செல்ஃபோனை எப்படி எல்லாம் தவிர்க்கலாம்?

அனைவருக்குமே சில அழகான தருணங்கள் வாழ்க்கையில் அமையும். அப்போது கையில்
செல்ஃபோனை எப்படி எல்லாம் தவிர்க்கலாம்?

அனைவருக்குமே சில அழகான தருணங்கள் வாழ்க்கையில் அமையும். அப்போது கையில் இன்னொரு விரல் போல ஒட்டிக் கொண்டேயிருக்கும் செல்ஃபோன்களை மறந்துவிடுவோம். அத்தகைய நொடிகள்  நமக்கே நமக்கானது. மிகவும் அபூர்வமானது. அவசியம் இருந்தால் தவிர ஃபோனைத் தொடக் கூட மாட்டோம். வாட்ஸ் அப் சத்தமோ அல்லது இன்ஸ்டாகிராமில் தொடர்பவர்களையோ நினைத்துக் கூட பார்க்க மாட்டோம். அல்லவா? ஆனால் மற்ற சமயங்களில்? ஃபோன் இல்லாமல் வாழ்க்கையே இயங்காது என்று நினைக்கும் அளவுக்கு அதற்கு அடிமை ஆகியிருப்பவர்கள் நம்மில் பலர்.

பொதுவாக மதுவுக்கு அடிமையானவர்களின் கைகள்தான் நடுங்கும். ஆனால் இப்போது குழந்தைகளுக்குக் கூட விரல்கள் நடுங்குகின்றன. காரணம் கேம்களில் தொடர்ந்து விரல்களை இழுத்து தேய்த்து ஸ்க்ரீனில் விளையாடுவதால் மெல்லிய அவர்களின் விரல்களில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. அவர்களிடம் நீ இனிமேல் ஃபோனைத் தொடக்கூடாது என்று சொல்ல நம்மால் முடிகிறதா? நாமே அதற்கு அடிமையாகி இருக்கிறோமே.! நம்மை முதலில் சரி செய்து கொண்ட பின்னர் தான் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல முடியும். முதலில் நாம் எப்படி 18 மணி நேரம் ஃபோனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் கொடிய பழக்கத்திலிருந்து வெளியேறுவது? செல்ஃபோனிலிருந்து சிறிது நேரம் விடுதலைப் பெற்று வேறொரு விஷயத்தில் நம் கவனத்தை திருப்பினால் சாத்தியமாகும். . ஃபோனிலிருந்து மாற்றி அதன் அடிக்‌ஷனிலிருந்து வெளியேற சில வழிகளைப் பார்க்கலாமா?

1. ஃபிட்ஜெட் ஸ்பின்னர்

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஃபிட்ஜெட் ஸ்பின்னர் எனப்படும் ஒரு சிறிய கருவி. விஷ்ணுவின் சங்கு சக்கரம் போல அதை உங்கள் கரங்களில் வைத்து சுழற்றலாம். விர்ரென்று அது சுழலும் அழகே தனிவிதம். உங்கள் கைகளில் போனுக்கு பதில் இதை வைத்துக் கொண்டு சில மணி நேரம் விளையாடிப் பாருங்கள். மன அழுத்தம் குறைவதுடன் கவனம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஹைபர் ஆக்டிவ்வாக இருக்கும் குழந்தைகளுக்கு இந்த ஃபிட்ஜெட் ஸ்பின்னர் சரியான தேர்வு

2. சாக்லெட் கேக்

ஏதாவது மெசேஜ் வந்துள்ளதா என்று ஃபோனையே ஓயாமல் பார்த்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, ஒரு சாக்லெட் கேக்கை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பகுதியாக அதை ரசித்து ருசித்து சாப்பிடுங்கள். இந்த உலகத்தையே மறந்துவிடுவீர்கள். (சிலர் அந்தக் கேக்கை கூட ஃபோட்டோ எடுத்து உடனே ஷேர் செய்துவிடுவார்கள். கேக் சாப்பிடுவது போல செல்ஃபி எடுத்து ஷேர் செய்தால் சக பதிவுலகவாசிகளின் சாபத்தை எதிர்கொள்ள நேரிடும். இவ்விஷயங்களில் தனிமையே இனிமை என்று ஃபோனை பக்கத்திலேயே வைக்காமல் கேக்கை வெட்டுங்கள்!)

