பூவிலே பூத்த பூக்கள்!

"ஐயா, நீங்கள் சொன்ன பாட்டு அதுக்குச் சொன்ன விளக்கம், அதுல வந்த கணக்கு எல்லாம் புரிஞ்சுச்சு சரிதான், தாமரைப் பூவுல கருநீல குவளைப்பூக்கள் எப்படி பூக்கும்?'' என்று ஆர்வமாய் கேட்டார் தமிழ்மணி. 
பூவிலே பூத்த பூக்கள்!

உன்னோடு போட்டிபோடு! - 44

"கண்டதுண்டு கேட்டதில்லை காண்''  என்று ஒரு பாடலை ஈற்றடியாய் முடித்திருப்பார்.  "எங்கே இங்க யாராவது இந்த ஈற்றடிப் பாட்டை முழுமையாகச் சொல்லமுடியுமா?'' என்று கேட்டார் தமிழையா.
"பூனைக்கு ஆறுகாலா? அப்ப ஆனைக்கு அறுபது காலா?...'' என்று கோமாளி தொடங்க,

"இப்படிப்பட்ட தமிழ் பாட்டெல்லாம் வெறும் பொழுதுபோக்கு பாட்டுக்கள் அல்ல, புத்திக்கு வேலை கொடுக்கும் பாட்டு. எப்படி என்றால்? மனிதர்களுக்கு கால்கள் இரண்டு என்றால், விலங்குகள் போன்ற மற்ற உயிரினங்களுக்கு கால்கள் கூடுதலாக இருக்கும்''  என்று தமிழையா சொல்ல, நானும் அவரைத் தொடர்ந்து, "ஐயா சொல்வது உண்மைதான், டிஸ்கவரி சேனலில் நான் ஒரு முறை ஒரு காட்சியைப் பார்த்தேன், அதில் இரண்டு கால்களை உடைய மனிதன், நான்கு கால்களை உடைய விலங்குகள், ஆறு கால்களை உடைய வண்டினங்கள், எட்டுக் கால்களை உடைய சிலந்தி, நிறையக் கால்களை உடைய மரவட்டை என வரிசையாகக் காண்பித்துக்கொண்டே வந்தார்கள்'' என்று நான் அடுக்கிக் கொண்டே போக, 

"வாட் இஸ் மீன் பை மரவட்டை?'' என்று பேத்தி பாட்டியிடம் கேட்க, பாட்டியும் சற்றே திகைக்க, "ரயில்வண்டிப் பூச்சி'' என்று ஒரு பெரியவர் மொழி பெயர்த்தார். 
"ரயில் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி அந்தப் பூச்சிக்கு பேரு என்ன?'' என்று மீசைக்காரர் கேட்க, "அத அந்தப் பூச்சிக்கிட்டதான் கேட்கணும், கொஞ்ச நேரம் பேசாம இருங்கையா'' என்று கோபமாகச் சொன்ன அந்தப் பெரியவர், என்னைப் பார்த்து "ஐயா நீங்க சொல்லுங்க'' என்று வேண்டினார்.

"நான் சொல்ல வந்தது இதுதான், நிறையக் கால்களை உடைய  மரவட்டை, எட்டுக் கால்களை உடைய சிலந்தி, ஆறு கால்களை உடைய வண்டுகள், நான்கு கால்களை உடைய விலங்குகள் இவை எல்லாவற்றையும் ரெண்டே கால்களை உடைய மனிதன் அடக்கி ஆள்கிறான்! என்று அந்தத் தொலைக்காட்சியில் விளக்கம் சொன்னார்கள். எனவே ஆற்றல் என்பது கால்களில் மட்டுமில்லை'' என்று நான் சொன்னேன். 

"சரி அதெல்லாம் இருக்கட்டும்  "கண்டதுண்டு கேட்டதில்லை காண்'  என்ற கடைசி வரிக்கான முழுப்பாட்டுதான் என்ன?'' என்று தமிழ்மணி ஆர்வமாய்க் கேட்டார். 

இப்போது தமிழையா தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாடலைச் சொல்லத் தொடங்கினார். 

"பூனைக்கு ஆறுகால் புள்ளினத்துக்கு ஒன்பது கால் 
ஆனைக்குக் கால் பதினேழு ஆனதே- மானேகேள்
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு
கண்டதுண்டு கேட்டதில்லை காண்''. 

என அவர் கணீரென்ற குரலில் சொல்லிமுடிக்க "ஹரஹர மகாதேவா'' என்று சில பெரியவர்கள் கன்னத்தில் போட்டுக்கொண்டு கிழக்கு நோக்கிக் கும்பிட்டார்கள். 

