டாங்கைல் கைத்தறி பருத்தி மற்றும் பட்டுப் புடவைகள்!

டாங்கைல் புடவைகளின் புட்டாக்கள் மற்றும் பார்டர் டிசைன்கள் சற்றே எம்பிக் கொண்டு புடைப்பாகத் தோற்றமளிக்கும் இவை பிற கைத்தறிப் புடவைகளில் இருந்து இவற்றை பிரித்துக் காட்டும்.
டாங்கைல் கைத்தறி பருத்தி மற்றும் பட்டுப் புடவைகள்!

தோற்றம்:

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காளத்தில் டாங்கைல் மாவட்டத்தில் இந்தப் புடவை நெசவு உருவானதால் பிற கைத்தறிப் ப்புடவைகள் போலவே இந்தப் புடவைகளும் ஊர் பெயரால் அடையாளம் காணப்பட்டன. டாங்கைல் புடவைகள் என்றவுடன் இதேது? பெயர் வித்யாசமாக இருக்கிறதே என்று இணையத்தில் தேடினால், முகலாயர் காலத்தைய ஜம்தானி புடவைகளின் எளிமையான வடிவம் தான் டாங்கைல் புடவைகளாம். ஜம்தானி மிகவும் மெல்லியது அதோடு உடல் முழுதும் பார்டர் பகுதியிலும் புட்டாக்களும், மோட்டிஃப்களுமாக மிகப் பகட்டாகத் தோற்றமளிக்கக் கூடியதும் கூட. ஆனால் டாங்கைல் சற்றேறக் குறைய ஜம்தானியை ஒத்து இருந்தாலும் உடல் பகுதியில் கலைநுணுக்கமான கை வேலைப்பாடுகள் குறைக்கப்பட்டு பள்ளு அல்லது முந்தானைப் பகுதியில் மட்டும் செய்நேர்த்தி மிக்க எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நெசவு செய்யப் பட்டிருக்கும். இதனால் ஜம்தானி நெசவைப் போலன்றி இந்த வகைப் புடவை நெசவுக்கு நெசவாளர்களின் எண்ணிக்கை மற்றும் நெசவுக் கூலி இரண்டுமே குறைவாகவே தேவைப்படும்.

ஜம்தானியின் எளிய வடிவமே டாங்கைல் புடவைகள்:

 சுருக்கமாகச் சொல்வதென்றால் நம்ம ஊர் காஞ்சிப் பட்டுக்கு மாற்றாகவும் அதே சமயம் விலை குறைவாகவும் இருக்குமாறு ஆரணி நெசவுப் பட்டுகளைக் கொண்டு வந்தார்கள் இல்லையா? அப்படித் தான் ஜம்தானி வாங்க முடியாத நிலையிலிருக்கும் சாமானிய மக்களின் ஜம்தானிப் பட்டுக் கனவைக் நிறைவேற்றவே அதன் மாற்று வடிவமாக டாங்கைல் பருத்தி மற்றும் பட்டுப் புடவை நெசவு வந்தது என்றால் பொருத்தமாக இருக்கும். கிழக்கு வங்காளத்தின் டாங்கைல் மாவட்டத்திலிருந்து இந்த பிரத்யேக நெசவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டாங்கைல் புடவைகளை நெய்து கொண்டிருந்த நெசவாளர்களின் பல பிரிவினர் தொழில் போட்டியினாலும், நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பின்னான பிரிவினைப் பூசல்களாலும்  கிழக்கு வங்கத்தை விட்டு மேற்கு வங்கம் முழுவதுமே பூலியா, சாந்திப்பூர், நபதீப், நாடியா மாவட்டம், சமுத்ரகார்க், தாத்ரிகிராம், கல்னா, பலூர்காட், கங்காராம்பூர், தினஜ்பூர் எனப் பல இடங்களுக்கும் பரவ ஆரம்பித்தனர். சுதந்திர இந்தியாவில் மேற்கு வங்காளம் தனி மாநிலமானதும் இந்த நெசவாளர்கள் அனைவரும் அவரவர் தஞ்சமடைந்த ஊர்களையே சொந்த ஊராக்கிக் கொண்டாலும் அந்தந்த ஊர்ப் பெயர்களோடு சேர்த்து தங்களது டாங்கைல் கைத்தறி நெசவையும் இணைத்துக் கொண்டு புடவை நெசவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போது டாங்கைல் கைத்தறிப் புடவைகள் பூலியா டாங்கைல், சாந்திப்பூர் டாங்கைல், பலூர்காட் டாங்கைல் என்றெல்லாம் வித விதமான பெயர்களில்நமக்குக் கிடைப்பதற்கு காரணம் அந்தந்த ஊர்களில் எல்லாம் டாங்கைல் நெசவு நடைபெறுகிறது என்பதற்கான ஆவண மூலங்கள் எனலாம்.

