

அந்தக் காலத்தில் கிராமாந்திரங்களில் "தீவட்டிக் கொள்ளைக்காரர்கள்' என்று ஒரு கும்பல் கிராமம் கிராமமாய்ப் புகுந்து கொள்ளையடித்துக் கொண்டு போகும். இந்தத் தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் தங்களுடைய தொழிலை நடத்த பல போர்த் தந்திரங்களைக் கையாளுவார்கள். ஒரு கிராமத்தைத் தாக்கிக் கொள்ளையடிக்கப் போவதாகப் பல நாள்கள் வதந்திகளைப் பரப்பி, கிராமத்து மக்களைப் பல இரவுகள் தூங்காமல் விழித்திருக்கச் செய்து, "சரி; இனி எங்கே வரப் போகிறார்கள்' என்று நினைத்து அவர்கள் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென்று வந்து தாக்குவார்கள்.
கிராமத்தின் ஒரு கோடியில் தீவனப் படப்புகளில் தீ வைப்பார்கள். ஜனங்களெல்லாம் தீயை அமர்த்துவதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது, இந்தப் பயல்க மறுகோடியில் உள்ள வீடுகளில் கொள்ளையடித்துக் கொண்டு போய் விடுவார்கள்.
தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் பத்து இருபது பேர் என்று வருகிறதில்லை. நூறு, இருநூறு என்று வருவார்கள். ஒவ்வொருத்தனுக்கும் ஒரு கையில் எரிகிற தீவட்டியும், மறுகையில் ஓர் ஆயுதம் - வெட்டருவாளோ, வேல்கம்போ, பாலகத்தியோ, கண்ட கோடாலியோ எதுவோ ஒன்று இருக்கும்.
ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாலும் இரண்டு மூன்று பேர் நின்றுகொண்டு அந்த வீட்டுக்காரர்கள் கதவைத் திறந்து வெளியே வராமல் பார்த்துக்கொண்டு, கிராமத்தில் சில குறிப்பிட்ட ஒன்றிரண்டு வீடுகளுக்குள்ளே புகுந்து கொள்ளையடிப்பார்கள்.
வீட்டுக்காரர்கள் நகைகளைப் பானைக்குள் போட்டு மூடி வீட்டுக்குள் எங்கேயாவது தரைக்குள் ஓரிடத்தில் புதைத்து ஒளித்து வைத்திருந்தால் "அதை எந்தயிடத்திலே வச்சிருக்கே சொல்லு' என்று வீட்டுக்காரனின் முகத்தை எரிகிற தீவட்டியால் வாட்டியெடுப்பார்கள்.
இவர்களுடைய தாக்குதல் பெரும்பாலும் குளிர்காலத்தில்தான் அதிகமாக இருக்கும். பூட்டிய கதவை பந்தத்தால் கொளுத்துகிறதும், பகிரங்கமாக கடப்பாறைகளால் சுவரை இடித்து வீட்டுக்குள் நுழைகிறதும் சாதாரணம்.
வீடு பூட்டியிருந்தால் ஒரே சமயத்தில் வீட்டின் மூன்று பக்கச் சுவர்களிலும் இடித்து வாசல் அளவு பெரிய ஓட்டை செய்து ஒன்றுபோல் நுழைவார்கள்.
தீவட்டிக் கொள்ளைக்காரர்களின் தாக்குதலைச் சமாளிக்க கோபல்ல கிராமமும் கோட்டையாரின் வீடும் தயாராகிக் கொண்டிருந்தது.
கையாலும் கவணாலும் எறிவதற்கு வசதியான கற்கள் வண்டி வண்டியாக முதல் மாடியிலும், தட்டட்டியிலும் வேறு பல இடங்களிலும் குவித்து வைத்தார்கள். தீவட்டிக்காரர்களைச் சமாளிக்க மக்களுக்குப் பிரதான ஆயுதம் கல்தான்!
இருட்டியதும் எல்லாரும் சீக்கிரமாகவே சாப்பிட்டுவிட்டு முக்கியமான பொருள்களை பந்தோபஸ்து செய்து, விளக்குகளை அணைக்க ஆரம்பித்தார்கள். கோட்டையார் வீட்டில் பெண்களையும், குழந்தைகளையும் மாடியிலுள்ள இரும்புக் கதவு போட்ட பெரிய அறையில் போட்டு உள்ளே பூட்டிக் கொள்ளும்படி சொன்னார்கள்.