"ஏ! பெரிசுகளா, ஐயா என்ன கும்பாபிஷேகம் பண்ணி மந்திரமா சொல்றாரு, அவர் சொல்றது தமிழ் பாட்டுதான்யா'' என்று சொன்ன மீசைக்காரர் சற்றே பவ்யமாக தமிழையாவிடம் கேட்டார். "ஐயா நீங்க சொன்னது தமிழ்பாட்டுதான?'' 

தமிழையாவும் சிரித்துக்கொண்டே, "இது தமிழ்ப்பாட்டுதான்யா. ஆனா விடுகதைப்பாட்டு, பூட்டுப்பாட்டு, இந்தப் பூட்டுக்குள்ளேயே இந்தப் பாட்டுக்கான சாவி இருக்கு, எங்கே யாராவது சாவியைக் கண்டுபிடிச்சு பூட்டைத் தொறந்து பாட்டுக்கு பொருள் சொல்லுங்க பார்ப்போம்'' என்று சவால் விடுவது போல் கேட்டார். 

"நல்லா இருக்குதுயா நீங்க சொல்றது, எங்களுக்குப் பாட்டே புரியல என்று சொல்லுறோம், நீங்க என்னடான்னா பாட்டு, பூட்டு, போல்ட்டு, நட்டுன்னு சொல்லிக்கிட்டே போறீங்க'' என்று ஓர்  இளைஞர் ஆதங்கத்தோடு கேட்டார்.  

"தம்பி, ஒரு செய்தி  புரியவில்லை என்றால் ஒரேயடியாக அதை ஒதுக்கி விடுவதைக் காட்டிலும் அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தாலே வெற்றிக்கான வாசல் திறந்து விடும். நகைச்சுவையான, வீரம்நிறைந்த ஆங்கிலப் படங்கள் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடுகின்றன. ஆங்கிலம் தெரியாத பிறமொழி ரசிகர்களும் அதை ஆர்வத்தோடு பார்த்துப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள், புரிந்துகொண்டு ரசிக்கிறார்கள், பிறரையும் ரசிக்கத் தூண்டுகிறார்கள். தமிழ் நம் தாய்மொழி. நாம் அதை விருப்பத்தோடு புரிந்துகொள்ள முயன்றால் வெற்றி பெறுவோம் இது உறுதி'' என்றார்.

"ஐயா சொல்றது உண்மைதாங்க, ஷோலே, பாபி போன்ற ஹிந்திப் படங்களும் தமிழ்நாட்டுல 100 நாட்கள் ஓடிருக்கு. நானே எட்டுத்தடவ பார்த்திருக்கேன்'' என்றார் மீசைக்காரர் மகிழ்ச்சியோடு. 

"ஏன்?  "ஹம் ஆஃப் ஹே ஹெய்ன் ஹோன்னு'  ஒரு படம் மதுரையிலேயே ஒரு வருஷம் ஓடிச்சு'' என்று சொல்லத் தொடங்கிய ஹெட்போன் பாட்டி "தீதி தேரா தேவர்திவானா ஹரே ராம்' என்று அந்த ஹிந்திப் பாடலை மெதுவாகக்  "ஹம்' செய்து பாடத்தொடங்க அந்த இளைஞர் கூட்டமே எழுந்து பாடிக்கொண்டே ஆடத் தொடங்கியது. 

அவர்களின் ஆட்டத்தைப் பார்த்து சற்றே ஆடிப்போன தமிழையா "அமைதி, அமைதி... நீங்க பாடுன, ஆடுன பாட்டோட பொருள் இந்தப் பெரியம்மா மாதிரி மொழி தெரிஞ்சவுங்களுக்குத்தான் தெரியும், ஆனாலும் பாருங்க நல்லா இருக்குற எல்லா விஷயத்தையும் நாம ரசிக்கணும்னு விரும்புறோம் இப்ப நான் சொன்ன அந்தப் பாட்டுக்குப் பொருள் சொல்றேன் கேளுங்க,

பூவிலே அமர்ந்து தேனை நக்கிக் குடிக்கின்ற வண்டுகளுக்கு (பூ நக்கி)  ஆறுகால்கள்,

புள் என்றால் பறவை.  இப்புள்ளினமாகிய பறவைகளுக்கு ஒன்பது கால். எப்படித் தெரியுமா? 