டாங்கைல் புடவைகளில் சாந்திப்பூர் வகையில் மட்டும் தான்  புடவை பார்டர் பகுதியில் பாரம்பரியமான பழைய முறைப்படி தாமரைப்பூ மற்றும் அகல் விளக்குகள் நெசவு செய்யப் படுகின்றன.

பயன்படுத்தப் படும் பொருட்கள்:

டாங்கைல் நெசவாளர்கள் பொதுவாக 80 S மற்றும் 100 S எண்ணிக்கையிலான பருத்தி மற்றும் 72 S, 76 S எண்ணிக்கையிலான சணல் நூல்களையே புடவை நெசவுக்குப் பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் எக்ஸ்ட்ரா வார்ஃப் டிசைன்களுக்கு டஸர் சில்க் நூல் மற்றும் பள பளப்பாக்கப் பட்ட பருத்தி நூல் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள், ஆனால் தற்போது பார்டர்களில் டிசைன்கள் நெய்வதற்கு 2/100 S,2/80 S அளவுகலில் முறுக்கப்பட்ட பருத்தி நூல்களை பயன்படுத்தி வருகின்றனர். ஜக்கார்டுகள் மூலமாகவும் பார்டர் டிசைன்கள் நெசவு செய்யபடுகின்றன. வண்ண நூல்களும் வார்ஃப் மற்றும் வெஃப்ட், எக்ஸ்ட்ரா வெஃப்ட் டிசைன்களுக்கு பயன்படுத்தப் படுகின்றன. டாங்கைல் புடவைகள் மற்ற பாரம்பரிய கைத்தறிப் புடவைகளைப் போலவே தங்க மற்றும் வெள்ளி ஜரிகை வேலைப்பாடுகளுக்காகவும் அவற்றின் செய் நேர்த்திக்காகவும் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற புடவைகளே!

டாங்கைல் நெசவுத் தொழில்நுட்பம்:

டாங்கைல் கைத்தறிப் புடவைகள் இதுவரையிலான புடவை நெசவு முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மிக மிக மெல்லியதாகவும், மிருதுவானதாகவும் நெய்யப் படுகின்றன. கண்ணாடி போன்ற மெல்லியதும், ஊடுருவும் தன்மை கொண்டதுமான  புடவையின் உடல் பகுதியில் தேர்ந்த கலை நயம் மிக்க மோட்டிஃப்கள் நெசவு செய்யப் படுகின்றன. பார்டர்கள் மற்றும் எக்ஸ்ட்ரா வார்ஃப் மற்றும் வெஃப்ட் டிசைன்கள் நெசவு செய்ய 100 முதல் 200 கொக்கிகள் கொண்ட ஜக்கார்டுகள் பயன்படுத்தப் படுகின்றன. ஒரு தறிக்கு ஒரு ஜக்கார்டு வீதம் பயன்படுத்தப் பட்டு உடல்பகுதியின் எக்ஸ்ட்ரா வார்ஃப் மற்றும் வெஃப்ட் டிசைன்கள் 60 S மற்றும் 80S வண்ண நூல்களைக் கொண்டு நெய்யப்படுகின்றன.

ஒரிஜினல் டாங்கைல் கைத்தறிப் புடவைகளை எப்படி அடையாளம் காண்பது?

ஒரிஜினல் டாங்கைல் புடவைகளை அவற்றின் எக்ஸ்ட்ரா வார்ஃப் டிசைன்கள் மற்றும் ஜாக்கார்டுகளில் ’லிஃப்டிங்’ தொழில்நுட்பம் மூலம் நெசவு செய்யப்பட்ட கலை நயமிக்க பார்டர்கள் மற்றும் புட்டாக்கள் வாயிலாக எளிதாக அடையாளம் காண முடியும். ஏனெனில் டாங்கைல் புடவைகளின் புட்டாக்கள் மற்றும் பார்டர் டிசைன்கள் சற்றே எம்பிக் கொண்டு புடைப்பாகத் தோற்றமளிக்கும் இவை பிற கைத்தறிப் புடவைகளில் இருந்து இவற்றை பிரித்துக் காட்டும்.

'அசல் டாங்கைல்’ கைத்தறிப் புடவைகளை இந்த யூ டியூப் விடியோவிலும் கண்டு களிக்கலாம், புடவை வாங்கும் ஆர்வத்தை தூண்டக் கூடிய வகையிலான அழகழகான வண்ணங்களில் ஒவ்வொரு புடவையும் கண்ணைப் பறிக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் சப் டைட்டிலுடன் கூடிய இந்த வீடியோவை ஒரு முறை பார்த்து விடுங்கள்.

டாங்கைல் கைத்தறி நெசவில் தற்போது காட்டன் புடவைகள், பட்டுப் புடவைகளோடு சுரிதார் மெட்டீரியல்களும் கிடைக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com