பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞர் கிஷோரி அமோங்கர் மறைவு!

தமிழ் ரசிகர்களுக்கு கிஷோரி புதியவராக இருந்தாலும், நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய பட்டியலில் இருப்பவர் தான்.
பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞர் கிஷோரி அமோங்கர் மறைவு!
Published on
Updated on
2 min read

பிரபல இந்துஸ்தானி சாஸ்திரிய இசைக் கலைஞரான கிஷோரி அமோங்கர் நேற்று மும்பையில் அவரது இல்லத்தில் காலமானார். இந்துஸ்தானி இசையை அதன் இயல்பு கெடாமல் நவீன உத்திகளுடன் பாடும் திறன் வாய்ந்த கலைஞர்களில் கிஷோரி அமோங்கர் முதன்மையானவர். 6 வயதில் தனது தந்தையை இழந்த கிஷோரி அவரது தாயாரும் பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞருமான மோகுபாய் குர்திகருடன் இணைந்து கச்சேரிகளுக்கு செல்லத் தொடங்கினார். முதலில் தம்பூரா இசைப்பதில் தொடங்கி பின்னாட்களில் தனது தாயாரைப் பின்பற்றி பிரசித்தி பெற்ற ‘ஜெய்பூர் கரணா’ இசையை அடியொற்றி பல்வேறு இந்துஸ்தானி குருக்களிடம் இசை பயின்று வட இந்திய இசை மேடைகளில் கிஷோரி தனது இசைத்திறமையை வெளிப்படுத்த தொடங்கினார். 6 வயதில் தனது தந்தையை இழந்தவர். கிஷோரியையும் அவரது இரு உடன்பிறந்தவர்களையும் தந்தை இல்லாத குறை தெரியாமல் வளர்த்து ஆளாக்கியவர் அவரது அம்மா மோகுபாய். 

கிஷோரி அமோங்கர் பிரபல இந்துஸ்தானி இசை வடிவங்களான கஜல், தும்ரி, பஜன்ஸ் உள்ளிட்டவற்றை ஜெய்பூர் கரணா இசையை அடியொற்றி பாடுவதில் கை தேர்ந்தவர். கிஷோரி மேடையில் பாட வேண்டுமென்றால் அரங்கத்தில் இருக்கும் ரசிகர்கள் உண்மையான இசை ஆர்வலர்களாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல் அந்தப்பக்கம் இசைப் பிரவாகம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்க இந்தப் பக்கம் ரசிக சிகாமணிகள் தங்களது பிரதாபங்களை சகட்டுமேனிக்கு அளந்து கொண்டு இசைக்கச்சேரிக்கு காது கொடுக்காமல் கண்டதையும் பேசிக் கொண்டிருந்தால் கிஷோரி கடும் கோபம் கொண்டவராகி தனது கச்சேரியையே ரத்து செய்து விடுவாராம். அந்தளவுக்கு தனது இசையை நேசிப்பவராக இருந்தார் அவர் என்கிறார்கள் அவரைப் பற்றி அறிந்தவர்கள். ரசிகர்கள் இசையை ரசிக்கலாம், ஆனால் அவரகளது ரசனை இசைக் கலைஞர்களை இடைஞ்சல் செய்வதாக இருக்கக் கூடாது என்பாராம் கிஷோரி.

கிஷோரிக்கு அந்நாட்களில் இந்தி திரைப்படங்களில் பாடுவதற்கு மிகுந்த விருப்பம் இருந்தது. 1990 ல் வெளிவந்த ‘திருஷ்டி’ இந்தி திரைப்படத்தில் கிஷோரி பாடி இருக்கிறார். மேலும் சில இந்திப் படங்களிலும் கிஷோரி பாடி பாடல்கள் வெளிவந்த நிலையில்... இந்தி திரைப்பட உலகினரின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளை கிஷோரி போன்ற அசல் இசைக் கலைஞரால் ஏற்றுக் கொள்ள முடியாததால் அவர் தனது பாரம்பரிய சாஸ்திரிய சங்கீத உலகிற்கே திரும்பி விட்டார்.

திரை இசையில் கிஷோரி மீண்டும் பங்கு பெறாமல் போனதற்கு அவரது தாயாரையும் சிலர் காரணமாக்குகின்றனர். கிஷோரியின் தாயார் மோகுபாய்க்கு தனது மகளின் திரையிசைப் பிரவேஷம் பிடிக்கவில்லை என்றும், ‘தொடர்ந்து இந்தி திரைப்படங்களில் கிஷோரி பாட்டிக் கொண்டிருந்தால், தனது கச்சேரி மேடைகளில் கிஷோரிக்கு இடமில்லை என அவர் கூறியதாகவும். அதனால் தான் கிஷோரி அமோங்கர் இந்தி திரைப்படங்களில் பாடுவதை நிறுத்தி விட்டார். என்று கூறுபவர்களும் உண்டு. எது எப்படியோ கிஷோரி தான் கற்றுக் கொண்ட தனது இந்துஸ்தானி இசைக்கு பல்வேறு விருதுகள் மூலம் நியாயம் செய்து விட்டார்.

மும்பையில் 1932 ஆம் வருடம் ஏப்ரல் 10 ஆம் நாள் பிறந்த கிஷோரி, தான் பிறந்த அதே ஏப்ரல் மாதத்தில், தனது 85 வது பிறந்த நாளுக்கு சில தினங்களே இருக்கையில் ஏப்ரல் 3 ஆம் தேதி தனது தூக்கத்திலேயே உயிர் நீத்தார். கிஷோரியின் கணவர் ரவீந்திர அமோங்கர், பள்ளி ஆசிரியராக இருந்து 1992 ஆம்வருடத்தில் மறைந்தார். கிஷோரி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

மறைந்த பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞரான கிஷோரி அமோங்கருக்கு சோனியா காந்தி உள்ளிட்ட வட இந்திய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

தமிழ் ரசிகர்களுக்கு கிஷோரி புதியவராக இருந்தாலும், நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய பட்டியலில் இருப்பவர் தான்.

எழுபது ஆண்டுகளாக இந்துஸ்தானி இசை மேடைகளில் ஒலித்துக் கொண்டிருந்த கிஷோரிக்கு “கான சரஸ்வதி” விருது கொடுத்து மகிழ்ந்தது வட இந்திய இசை உலகம்.

கிஷோரி பின்பற்றிய ஜெய்பூர் கரணா இசை உத்திக்காக அவருக்கு பத்ம விபூஷன், சாகித்திய அகாதெமி உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இசைக் கலைஞராக மட்டுமல்ல, பாடல்களின் போது பாவங்களை வெளிப்படுத்துவதைக் குறித்து மிக அருமையாக உரையாற்றக் கூடியவர் கிஷோரி. ராகங்கள் மற்றும் அவை வெளிப்படுத்தும் பாவனைகள் குறித்த கிஷோரியின் மேடைப் பேச்சுகள் இன்றளவும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றவை.

கிஷோரி அமோங்கரின் டாப் டென் பாடல்களைக் கேட்க...

கிஷோரி பாடிய திருஷ்டி இந்தி திரைப்படப் பாடல்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com