மீனாட்சி குருக்கள்: களரிப் பயட்டில் கலக்கும் பாட்டி! 

ஜூன் முதல் செப்டம்பர்’ வரை பயிற்சி
மீனாட்சி குருக்கள்: களரிப் பயட்டில் கலக்கும் பாட்டி! 
Updated on
2 min read

சமீப  நாட்களில் பெண்கள் தற்காப்புக் கலை பயில்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். வயது வித்தியாசமின்றி பெண்களுக்கு எதிராக பெருகி வரும் சமூகக் குற்றங்களை நோக்கும் போது பெண்களிடையே இது வரவேற்கத்தக்க முன்னேற்றம். தற்காப்புக் கலைகளைப் பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் கற்றுக் கொடுப்பவர்கள் ஆண்களாக இருப்பார்கள், முதல் முறையாக இப்படிப்பட்ட தற்காப்புக் கலையைக் கற்றுத் தர பெண் மாஸ்டர்களும் உண்டு தெரியவந்தால் நல்லது தானே! அப்படித் தான்  மீனாட்சி குருக்களை பற்றிக் கேள்விப்பட்டவுடன் ஆச்சர்யமாக இருந்தது. 

கேரளாவின் கள்ளிக்கோட்டைக்கு அருகில் வடகரை எனும் குக்கிராமத்தில் 'கடத்தநாடன் களரி சங்கம்' என்ற பெயரில்  ஒரு களரிப் பயிற்சிப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பயிற்சி பள்ளியை நடத்தி  வரும்  திருமதி. மீனாட்சி குருக்களுக்கு வயது 76. கடந்த 68 வருடங்களாக ஆண்டொன்றுக்கு சுமார் 150 மாணவர்கள் வீதம்  இவர் களரி பயிற்சி அளித்து வருகிறார். இந்த வயதிலும் பயிற்சி அளிப்பதை இவர் நிறுத்தவில்லை. இவரது மாணவர்களில்  பெரும்பாலும் பெண்களும் சிறுமிகளும் அதிகம்.

ஒவ்வொரு வருடமும் தினமும் மூன்று வகுப்புகள் எனும் கணக்கில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பது தவிர  கோயில்கள் மற்றும் கேரள பாரம்பரிய  விழாக்களில் நடைபெறும் களரி நிகழ்வில் பங்கு பெறுவதற்காக மட்டுமே மீனாட்சி களரி பயிற்சி எடுத்துக் கொள்கிறார். இந்த வயதில் ஆண்டுக்கு 60 களரி பயட்டு நிகழ்ச்சிகள் வரை இவர் பங்கேற்று வாள் சுழற்றுகிறார். மீனாட்சி குருக்களின் களரி சண்டையைக் காண்போர் அவரது வயதை மறந்து விடுவார்கள், பயிற்சிக் களத்தில் மாணவ, மாணவிகளோடு அவரும் ஒரு மாணவியாக இமைக்க மறந்த கண்களோடு களறியாடுவதை கேரள சினிமாக்காரர்கள் இதுவரை படங்களில் காட்சியாக்காமல் விட்டிருக்க வாய்ப்பில்லை.

18 வயதில் களரி வித்தகர் வி.பி.ராகவனை மணந்து வடகரைக்கு வந்த மீனாட்சி குருக்களுக்கு அவரது கணவர் ஒரு வாக்களித்தார் தான் கற்றுக் கொண்ட களரியை மனைவியான அவருக்கும் கற்றுத் தருவதாக. அதன் படி மீனாட்சி குருக்களுக்கு  களரி கற்றுக் கொடுத்ததோடு தான் தொடங்கிய 'கடத்தநாடன் களரிப் பயிற்சி பள்ளியையும்’ தன் மனைவியின் பொறுப்பில் ஒப்படைத்து சில வருடங்களுக்கு முன் மறைந்தார். அப்படிப்பட்ட பெருமைக்குரிய  கணவரின்  நினைவுகளும், 6 வயது முதலே தன்னையும் தன் சகோதரியையும் களரிப் பயிற்சிக்கு அழைத்துச் சென்ற பாரபட்சமற்ற தந்தையின் நினைவுகளும் மீனாட்சி குருக்களை எப்போதும் நெகிழ வைப்பவை.

பெண் குழந்தைகளுக்கு களரி எதற்கு? என்ற சிந்தனை பரவியிருந்த அந்தக் காலத்திலேயே மீனாட்சி குருக்களின் தந்தை அதை பொருட்படுத்தியதில்லை தொடர்ந்து தன் இரு பெண் குழந்தைகளையும் பயிற்சிக்கு அழைத்துச் செல்வதில் அவர் கவனமாக இருந்தார். அதனால் தான் நமக்கு இன்று ஒரு மீனாட்சி குருக்கள் கிடைத்த்த்தார். இவரது மாணவிகளில் பலர் இன்று களரிப் பயிற்சியாளர்களாகவும், குருக்களாகவும் கேரளா முழுவதும் பரவி இருக்கிறார்கள்.

சொல்ல மறந்த விஷயம் மீனாட்சி குருக்கள் தான் அளிக்கும் களரிப் பயிற்சிக்கு கட்டணம் எதுவும் நிர்ணயிக்கவில்லை. பழங்கால குருதட்சிணை முறைப்படி பயிற்சி முடிந்து செல்லும் மாணவ மாணவிகள் தங்களுக்கு எது விருப்பமோ அதை தங்கள் குருவுக்கு காணிக்கையாகத் தரலாம் எனும் முறையையே பின்பற்றி வருகிறார். ஆண்டு தோறும் ’ஜூன் முதல் செப்டம்பர்’ வரை பயிற்சி நடைபெறும். ஆர்வமுள்ள பெண்கள் கற்றுக் கொள்ளுங்கள். கேரளா அப்படி ஒன்றும் தூரமில்லையே! நிர்பயாக்கள், விநோதினிகள்,வினுப்பிரியாக்கள், சுவாதிகள் இன்னும் எத்தனை எத்தனையோ பெண்களின் ஜீரணிக்க முடியாத மரணங்களை இப்படியாவது தவிர்க்க முடிகிறதா என்று பார்ப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com