என் அப்பாவின் கொலைக்கான நீதியைப் பெறவே நான் ஐஏஎஸ் அதிகாரி ஆனேன்: கிஞ்சல் சிங்!

திரைப்  படங்களில்  மட்டும்தான்   அப்பாவைக்  கொலை  செய்தவனை   கொல்லப்பட்டவரின்  மகனோ  மகளோ   வளர்ந்து  போலீஸாகி  தண்டிப்பது சாத்தியம்  என்று நினைத்தால்  அது தவறு.  சில சமயம் நிஜத்திலும்  அப்படி நடக்கும
என் அப்பாவின் கொலைக்கான நீதியைப் பெறவே நான் ஐஏஎஸ் அதிகாரி ஆனேன்: கிஞ்சல் சிங்!

திரைப்  படங்களில்  மட்டும்தான்   அப்பாவைக்  கொலை  செய்தவனை   கொல்லப்பட்டவரின்  மகனோ  மகளோ   வளர்ந்து  போலீஸாகி  தண்டிப்பது சாத்தியம்  என்று நினைத்தால்  அது தவறு.  சில சமயம் நிஜத்திலும்  அப்படி நடக்கும் என்று  உறுதி செய்திருக்கிறார்  ஐஏஎஸ்  பெண்  அதிகாரி  கிஞ்சல் சிங்.   அதற்காக துப்பறியவில்லை... திட்டங்கள் போடவில்லை... முக்கியமாக   சண்டை போடவில்லை.  சட்டம் ஒன்றை நம்பி   நீதி என்னும் தன் இலக்கை அடைந்திருக்கிறார். 

"முப்பத்தைந்து  ஆண்டுகளுக்கு முன்  உத்தரபிரதேசத்தில்  ஒரு போலி   என்கவுண்டர்  நடந்தது.  கோண்டா என்ற பகுதியில் நடந்த  அந்த நிகழ்வில் பதின்மூன்று  பேர்கள் கொல்லப்பட்டனர். அதில் துணை போலீஸ்  மேலாளர்  (டிஎஸ்பி) கே.பி.சிங்கும் ஒருவர்.   அவர் கொல்லப்படுவதற்கு  காரணமாக இருந்தவர்களைக்  கண்டுபிடித்து தண்டனை  வாங்கிக் கொடுத்து, தனது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நீதி மன்றத்திலிருந்து நீதியைப்  பெற்றுத் தந்திருக்கிறார் கிஞ்சல். 

"போலீஸ் அதிகாரி சரோஜ் மீது பல புகார்கள். இது அப்பாவுக்குத் தெரிய வர, அப்பா உயிருடன் இருந்தால்  அவருக்கும்,  அவர் வேலைக்கும்  ஆபத்து என்று உணர்ந்த  சரோஜ், அப்பாவை  யாருக்கும்  சந்தேகம் வராமல்  தீர்த்துக் கட்டத் திட்டம் போட்டார்.   அந்த சமயத்தில் போலீசால் தேடப்பட்டுக் கொண்டிருந்த மிக முக்கிய குற்றவாளிகள்  இருவர்   மாதவ்பூர்  பக்கம்  பதுங்கியிருப்பதாகச் சொல்லி அப்பாவையும்,  தனக்குப் பழக்கமான காவலர்களையும் அழைத்துச் சென்றார்.   குற்றவாளிகள் ஒளிந்து  இருப்பதாகச் சொல்லப்பட்ட  வீட்டின் கதவை அப்பா தட்ட...  யாரும்  திறக்காததால் "என்ன  சரோஜ்  யாரும் கதவைத் திறக்கலையே'' என்று சொல்லியவாறு   பின்னால் நின்று கொண்டிருந்த சரோஜ் பக்கம் அப்பா திரும்ப... சற்றும் எதிர்பாராத விதத்தில் சரோஜ்  அப்பாவின் நெஞ்சில்  தோட்டாக்களைப் படபடவென்று பதித்தார்.

அக்கம்பக்கத்தில்  வசித்து வந்த  பன்னிரண்டு பேரையும்  சுட்டுக் தள்ளினார்கள்.  குற்றவாளிகளைப்  பிடிக்க முயற்சித்த போது நடந்த துப்பாக்கி சண்டையில் அப்பாவும்,  பன்னிரண்டு  குற்றவாளிகளும்  கொல்லப்பட்டனர் என்று  ஜோடனை செய்து  காவல்துறையை  சரோஜ்  நம்ப வைத்தார்.  அப்பா,  அம்மா விபாவிடம் சக அதிகாரி சரோஜ் பற்றி கூறியிருந்திருக்கிறார். அதனால், அப்பா குற்றவாளிகளால்  கொல்லப்படவில்லை.  போலீசால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று அம்மா நம்பினார்.  