கால்+கால் = அரை (1/4+1/4=1/2)  நாலு கால் சேர்ந்தால் ஒன்று. எட்டுக்கால் இரண்டு. ஒன்பது கால் = ரெண்டே கால் (2 டீ)  அதாவது பறவையினங்களுக்கு ரெண்டே கால்தான். கால் ரெண்டு தான் இதே போல யானைக்கிப் பதினேழே கால் = நாலே கால்  (17 டீ = 4 டீ ) தாமரை மலரின் மீது முழு நீள மலர்கள் பூத்ததை பார்த்தவர்கள் உண்டு, கேட்டவர்கள் இல்லை, இதுதான் இந்தப் பாட்டுக்கான பொருள்'' என்று தமிழையா சொல்லி முடித்தார். 

அங்கிருந்தவர்கள் மர்மக்கதை கேட்பது போல திகிலோடு அமர்ந்திருக்க,  சில பெரியவர்கள் மனக்கணக்கு போட்டார்கள், இன்னும் சில பேர் மணலில் கணக்குப் போட்டார்கள், ஹெட்போன் பாட்டியும், பேத்தியும் கால்குலேட்டரில் கணக்குப் போட்டார்கள்.

அப்போது தமிழ்மணி, தமிழையாவிடம் "ஐயா கால் என்பது (1/4) நூறில் இருபத்தைந்து தானே? அதாவது 1இல் 0.25 தானே என்று கேட்டார்.

"ஆம், கால் (1/4)  என்பது நீங்கள் சொல்வது போல 0.25, அரை என்பது (1/2) 0.50, முக்கால் என்பது (3/4) 0.75  கால், அரை, முக்கால், ஒன்று என்று வைத்துக்கொண்டால் இந்தப் பாடலை சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்'' என்று விளக்கம் சொன்னார். 

தன் டைரியில் இதையெல்லாம் குறித்துக்கொண்டே வந்த மீசைக்காரர்,

"இதெல்லாம் சரி, 
 "முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு
  கண்டதுண்டு கேட்டதில்லை காண்' .
 இந்த வரிகளுக்கு அர்த்தம் சொல்லலையே நீங்க?'' என்று விடாமல் கேட்டார். தமிழையா சிரித்துக் கொண்டே "நீங்கள் தான் சரியான எதிர்க்கட்சிக்காரர், உங்களைப் போன்றவர்கள் சட்டசபையில் இருந்தால் சபை கலகலப்பாக இருக்கும்'' என்று சொல்லிவிட்டு, முண்டகம் என்பது தாமரைப்பூ, முழு நீலம் என்பது குவளைப்பூ, தாமரைப் பூவின் நடுவே குவளைப் பூக்கள் பூத்திருப்பதை பார்த்திருக்கிறோம், இதை யாராவது கேள்விப்பட்டால் அதாவது கேட்டால் நம்புவார்களா? இதுதான் அந்த ரெண்டு வரிகளுக்கான பொருள்'' என்றார். 

"ஐயா, நீங்கள் சொன்ன பாட்டு அதுக்குச் சொன்ன விளக்கம், அதுல வந்த கணக்கு எல்லாம் புரிஞ்சுச்சு சரிதான், தாமரைப் பூவுல கருநீல குவளைப்பூக்கள் எப்படி பூக்கும்?'' என்று ஆர்வமாய் கேட்டார் தமிழ்மணி. 

தமிழையா சற்று நேரம் மெளனமாய் இருந்து பின் சிறு புன்னகையோடு, "உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா தமிழ்மணி?'' என்று கேட்டுவிட்டு இளைஞர்களையும் பார்த்து "உங்களாலும் புரிந்துகொள்ள முடியவில்லையா?'' எனக் கேட்டார்.

இப்போது ஹெட்போன் பாட்டி தமிழையாவைப் பார்த்து "இதச் சொல்ல ஏன் இவ்வளவு தயங்குறீங்க?'' என்று கேட்க, நான் உடனே "அவர் தயங்கவில்லை இப்பாடலில் தாமரை மலர் என்பது பெண்களின் முகத்தையும், கருநீலக் குவளைப்பூக்கள் அவர்களின் கண்களையும் குறிப்பன என்பது பாடலைப் பாடிய புலவரின் கருத்து இதைத்தான் தமிழையா சொல்ல வந்தார். அதாவது முகமலரில் பூத்த புதுமலர்கள் சரிதானே ஐயா?'' என்று நான் தமிழையாவைக் கேட்டேன். "ஆம் பூவிலே பூத்த பூக்கள்'' என்று அவரும் சொன்னார்.

"ஓஹோ, பெண்களின் முகத்தை பூக்களோடு ஒப்பிட்டு சொல்லும் வழக்கம் அக்காலத்தில் இருந்தே இருக்கிறதா? நம் கவியரசு கண்ணதாசனும் சொல்லியிருப்பாரே?'' என்று தமிழ்மணி கேட்க...

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com