3. ஜன்னலோரத்தில் ஒரு ஜென் நிலை

கையில் ஒரு கப் டீயுடன் உங்கள் வீட்டு ஜன்னல் ஓரத்துக்குச் செல்லுங்கள். வெளியே தெரியும் இயற்கைக் காட்சிகளை (வெயிலோ மழையோ வெறும் வானமோ) பார்த்து ரசியுங்கள். டீயின் ருசியும் அந்த நிமிடத்தின் அழகும் உங்களை ஜென் நிலைக்கு உயர்த்திவிடும் என்பதில் சந்தேகமில்லை. நேரம் கரைவதே உங்களால் உணர முடியாது. அப்படி ஒரு தருணம் கையில் மிதக்கும் போது செல்ஃபோன் எல்லாம் ஒரு விஷயமா என்ன?

4. ஆடவரலாம்...ஆடவர் எல்லாம்

உங்கள் போனை அறையின் ஏதாவது ஒரு மூலையில் ஒளித்து வைத்துவிடுங்கள். உங்களுக்குப் பிடித்த துள்ளலான பாடல் ஏதோ ஒன்றினை ஓட விட்டு இஷ்டத்துக்கு குதித்து ஆடுங்கள். ஆடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. தாளத்துக்கு ஏற்ப அசைந்து கொண்டிருங்கள். ஆடும் போதே இவ்வளவு நல்லா ஆடறோமோ இதை வீடியோ எடுத்து பதிவேற்றலாமா என்ற எண்ணம் வரும். அதெப்படி வராமல் போகும். ஆனால் அதை விலக்கிவிட்டு தொடர்ந்து ஆடுங்கள். அந்தக் குத்தாட்டம் உங்களை உற்சாக மனநிலைக்கு இட்டுச் செல்லும். 

5. நீண்ட தூரப் பயணம் செல்லுங்கள்

வாரக் கடைசி நாட்களில் உங்கள் பைக் அல்லது காரை எடுத்துக் கொண்டு ஒரு லாங் ட்ரைவ் செல்லுங்கள். தனியாகச் செல்வது எல்லா வகையிலும் நல்லது ஆனால் புரிந்துணர்வுடன் கூடிய துணையுடன் செல்வதும் பயணத்தின் இனிமையை அதிகரிக்கச் செய்யும். உங்கள் செல்லப் பிராணியைக் கூட அழைத்துச் செல்லலாம்.  
 
6. கிரிக்கெட் மட்டையுடன் தெருவில் இறங்குங்கள்!

ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் உங்கள் தெருவில் ரெகுலராக பட்டையைக் கிளப்பும் பசங்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுங்கள். அவர்கள் உங்களை விளையாட்டில் சேர்க்காவிட்டால் பரவாயில்லை ஓரத்தில் நின்று வேடிக்கையாவது பார்த்து மகிழுங்கள். இது சரிவராவிட்டால், உங்கள் இளம் வயது நண்பர்களுடன் வீக் எண்ட் கூட்டணி அமைத்து கிரவுண்டுக்குச் செல்லவும். கிரிக்கெட் என்றில்லை, ஃபுட் பால், கபடி என உங்களுக்குப் பிடித்த விளையாட்டில் கவனம் செலுத்தினால் ஃபோன் அடிக்கும் சத்தம் கூட உங்களின் காதுகளில் விழாது. (வீட்டிலிருந்து மனைவி அரை கிலோ தக்காளி வாங்கி வரச் சொல்லும் ஃபோன்களை கூட தவிர்த்துவிடலாம்). வியர்க்க வியர்க்க விளையாடுவது உங்களின் மனத்தினை புத்துணர்ச்சி அடையச் செய்யும்.

7. கிச்சனுக்குள் ஒரு புரட்சி செய்யுங்கள்!

