் பட்டில் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு அந்த நெசவாளர்களுக்கு நெசவுக்கலை மீதான துல்லியமான அறிவும், தனித்திறமையும் இருந்தாலொழிய இத்தகைய நுட்பமான டிஸைன்களுடன் புடவை நெசவு என்பது இயலாத காரியமே!

தற்போது போச்சம்பள்ளி புடவைகள் என அழைக்கப்பட்டாலும் இந்தப் புடவைகளின் பூர்வீகம் பிரிவினைக்குப் பின்னான தற்போதைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சிராலா நகரமே. சிராலா என்றால் தெலுங்கில் ’சீர’ என்றும், தமிழில் ’புடவை’ என்றும் அர்த்தம். ஆந்திராவில் இந்த நகரத்தை ’சிட்கு’ என்று குறிப்பிடுகிறார்கள். ஆரமபத்தில் சிராலாவில் பிரதானமாகத் தயாரிக்கப்பட்டவை நம்ம ஊர் லங்கோடுகள், பளீரிடும் அடர் வண்ணங்களில் நெசவு செய்யப்பட்ட லுங்கிகள், டர்பன்கள் போன்றவை தானாம்! அவை இங்கிருப்பவர்களுக்காக மட்டுமல்ல 1930 களில் பர்மா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும், கண்டங்களுக்கும் அவை ’ஆசியா ருமால்கள்’ என்ற பெயரில் பெருமளவில் ஏற்றுமதியாகின. ’ருமால்’ என்றால் கர்சீப் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாமாம். முதலில் துண்டுத் துணியாக, துணி பெல்ட்டாக இப்படித் தொடங்கி வளர்ந்த இந்த ஊரின் நெசவுக் கலையில் கைத்தறிப் புடவை நெசவு என்பது 1960 க்குப் பிறகு தான் பரவலாக தொடங்கப்பட்டது. சிராலாவில் தொடங்கிப் பின் அது போச்சம்பள்ளிக்கு இடம் மாற்றப்பட்டது.

போச்சம்பள்ளி புடவை நெசவுக்குத் தேவையானவை:
 
போச்சம்பள்ளி ஸ்டைலில் ஒரு கைத்தறிப் புடவையோ அல்லது ஐகாட் பட்டுப் புடவையோ நெசவு செய்யவேண்டுமெனில் அதற்கு சுத்தமான பருத்தி நூல், பட்டு நூல், ஜரிகை நூல் இவை மூன்றும் தேவை.

போச்சம்பள்ளி கைத்தறி நெசவுத் தொழில்நுட்பம்:

போச்சம்பள்ளி நெசவுத் தொழில்நுட்பம் என்பது ’ரெஸிஸ்ட் டையிங் தொழில்நுட்பத்தை’ அடிப்படையாகக் கொண்டது. அதாவது புடவையில் நாம்
விரும்பும் டிஸைன்களைக் கொண்டு வரும் முன் சாயமேற்றும் வேலை நடைபெறும். அப்படிச் சாயமேற்றும் போது பழைய முறைப்படி நாம் விரும்பும் இடங்களில் மட்டும் ஸ்பெஷல் மோடிஃப்கள் மூலம் அழகான டிஸைன்களை நெசவு செய்வதற்கு ஒதுக்கிக் கொண்டு முந்தானைப் பகுதியிலோ அல்லது உடல்பகுதியிலோ மீதமுள்ள  இடங்களில் சாயம் பரவும் வகையில் சாயமேற்றும் முறைக்கு ரெஸிஸ்ட் டையிங் தொழில்நுட்பம் என்றூ பெயர். இந்த வகை சாயமேற்றும் தொழில்நுட்பம் புடவையின் வார்ஃப் களில் மட்டும் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது ’வார்ஃப் ஐகாட்’ என்றும், வெஃப்டில் மட்டும் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது ’வெஃப்ட் ஐகாட்’ என்றும் கூறப்படுகிறது. சில சமயங்களில் வார்ஃப், வெஃப்ட் இரண்டிலுமே இந்த வகை ரெஸிஸ்ட் டையிங் முறை பயன்படுத்தப் பட்டிருந்தால் அதற்கு ’டபுள் ஐகாட்’ என்று பெயர். இப்போதைய நவீன டிரெண்டுக்கு ஏற்றவகையில் ஐகாட் நெசவாளர்கள் பாரம்பரிய மயில், யானை, கிளி, டைமண்ட், மலர்கள் போன்றவற்றை டபுள் ஐகாட் முறையில் வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப மனம் கவரும் வகையில் நெய்து தர முடிவது தான் போச்சம்பள்ளி ஐகாட் புடவைகளின் தனிச் சிறப்பு.

