2017 ஆம் ஆண்டின் ஐஏஎஸ் டாப்பர் கே.ஆர்.நந்தினி!

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இதுவரை  முதலிடம் பெற்ற பெண்களில் நந்தினிக்கு 3 வது இடம். இவருக்கு முன்பே 2014 ஆம் ஆண்டில் ஆந்திராவில் ஐரா சிங்காலும், 2015 ஆம் ஆண்டில் டினா டப்பியும் முதலிடத்தை...
2017 ஆம் ஆண்டின் ஐஏஎஸ் டாப்பர் கே.ஆர்.நந்தினி!
Published on
Updated on
2 min read

இந்த முறை இந்திய குடிமைப் பணிகளுக்கான யூபிஎஸ்சி தேர்வுகளில் ஐஏஎஸ் டாப்பராக முதலிடம் பெற்றிருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த கே.ஆர். நந்தினி. ஐஏஎஸ் தேர்வு எழுதுவதில் இது இவரது நான்காவது முயற்சியாம். 

“இந்த முறை நான் தேர்வை மிக நன்றாக எழுதி இருப்பதாக நினைத்தேன். நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் முதலிடம் பெற்றது எனக்கே மிகுந்த ஆச்சரியம் தான். இது என் வாழ்வின் சந்தோசமான தருணங்களில் ஒன்று” என்று குதூகலிக்கிறார் நந்தினி.

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் இருக்கும் சின்னஞ்சிறு கிராமத்தைச் சேர்ந்த நந்தினியின் அம்மா ஒரு பள்ளி ஆசிரியை. நந்தினி தனது சிவில் சர்வீஸ் தேர்வுகளின் அடிப்படை பாடமாக தேர்ந்தெடுத்தது கன்னட இலக்கியத்தை. தாய்மொழியை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அதிகம் வெற்றி பெறுவது தொடர்ச்சியாக இருப்பது ஆரோக்கியமான விசயம். அதற்கு நந்தினியும் இப்போது முன்னுதாரணமாகி இருக்கிறார்.

பெங்களூருவின் எம் எஸ் ராமையா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் சிவில் எஞ்சினியரிங் மாணவியான நந்தினி 2014 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாகத் தான் எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று இண்டியன் ரெவின்யூ சர்வீஸ்( கஸ்டம்ஸ் & செண்ட்ரல் எக்ஸைஸ்) துறையில் தற்போது பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். அதற்காகத் தற்போது ஃபரிதாபாத்தில் இருக்கும் நேஷனல் அகாதெமி ஆஃப் கஸ்டம்ஸ், எக்ஸைஸ் & நார்கோடிக்ஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

முதன்முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய போது நந்தினியால் அந்த தேர்வில் பிரிலிமினரி ரவுண்டில் கூட வெல்ல முடியவில்லை. சிவில் சர்வீஸ் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆகும் தனது முயற்சியில் முதல் மற்றும் மூன்றாம் முறைகள் நந்தினிக்கு தோல்வியே கிட்டியது. முதல் முறை டெங்கு காய்ச்சலால் அவதியுற்றதால் அவரால் தேர்வுக்காக முறையாகத் தயாராக முடியவில்லை. சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராவது என்பது அப்படி ஒன்றும் எளிதான காரியமில்லையே!

ஆனாலும் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல மீண்டும் மீண்டும் முயன்று பார்ப்பது என்று முடிவெடுத்து விட்ட நந்தினி அதற்காக தொடர்ந்து முயன்று இரண்டாம் முறையில் ரெவின்யூ துறையில் பணி கிடைத்தும் அதில் சமாதானம் அடையாமல் மூன்றாம் முறை தேர்வு எழுதி பிரிலிமினரி ரவுண்டில் தோற்ற போதும் பணியிலிருந்து கொண்டே நான்காம் முறையும் முயன்றிருக்கிறார்.

நான்காம் முறை கிடைத்தது சாதாரண வெற்றி அல்ல. 2016 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு எழுதிய மாணவர்களிலேயே இந்தியாவின் முதல் மாணவி எனும் பெருமை! தான் வெற்றி பெற்ற தருணத்தை நினைவு கூறும் வகையில் நந்தினி செய்தியாளர்களிடம் தெரிவித்தது; இது கனவு நனவாகும் வேளை. இது தான் நமது லட்சியமாக இருக்க வேண்டும். இந்த லட்சியத்தை அடைவதற்காக நாம் எத்தனை உழைத்தாலும் தகும்! என்றிருக்கிறார்.

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இதுவரை  முதலிடம் பெற்ற பெண்களில் நந்தினிக்கு 3 வது இடம். இவருக்கு முன்பே 2014 ஆம் ஆண்டில் ஆந்திராவில் ஐரா சிங்காலும், 2015 ஆம் ஆண்டில் டினா டப்பியும் முதலிடத்தை வென்றிருக்கிறார்கள். 2014 முதல் இந்த ஆண்டும் தொடர்ந்து  சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பெண்களே முதலிடம் வகிப்பது ஆரோக்கியமான விசயமே!

இந்தியாவைப் பொறுத்தவரை சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராக நினைப்பவர்கள் குறைந்த பட்சம் இளநிலைப் பட்டதாரியாக இருக்க வேண்டும். தாய்மொழியிலும் தேர்வெழுதி வெற்றி பெறலாம். 

Image courtsy: google

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com