வந்த அந்த தீவட்டிக் கொள்ளைக்கூட்டத்தில் மொத்தம் அறுபது எழுபது பேர் இருக்கலாம். ஓடுவதற்கு வசதியாக தும்பு வார்ச் செருப்புகள் போட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் ரெண்டு மூணு பேர் தோல்ப் பைகளில் குடிக்கத் தண்ணீரோ, மதுவோ வைத்துக் கொண்டிருந்தார்கள். அநேகமாக ஒவ்வொருத்தனிடமும் அரைப் பாகம் முக்கால் பாகம் நீளம் கொண்ட எரியாத தீவட்டிகள் இருந்தன. ஐந்தாறு பேர் எண்ணெய் நிரம்பிய பித்தளைச் சட்டிகளை ஒரு கையில் ஏந்தியிருந்தார்கள். மறு கையின் மணிக்கட்டில் துணியை கங்கணம் போல் கட்டியிருந்தார்கள். அந்தக் கையினால் எரியும் தீவட்டிகளுக்கு எண்ணெயைக் கோரிக் கோரி விடும்போது வழிந்து முழங்கைக்கு வந்துவிடாமல் இருப்பதற்கு அந்தத் துணிக்கட்டு ஒரு தடுப்பு.
ஊருக்குப் பக்கத்தில் வந்ததும் அதில் ஒருத்தன் மடியிலிருந்து காய்ந்த வாழை மரப் பட்டையில் மடித்து வைத்திருந்த பஞ்சுக்கரிக்கில் சக்கிமுக்கியால் தட்டினான். அதிலிருந்து பறந்த தீப்பொறிகளில் ஒன்று அந்தக் கரிக்கில் விழுந்ததும் தீ கனிந்தது. உடனே அதை ஒரு தீவட்டியில் ஒட்ட வைத்து ஒருவன் ஊதினான். கொஞ்ச நேரம் ஊதிய பிறகே தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
மளமளவென்று ஒன்றிலிருந்து மற்றொன்று. அதிலிருந்து பலது என்று தீவட்டிகளைப் பற்ற வைத்துக் கொண்டார்கள். தீவட்டிகள் எரிந்து கொண்டிருக்கும்போதே அவைகளுக்கு எண்ணெய்ச் சட்டி வைத்துக் கொண்டிருப்பவன்கள் கோளாறாய் அது அணைந்துவிடாமல் எண்ணெய்யை ஊற்றினார்கள். தீவட்டி வைத்திருப்பவன் அதைத் திருப்பித் திருப்பிக் கொடுத்து, களைக்குச்சி போன்ற ஒரு குச்சியால் எரிகிற தீவட்டியைக் குத்தி அகலப்படுத்திக் கொடுத்தான். எண்ணெய் ஊற்றுகிறவன் கையில் துணி சுற்றிக் கொண்டிருந்தது போலவே ஒவ்வொரு தீவட்டிக்கும் எரிகிற இடத்துக்குக் கீழே முக்கால் சாண் ஒரு சாண் தள்ளி ஒரு துணி சுற்றப்பட்டிருந்தது. சுடு எண்ணெய் வழிந்து கைக்கு வந்துவிடாமல் இருக்க அது ஒரு பாதுகாப்பு.
ஊருக்குள்ளே அவர்கள் நுழையும்போது எதிர்ப்படும் கோயில்களைக் கண்டதும் கும்பிட்டுக் கொள்வார்கள்! ஜனங்கள் தங்கள் பொருள்களை அவ்வளவு லேசில் தந்து விடுவார்களா? அந்தப் போராட்டத்தில் இரு பக்கமும் பலர் சாக வேண்டியது இருக்கலாம். திரும்பிப் போகும் வரை இவர்களுக்கு நிச்சயமில்லை.
கொள்ளைக்குக் கிளம்பும்போதே பெண்டாட்டியிடம் "தாலியைக் கழற்றி உறியிலே கட்டி வை' நான் திரும்ப வந்தால் எடுத்து அதை மாட்டிக்கோ!' என்றுதான் வீட்டில் சொல்லிவிட்டு வருவான்களாம்!
- கோபல்ல கிராமம்' நூலில் கி.ராஜநாராயணன்.
தொகுப்பு: கேசி
Image courtsy: aravan still from google.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.