உங்களுக்கு மிகவும் பிடித்த உணவை நீங்களே சமைத்தால் எப்படியிருக்கும். ஒரு தடவை முயற்சித்துப் பாருங்களேன். யூட்யூபில் ரெசிபி எல்லாம் நைசாகப் பார்க்க கூடாது. உங்கள் அம்மா அல்லது மனைவியிடம் பக்குவம் கேட்டு, ஏதாவது பாடலை பாடியபடி சமைத்துப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் விதத்தில் செம ருசியாக இருக்கும். (சமைத்த உணவை போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போட மனம் துடித்தாலும் அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்)  

8. டிவி சீரியல் பாருங்கள்

மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ஒன்றினைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கத் தொடங்குங்கள். இரண்டு நாள் பார்த்தால் போதும், நீங்களே மூன்றாவது நாள் பார்க்கத் தொடங்கிவிடுவீர்கள். அப்போது ஃபோன் என்ன உலகமே உங்களுக்கு மறந்துவிடும். அந்த சீரியல் கதாபாத்திரங்களை நினைத்து கண்ணீர் விட்டபடி அடுத்து என்ன என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். 

9. உங்களை பாத்ரூமில் வைத்து பூட்டிக் கொள்ளுங்கள்

நல்ல வாசனை சோப், அரோமா ஷாம்பு, என்று நறுமணப் பொருட்கள் சிலவற்றை வாங்கி பாத்ரூமுக்கு எடுத்துச் செல்லுங்கள். ஒரு மணி நேரம் உலகை மறந்து தண்ணீருக்கு அடியில் நின்று நன்றாகக் குளியுங்கள். உடலில் மட்டுமல்ல ஆன்மாவில் படிந்திருக்கும் அழுக்குகள் கூட விலகிப் போகும். 

10. புத்தகம் படிக்கத் தொடங்குங்கள்!

இதற்கு முன்னால் ஒரு புத்தகம் கூடப் படிக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. அந்தப் பழக்கத்தை கஷ்டப்படுத்தியாவது ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் வார இதழ்கள், நியூஸ் பேப்பர்களை படிக்கத் தொடங்குங்கள். அதன் பின் சிறுகதை, நாவல், கட்டுரைகள் என வாசிப்பு உங்களை நிச்சயம் நல்வழிப்படுத்தும். அதன் பின் புத்தகங்களின் மாய உலகில் காணாமலாகிவிடுவீர்கள். ஃபோனா, அதை எங்கேயோ வைச்சிட்டேனே என்று நீங்கள் பதில் சொல்லும் அளவுக்கு உங்களில் மாற்றம் நிகழ்ந்திருக்கும். 

11. பெற்றோருடன் நேரம் செலவழியுங்கள்!

ஃபோனில் பேசிக் கொண்டே வாழ்நாளில் பாதியைக் கடத்திவிடும் நபரா நீங்கள். சமீபத்தில் எப்போது அம்மா அப்பாவுடன் அரட்டை அடித்தீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? ஃபோனை ஓரத்தில் வைத்துவிட்டு அப்பா அம்மாவிடம் உட்கார்ந்து அக்கறையுடன் அவர்களின் நலம் விசாரியுங்கள். பூரித்துப் போய்விடுவார்கள்.

செல்ஃபோனின் செயற்கை ஒளி ஒலி உங்களை தற்காலிகமாக சந்தோஷப்படுத்தலாம். ஆனால் உண்மையில் நமக்கு மிகவும் பிடித்தவர்களின் முகத்தில் நம்மால் ஒளியேற்ற முடியுமானால் அது தான் வாழ்க்கையில் முக்கியம். உறவினர்கள், நண்பர்களை நேரில் சென்று பாருங்கள். ஃபோனில் பேசுவதை விட நேரில் சென்று பேசி மகிழ்வது தான் நல்லது. சந்தோஷம் என்பது ஒரு தொற்றுநோய். நிச்சயம் மற்றவர்களின் சந்தோஷம் உங்களையும் தாக்கிவிடும். அதையும் கூட ஃபோன் தேக்க நினைக்க வேண்டாம். மனம் என்பது அதிக சக்தி வாய்ந்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com