டிரம்ப்பின் அமெரிக்காவைக் காணப் பொறுத்திருப்போம் விதேசிகளே!

மண வாழ்வில்  டிரம்ப் அயல்நாட்டுக் கொள்கையைக் கடைபிடித்திருக்கலாம் , ஆனால் அரசியல் வாழ்வு என்று வரும் போது டிரம்ப் எப்போதுமே “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” எனும் கொள்கையைப் பின்பற்றுபவர்.
டிரம்ப்பின் அமெரிக்காவைக் காணப் பொறுத்திருப்போம் விதேசிகளே!

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும் கூட அவரைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் குழப்பச் சூறாவளிகள் ஓய்ந்த பாடில்லை. 

டிரம்ப் அதிபரானதால் முஸ்லிம்களுக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் உலக அரங்கில் இன்னும் அதிக கவனம் பெறும் என்றும், இதனால் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளின் செல்வாக்கு சர்வ தேச இஸ்லாமிய செல்வந்தர்களிடையே அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் ’ஐ.எஸ், அல் காய்தா ’உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஒரு பக்கம் இவர்கள் டிரம்ப் அதிபரானதை இப்படி எதிர்மறையாகக் கொண்டாடிக் கொண்டிருக்க மறுபக்கம் அமெரிக்காவிலிருக்கும் இந்தியர்களோ  டிரம்ப் அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையிலான இந்திய வம்சாவளியினர் உயர் பதவியில் அமர்த்தப்படுவார்கள், டிரம்ப் எப்போதுமே திறமையானவர்களை பொறுப்பான பதவிகளுக்குத் தேர்ந்தெடுப்பதில் சமர்த்தர். அவரது சிறந்த தேர்வுகளே தொழில் துறையில் அவரது அளப்பறிய வெற்றிகளுக்கு காரணம் என்றூ டிரம்ப்பை உச்சி முகர்ந்து பாராட்டித் தீர்க்கிறார்கள்.

இதுவரையிலான அமெரிக்க அதிபர்களில் ரொனால்ட் ரீகனுக்கு அடுத்தபடியாக டிரம்ப் அமைச்சரவையில் தான் அதிக எண்ணிக்கையிலான இந்திய வம்சாவளியினர் பங்கு பெறவிருப்பதாக டிரம்பை வெற்றி பெறச் செய்த ரிபப்ளிகன் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ’ஹர்மீத் கெளர் தில்லான்’ அமெரிக்கச் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியொன்றில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தேர்தல் காலத்திலும் சரி, வெற்றி பெற்ற பின்பும் சரி டிரம்ப்பைச் சூழ்ந்துள்ள சர்ச்சைகளில் எதுவும் விலகவில்லை. ஹிலாரி டிரம்ப்பின் மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டுகளாகட்டும், அடிப்படை முஸ்லிம்கள் எழுப்பும் மத ரீதியிலான ஒடுக்குமுறை குற்றச்சாட்டுகளாகட்டும், இந்திய வம்சாவளியைச் சாராத பிற இந்தியர்கள் எழுப்பும் டிரம்ப் அதிபரானால் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை சார்ந்து பூதாகரமாக வெடிக்கவிருக்கும் இமிக்ரேஷன் பிரச்சினகள் ஆகட்டும், எல்லாவிதமான குழப்பங்களும் இன்னனும் அப்படியே தான் நீடிக்கின்றன. இவை எல்லாவற்றையும் முறியடித்து அமெரிக்க வாழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்று டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். இனி பதவியேற்கப் போவதும் நிச்சயமாகி விட்டது.

இந்தியர்களான நம்மைப்  பொறுத்தவரை டிரம்ப், ஹிலாரியை வென்று அமெரிக்க அதிபராவது மட்டும் தான் பிரதானச் செய்தி. அதைத் தாண்டி டிரம்ப் என்ற மனிதர் யார்? அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரது தொழில் என்ன? அவரது குடும்பத்தினர் யார்? இத்தியாதி விசயங்கள் எல்லாம்  இதுவரை தெரியாது தானே!  இதோ அவர்களுக்காக டிரம்ப்பின் வாழ்க்கை கதையின்  சில பக்கங்கள் இங்கே உங்களுக்காக...

