இந்தியக் குடியரசுத் தலைவர் ரேஸில் வெல்லப் போவது இவராகக் கூட இருக்கலாம்!

தற்போதைய இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 25 ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்தியக் குடியரசுத் தலைவர் ரேஸில் வெல்லப் போவது இவராகக் கூட இருக்கலாம்!

குடியரசுத் தலைவர் பதவிக்கான ரேஸ் முன்னதாகவே தொடங்கி விட்டது. எல்.கே.அத்வானி, மரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், சுஷ்மா சுவராஜ் முதல் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் வரை பல பிரபலங்களது பெயர் பரிசீலனையில் இருப்பதாகச் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. இதில் ஒருவரது பெயர் மட்டும் வட மாநிலங்களில் மிக அதிகமாக உச்சரிக்கப்படுகிறது எனில் அவர் தான் திரெளபதி முர்மு. தற்போதைய ஜார்கண்ட் மாநில கவர்னரான இவர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா பழங்குடி இனப் பெண்மணியான திரெளபதி முர்முவின் அரசியல் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால் கடந்த 20 ஆண்டுகளாக அவரது அரசியல் சாதனைகள் அளப்பரியவை. குடியரசுத் தலைவர் பதவியில் இவர் வென்றார் எனில் இந்தியக் குடியரசுத் தலைவரான முதல் பழங்குடியினப் பெண்மணி எனும் பெருமையைப் பெற்றவர் ஆவார். முன்னதாக தற்போதும் இவருக்கு பெருமைகள் இல்லாமல் இல்லை. முதன் முதலாக ஒரு பழங்குடி இனப்பெண்மணி இந்திய மாநிலங்கள் ஒன்றின் கவர்னர் ஆதலைச் சாதித்தவரும் இவரே தான்.

குடியரசுத் தலைவர் பதவிக்கான பரிந்துரையில் இவரது பெயரும் இருக்கலாம் எனும் போது நாம் நிச்சயமாக இவரைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தான் வேண்டும்.

  • இந்தியப் பழங்குடிப் பெண் தலைமைகளில் வலிமை வாய்ந்த பெண்ணான திரெளபதி முர்மு 2015 மே மாதத்தில் ஜார்கண்ட்டின் கவர்னர் ஆகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் போது அவருக்கு வயது 59. ஜார்கண்ட்டின் கவர்னராகி இந்தியப் பெண் கவர்னர்களில் பழங்குடி சமூகம் சார்ந்த முதல் பிரதிநிதி இவரே எனும் பெருமையைத் தட்டிக் கொண்டார்.
  • இவர் குஸ்மி தொகுதிக்கு உட்பட்ட உபர்பேடா கிராமத்தைச் சேர்ந்தவர், ஒடிசாவிலிருந்து இந்திய மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் தலைவரும் இவரே ஆவார்.
  • பிரஞ்சி நாராயண் துடுவின் மகளான முர்மு 1997 ல் தனது அரசியல் வாழ்க்கையை ஒடிசாவின் ரெய்ரங்க்பூர் மாவட்டத்தில் கவுன்சிலராக ஆரம்பித்தார்.
  • அதே வருடம் அவர்  ரெய்ரங்க்பூர் துணைத் தலைவராகவும் இருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மாநில சட்டசபைக்கும் அதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பா.ஜ.க. எஸ்.டி. மோர்ச்சாவின் தேசிய நிறைவேற்று உறுப்பினராகவும், கட்சியின் பழங்குடிப் பிரிவு உறுப்பினராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
  • புவனேஸ்வரில் உள்ள ராம தேவி மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவி, அங்கு இளங்கலை பட்டம் பெற்றார். ரெய்ரங்க்பூர் ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கௌரவ உதவிப் பேராசிரியராகவும், ஒடிசாவின் நீர்ப்பாசனத் துறையின் ஜூனியர் உதவியாளராகவும் பணிபுரிந்தார்.
  • 2000 லிருந்து 2004 வரை, நவீன் பட்நாயக்க தலைமையிலான பி.ஜே.பி கூட்டணி அரசாங்கத்தின்போது பல துறைகளில் அமைச்சராகப் பதவி வகித்த முர்மு, போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை,  கடற்படை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆகியவற்றைத் தனது மேற்பார்வையில் நிர்வகித்து வந்தார்.
  • 2007 ஆம் ஆண்டில், சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளைச் செய்த முன் மாதிரி எம்எல்ஏ எனப் பாராட்டி ஒடிசா சட்டமன்றம் முர்முவுக்கு ‘பண்டிட் நீலகாந்தா விருது’ வழங்கிக் கெளரவித்தது. 
  • 2002 லிருந்து 2009 மற்றும் 2009 லிருந்து 2013 வரை என இருமுறை மீண்டும் மயூர்பஞ்ச் மாநிலத்தின் பி.ஜே.பி மாவட்ட தலைவராக அவர் பதவி வகித்தார். அவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவி ஏற்கும் வரை அந்தப் பதவியைத் தான் தொடர்ந்து வகித்து வந்தார்.

தற்போதைய இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 25 ம் தேதியுடன் முடிவடைகிறது.

அடுத்த ஜனாதிபதி யாரென்பதற்கான பதில்களில் இவரது பெயரும் இருக்கலாம். இந்திய ஜனாதிபதி ஆகிறாரோ இல்லையோ ஒருபழங்குடி இனப் பெண்ணாக இருந்து முர்மு இத்தனை சாதித்தது நிச்சயம் பெருமிதத்திற்குரிய விசயமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com