போச்சம்பள்ளி புடவை நெசவை வீடியோ பதிவாக இங்கே காணலாம்;

குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்தில் தயாராகி இஸ்திரி செய்து மடித்து விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்படும் எளிமையான போச்சம்பள்ளி கைத்தறிப் பட்டுப்புடவைக்கான வீடியோ பதிவை இங்கு காணலாம். பட்டுப் புடவைகளை மடித்து வைப்பதென்பது ஒரு மாபெரும் கலை. கடையிலிருந்து வரும் போது கையடக்கமாக வெகு பாந்தமாக மடிக்கப்பட்டு மொட மொடப்பாக ஸ்பரிசிக்கும் பட்டுப் புடவைகளை வீட்டுக்கு வந்த பின் ஒரெ ஒரு முறை கலைத்து விட்டாலும் நம்மால் ஜவுளிக்கடைக்காரர்கள் மடிப்பதைப் போலவே அத்தனை கச்சிதமாக மடிக்க முடியாது. இங்கே இவர்களைப் பார்த்தாவது பட்டுப்புடவைகளை மடிக்கும் ஆர்வத்தைக் கொஞ்சம் தணித்துக் கொள்ளலாம்.
                                                                                 


ஒரிஜினல் போச்சம்பள்ளி புடவைகளை எப்படி அடையாளம் காண்பது?

சிம்பிள், ஒரிஜினல் போச்சம்பள்ளி புடவைகள் என்றால் புடவையின் முன்புறமும், பின்புறமும் ஒரே விதமான தோற்றத்துடன் இருக்கும். சமயத்தில் நமக்கு புடவையின் எந்தப் பகுதியை வெளித் தெரியும் வண்ணம் கட்டுவது எதை உட்புறமாக மடித்துக் கட்டுவது என்று குழப்பமே வந்து விடும். அத்தனைக்கு அத்தனை போச்சம்பள்ளி புடவைகள் முன்னும், பின்னும் ஒன்று போலவே இருக்கும். அதோடு போலிகள் என்றால் புடவைகளின் உட்புறம் அடையாளம் காட்டிக் கொடுத்து விடும்.

ஒரிஜினல் போச்சம்பள்ளி புடவைகள் எங்கே கிடைக்கும்?

அனைத்து பட்டு ஜவுளி மாளிகைகளிலும் போச்சம்பள்ளி கைத்தறிப் பட்டுப் புடவைகள் கிடைக்கும். சென்னையைப் பொருத்த வரை நல்லி, பாலம் சில்க்ஸ், சுந்தரி சில்க்ஸ், ராதா சில்க் எம்போரியம், குமரன், சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி, போத்தீஸ், மதார்ஷா உள்ளிட்ட மொத்த பட்டு விற்பனை நிலையங்களிலும், காதி, சர்வோதயா உள்ளிட்ட அரசு சார்ந்த ஜவுளி விற்பனை நிலையங்களிலும் ஒரிஜினல் போச்சம்பள்ளி புடவைகளை நம்பி வாங்கலாம்.

பராமரிப்பு:

பிற பட்டுப் புடவைகள் போல அல்லாமல் போச்சம்பள்ளி புடவைகளை சற்று நறுவிசாகக் கையாண்டால் சீக்கிரம் மொட மொடப்புக் குறையாமல் புத்தம் புதிதாகவே தோன்றும். எல்லாப் பட்டுப் புடவைகளைப் போலவே இவற்றையும் உலர் சலவைக்கு கொடுத்து வாங்குவது உகந்தது. இல்லாவிட்டால் சீக்கிரம் கொச கொசவென்றாகி உடுத்தும் ஆர்வத்தைக் குறைத்து விடும்.

அடுத்த வாரம் 2000 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கிரேக்க, ரோமானியர் காலத்திலிருந்து இன்றூ வரையிலும் அழியாமல் காக்கப்பட்டு இந்தியப் பெருமை பேசும் ‘பைத்தானி கைத்தறிப் பட்டுப் புடவைகளைப்’ பற்றி காணலாம்.

சாம்பிளுக்கு சில புடவைகள்  இங்கே;

தொடரும்...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com