பெற்றோர்:

அடிப்படையில் அமெரிக்காவின் வல்லமை வாய்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களில் ஒருவரான டிரம்ப் அரசியல்வாதியாகிப் பின் அதிபரும் ஆனது ஒரு வேளை டிரம்ப் சுயசரிதை எழுதுவதாய் இருந்தால் அவரது வாழ்க்கை கதையில் நல்ல ட்விஸ்டாக இருக்கக் கூடும். ஜெர்மன் அப்பாவும், ஸ்காட்டிஷ் அம்மாவும் நியூயார்க்கில் சந்தித்து காதல் கொள்ள அந்தக் காதல் திருமணத்தில் முடிந்ததில் பிறந்தனர் ஐந்து குழந்தைகள், அதில் இரண்டாவது குழந்தை தான் உலக அரங்கில் தற்போதைய அமெரிக்க சூப்பர் ஹீரோவான டொனால்ட் டிரம்ப். டிரம்ப்புடன் பிறந்தவர்களில் இப்போது உயிருடனிருப்பது மூவர். டிரம்ப்பின் மூத்த சகோதரர் தீவிர குடிப்பழக்கத்தால் இளமையிலேயே இறந்து விட்டார். சகோதரரின் மரணம் தன்னையும் சிகரெட் மற்றும் ஆல்கஹால் பழக்கத்தை வெறுத்து ஒதுக்க வைத்து அதிலிருந்து விடுபடும் முயற்சியை வெற்றி பெறச் செய்தது என டிரம்ப் தன் நெருங்கிய சகாக்களிடம் அவ்வப்போது கூறுவாராம். 

இவரது தாய் வழி, தந்தை வழி தாத்தா, பாட்டிகள் அனைவரும் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். தாயும், தந்தையும் தான் நியூயார்க்கில் தொழில் நிமித்தம் வாழ்வை அமைத்துக்கொண்டவர்கள். தந்தை வழியில் தனது ஜெர்மானிய குருதி உறவு முறை குறித்து டிரம் அடிக்கடி நண்பர்களிடம் பெருமையாகச் சிலாகிப்பதுண்டாம்.

பள்ளிக் காலத்தில் நடத்தைக் குறைபாடுடையவர் எனும் குற்றச்சாட்டு:

டிரம்ப் பிறந்தது நியூயார்க் சிட்டியின் அருகிலிருக்கும் ’ஜமைக்கா குயின்ஸ் எஸ்டேட்டில்’. இவர் பிறக்கும் போதே இவரது தகப்பனார் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். செல்வச் செழிப்பில் பிறந்ததால் டிரம்ப்பிடம் இயல்பிலேயே நடத்தை மற்றும் பழகும் தன்மை சார்ந்த பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. இதனால் ஜமைக்கா எஸ்டேட்டில் அவர் படித்துக் கொண்டிருந்த ’கெவ் ஃபாரஸ்ட்’ பள்ளியில் இருந்து 13 வயதில் நடத்தைக் குறைபாடு என்று குற்றப் சாட்டப்பட்டு வெளியேற்றப் பட்டார். அதன் பிறகு நியூயார்க் ராணுவப் பள்ளியில் தனது உயர்நிலைக் கல்வியை முடித்த டிரம்ப் 1981 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஒருவருக்களித்த பேட்டியொன்றில் ’இள வயது டொனால்ட் டிரம்ப்’ கொஞ்சம் கடுமையானவனாகத் தான் இருந்தான் என ஒப்புக் கொண்டுள்ளார். 

