

மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் உச்சமாக நடனம் திகழ்கிறது. கல்வி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபாடு இல்லாதவர்களும் நடனம் என்னும் தனித்திறனால் பாராட்டுக்களைப் பெற முடியும்.
மேற்கத்திய நடனம், பரதநாட்டியம் போன்றவற்றுக்கு மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக நாட்டுப்புற நடனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் நாட்டுப்புற நடனங்களைக் கற்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. திரைத்துறையிலும், பயிற்சிக் கூடங்களிலும் நாட்டுப்புற நடனக்கலைஞர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்புகள் மிகுந்து காணப்படும் துறையாக நாட்டுப்புற நடனத்துறை மாறியுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த நாட்டுப்புற நடன பயிற்சியாளர் சி.ஆரோக்கியம் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
""கரகாட்டம், கும்மியாட்டம், களியலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பறையாட்டம், காவடியாட்டம், சிலா ஆட்டம், தேவராட்டம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தமிழக நாட்டுப்புற நடனங்கள் உள்ளன. 10 வயதைக் கடந்த அனைவரும் இந்த நடனங்களைப் பயில முடியும். மிகுந்த ஆர்வமுடன் பத்து ஆண்டுகள் தொடர்ந்து பயிலும் ஒருவர் நாட்டுப்புற நடனப் பயிற்சியாளராக மாற முடியும்.
இளைஞர்களுக்கு நாட்டுப்புற நடனங்கள் மீது ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் உள்ளன. ஆனால், அவை குறித்த விழிப்புணர்வு கல்வி நிறுவனங்கள், பெற்றோர்களிடம் இல்லாமல் உள்ளது. 6 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களிடம் நாட்டுப்புற நடனக் கலையை வளர்க்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசால் தனித்திறன் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கல்லூரி செல்லும் இளைஞர்கள் நாட்டுப்புற நடனத் திறமையை வெளிக்காட்டும் வகையில் மத்திய அரசின் இளைஞர் நலத்துறையின் உதவியோடு அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான இளைஞர் திருவிழா நடத்தப்படுகிறது. தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், அந்தமான்நிகோபார் தீவுகள், புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களின் நாட்டுப்புற நடனக்குழுவினர் போட்டியிட்டு அதில் முதலிடம் பெறும் அணி தேசிய போட்டிக்கு தகுதிபெறும். அங்கு வெற்றி பெறுவோருக்கு பாராட்டுச் சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை மூலம் இந்திய நாட்டிய விழா நடைபெறுகிறது.
இப்போட்டிகளில் பங்கேற்ற ஏராளமான நாட்டுப்புற நடனம் பயின்ற இளைஞர்கள் பலர் இப்போது பயிற்சியாளர்களாகவும், திரைப்பட நடனக்குழு, கலைக்குழு நடத்துபவர்களாகவும் உள்ளனர். இதுதவிர பொருள்காட்சிகள், குற்றாலம் சாரல் திருவிழா, தென்னிந்திய கலாசார மைய விழா, பல்வேறு பல்கலைக்கழகங்களின் கலைப்போட்டிகள் போன்றவற்றிலும் நாட்டுப்புற நடனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பயணப்படி, உணவு, பரிசு, சான்றிதழ் என பல லட்சங்கள் நாட்டுப்புற நடனத்துக்காக செலவழிக்கப்படுகின்றன.
நாட்டுப்புற நடனங்களில் சாகசங்கள் அதிகம் உள்ளன. கரகத்துடன் ஏணி மீது ஏறுதல், சைக்கிள் ஓட்டுதல், கண் இமைகளால் ரூபாய் நோட்டுகளை எடுத்தல், ஆணிப் பலகை மீது நடனமாடுதல் போன்றவை வெளிமாநில, சர்வதேச பார்வையாளர்களை வியப்படையச் செய்கிறது. தமிழக நாட்டுப்புற நடனங்களுக்கு வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் மட்டுமன்றி அண்மைக்காலமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் அதிக அளவில் தமிழக நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
நாட்டுப்புற நடனம் கற்றால் உணவுக்கே வழி இருக்காது என்ற மனநிலை இருந்து வந்தது. ஆனால், அது உண்மையல்ல. ஆபாசம், அநாகரிகம் போன்ற தடைக்கற்களைத் தகர்த்து அதிக வருவாயும், சமுதாயத்தில் கெüரவமும் தரும் கலையாக நாட்டுப்புற நடனங்கள் உள்ளன.
சிறுசேமிப்பு, மரக்கன்றுகள் வளர்த்தல், மழைநீர் சேமிப்பு, எய்ட்ஸ் போன்ற சமூதாயத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் மக்களுக்கு எளிமையாக பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலம் வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த நாட்டுப்புற நடனங்களே இப்போது முன்னணியில் உள்ளது.
தமிழகத்தில் நாட்டுப்புற நடன பயிற்சியாளர்களின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. இதுதவிர வெளிநாடுகளுக்கு கலைக்குழுவாகச் சென்று நடனமாடுதல், வெளிநாடுகளில் பயிற்சி வகுப்பு நடத்துதல், சினிமாத்துறை போன்றவற்றில் நடனம் மூலம் சம்பாதிக்க முடியும்'' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.