என் சம வயதினர்,  பகலில் பள்ளிக்குச் சென்று மாலை வேளைகளில்  விளையாடிக் கொண்டிருக்க... அம்மாவுடன் நானும்,  என்  தங்கையும்  நீதி மன்றங்களின் படிகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தோம். அதற்காக  உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லியில்  இருக்கும்  உச்ச நீதிமன்றம் வரவேண்டி வந்தது.  அம்மா, அப்பாவின்  கொலைக்குக்  காரணமான  குற்றவாளிகள்  தண்டனை  பெற்றே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தில் தீவிரமாக  இருந்தார்.   வாரணாசி கருவூலத்தில்  பணி புரிந்து கொண்டு  என்னையும்  தங்கையையும் படிக்க வைத்தார்.  வழக்கையும்   நடத்தினார்.  நீதிமன்றத்திற்கு சென்று வருவதால் அலைச்சல், கவலை, துக்கம்.  அது புற்று நோயாக மாறியது. விதி  இப்படி விளையாடும் என்று  கனவிலும் நினைக்கவில்லை.

இதற்கிடையில், நான் டெல்லி  லேடி ஸ்ரீராம் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். தங்கை ப்ரஞ்சலையும் என்னுடன் அழைத்துக் கொண்டேன். "நாங்கள் இருவரும் எப்படியாவது ஐஏஎஸ்  தேர்வு எழுதி பாஸôகி,  அப்பாவைக் கொன்ற குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டும்'' என்று அம்மா  அடிக்கடி சொல்வார்.  அம்மாவை  2004-இல்  புற்று நோய் பலி வாங்கியது. அப்பாவின்  கனவும்  நாங்கள் ஐஏஎஸ்  அதிகாரிகளாக வேண்டும்  என்பதுதான். இது அம்மா சொல்லி  எங்களுக்குத்  தெரிய வந்தது.  அதனால்  அப்பா, அம்மா கனவை  நனவாக்க  மிக கவனத்துடன் படித்தோம்.

அப்பா  நேர்மையான அதிகாரியாக இருந்தார்.  அதனால்  அம்மா  நீதிக்காகப் போராடினார்.   தைரியமான  பெண்மணியாக  எங்களை வளர்த்து ஆளாக்கினார்.  நானும்   தங்கையும்  2007-இல் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி  பெற்றோம். நான்  25-ஆவது இடத்திலும்,  தங்கை ப்ரஞ்சல் 252-ஆவது இடத்திலும் வெற்றி  பெற்றோம். 

நாங்கள்  நீதி மன்றத்தில் தொடர்ந்து வழக்கை நடத்தினோம்.  ஐஏஎஸ் வெற்றி   எங்களின் வெற்றிகளின்  முதல் படியாக அமைந்தது. இறுதியில் முப்பத்தோரு ஆண்டுகளுக்குப் பின்  நீதி கிடைத்தது.  2013-இல்  லக்னோ சிபிஐ சிறப்பு  நீதிமன்றத்தில்,  தந்தையின் கொலையில்  தொடர்புடைய  சரோஜ்  உள்ளிட்ட பதினெட்டு  குற்றவாளிகளுக்கும் தண்டனை  வழங்கப் பட்டது.

அப்பா இறந்தபோது எனக்கு  இரண்டரை வயது தானாம்.  அம்மா சொல்வார். அப்பா குறித்த  நினைவுகள் எனக்கு இல்லை.  ஆனால் அப்பா பற்றி  தினமும் அம்மா  எங்களிடம் சொல்வார்.  "அப்பாவுக்கும், நம் குடும்பத்திற்கும் நீதி கிடைக்க   வேண்டும்''  என்று எப்போதும்  சொல்லிக் கொண்டிருப்பார். அதற்காக  அம்மா  போராடி வந்தார்.  அவரது வீர உணர்வை  எங்களுக்குத் தந்துவிட்டு  2004-இல்   இறந்தார்.  அம்மா  உயிருடன் இருந்திருந்தால்   ரொம்பவும்  சந்தோஷப்பட்டிருப்பார். நிச்சயம்  அப்பா அம்மாவின்  ஆன்மாக்கள் சாந்தி அடைந்திருக்கும்'' என்கிறார்  கிஞ்சல்.
- அங்கவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com