கல்லூரிப் படிப்பு:

முதலில் ப்ரான்ஸ்கில் இருக்கும் ’ஃபோர்தம் பல்கலைக் கழகத்தில்’ 2 வருடம் கல்வி பயின்ற டிரம்ப் பின்பு  அது தனக்கு உகந்த பயிற்சிக் கல்வி அல்ல என்று முடிவு செய்து அங்கிருந்து விலகி பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் ’வார்டன் ஸ்கூல் ஆஃப் ஃபினான்ஸ் அண்ட் காமர்ஸில்’ சேர்ந்து பொருளாதாரம் பயிலத் தொடங்கினார். வார்டன் ஸ்கூல் அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பொருளாதாரக் கல்வி வழங்குவதில் தரமானதாக இயங்கும் கல்வி நிறுவனங்களில் ஒன்று. ஒரு பக்கம் படித்துக் கொண்டே மறுபக்கம் தனது தந்தை வழிப்பாட்டியாரான எலிஸபெத்தின் ’எலிஸபெத் & சன்ஸ்” எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராகவும் இயங்கினார். படிப்பு முடிந்து கல்லூரியில் இருந்து வெளியேறியதும் டிரம்ப் தனது தந்தையின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை கவனித்துக் கொள்ளத் தொடங்கினார்.

தொழில்:

ஒரு கட்டத்தில் தந்தையிடம் இருந்து பிரிந்து தானே தனியாக களத்தில் இறங்குவது என முடிவெடுத்து டிரம்ப் தொடங்கியது தான் ‘தி டிரம்ப் ஆர்கனைஸேசன்’ ரியல் எஸ்டேட் நிறுவனம்.
தனியாக நிறுவனம் தொடங்கும் முன்பே டிரம்ப் செல்வாக்கு மிக்கவர் தான். எனினும் தனக்கென தனி அடையாளம் ஏற்படுத்திக் கொண்ட பின் டிரம்பின் வெற்றிகள் அசாத்தியமானவை. டிரம்பின் தொழில் கூட்டாளிகளும், நண்பர்களும் அவரை மிகச் சிறந்த ’நெகோஸியேட்டர்’ எனப் பாராட்டுகிறார்கள். அதாவது பேரம் பேசுவதில் சர்வ வல்லமை படைத்தவராம். தொழிலில் பேரம் படியச் செய்வது தானே வெற்றி என்று கருதப்படுகிறது. அவ்வகையில் டிரம்ப் தனது தொழிலில் பெரும் வெற்றியாளர்.

திருமணம்:

டிரம்ப் மூன்று முறை திருமணமானவர். முதல் இரண்டு திருமணங்களும் சில வருட தாம்பத்ய வாழ்க்கைக்குப் பின் கணிசமான குழந்தைச் செல்வங்களுடன் விவாகரத்தில் முடிந்தன. இப்போது டிரம்புடன் வாழ்வது அவரது மூன்றாவது மனைவி ’மெலானியா’. டிரம்புக்கு மூன்று மனைவிகள் வாயிலாக 5 குழந்தைகளும், 8 பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி அடைந்து பதவியேற்கப் போகும் டொனால்டு டிரம்பின் வயது 70. இதுவரை அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவர்களிலேயே டிரம்ப் தான் மிகவும்  வயதானவர் என்று கருதப் படுகிறார். முதல் மனைவியுடனான விவாகரத்துக்கு முன்பு சர்ச்சைக்குரிய காலங்களில் டிரம்பின் அதிகாரப்பூர்வ இரண்டாம் மனைவியாக அப்போது ஆகியிராத ’மேப்பிள்’ அளித்ததாகச் சொல்லப்படும் பேட்டியொன்றில் ‘டிரம்ப்பிடம் இருக்கும் அளவுக்கதிகமான செல்வமமும், பெண்களிடம் அவரது அணுகுமுறையும் தான் அதிகமான பெண்களை அவரை நோக்கி ஈர்ப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

வாரிசுகள் மற்றும் டிரம்பின் ஹாலிவுட்  ஆர்வம்:

முதல் மனைவி இவானா செக் குடியரசைச் சார்ந்த ஒரு மாடல், முதல் மனைவி வாயிலாக டிரம்ப்புக்கு டொனால்டு ஜூனியர், இவாங்கா, எரிக் என்று மூன்று வாரிசுகள் உண்டு. டிரம்ப்பின் முதல் திருமணத்தில் கலந்து கொண்டு டிரம்ப்பை பெருமைப்படுத்தியவர்களில் முக்கியமானவர் புகழ் பெற்ற அமெரிக்க மந்திரிகளில் ஒருவரான ’வின்சென்ட் பீலே’ . அந்தத் திருமணம் தோல்வியில் முடிந்தது.

இரண்டாவதாக டிரம்ப், மேப்பிள்ஸ் எனும் மாடலை மணந்து ‘டிஃபானி’ எனும் மகளுக்குத் தந்தையானார். இந்தத் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

 மூன்றாவதாகவும்  டிரம்ப் ’மெலானியா’ என்ற மாடலைத் தான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ’பாரன் வில்லியம் டிரம்ப்’ என்ற மகன் உண்டு. டிரம்ப்பின் திருமண வாழ்வில் மூன்று முறையும் அவர் மணந்தது மாடல்களைத் தான்.  மாடல்களை மணந்ததோடு மட்டுமல்ல அவ்வப்போது ஹாலிவுட் படங்களில் கேமியோ ரோல்களில் நடித்தும் தனது கலையார்வத்தை டிரம்ப் தணித்துக் கொள்வது வழக்கம் தானாம்!

அரசியல் கொள்கை:

மண வாழ்வில்  டிரம்ப் அயல்நாட்டுக் கொள்கையைக் கடைபிடித்திருக்கலாம் , ஆனால் அரசியல் வாழ்வு என்று வரும் போது டிரம்ப் எப்போதுமே “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” எனும் கொள்கையைப் பின்பற்றுபவர். இவரது அதிகார எல்லையில் இனி அமெரிக்க அரசாங்கத்தில் ராணுவக் கட்டமைப்புக்காக, உள்நாட்டுப் பாதுகாப்பு விவகாரங்களுக்கு அதிகத் தொகை செலவிடப்படலாம். மேலும் அமெரிக்காவில் குடியேற விரும்பும் பிற நாட்டவர்களுக்கான குடியேற்ற விதிமுறைகள் கடுமையாக்கப் படவும் வலுவான சாத்தியங்கள் உண்டு. அமெரிக்கா பிற அயல்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதைக் காட்டிலும் தனது உள்கட்டமைப்பில் பொருளாதாரம், பாதுகாப்பு, அமெரிக்கர்களுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட விசயங்களில் பலம் பெற வேண்டும் என்ற வலுவான எண்ணம் கொண்டவர் டிரம்ப். டிரம்ப்பின் அமெரிக்கா ஃபர்ஸ்ட் எனும் கொள்கை இந்திய வம்சாவளியினருக்கு வேண்டுமானால் அனுகூலமாக இருக்கலாம் ஆனால் வேலை நிமித்தம் அமெரிக்கவாசியாகி இருக்கும் பிற இந்தியர்களுக்கு இது பாதகமான அம்சமாகவே பார்க்கப் படுகிறது.

எது எப்படியோ 5 வாரிசுகள் மற்றும் 8 பேரக் குழந்தகள் என வெற்றிகரமாக டிரம்ப் தனது வாரிசுப் பட்டாளங்களோடு அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளப் போவதை இந்தியாவிலிருந்து நாமும் விரும்பினால் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் காணத் தானே போகிறோம். 

பார்க்கலாம் டொனால்டு டிரம்ப் தனது வாழ்க்கை வெற்றிகளைப் போலவே சர்வ தேச அரசியல் அரங்கில் அமெரிக்க அதிபராகவும் பெருமைக்குரிய இடத்தை அடைவாரா? என்று!

பொறுத்திருப்போம் விதேசிகளே!  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com